November 22, 2024

அரசியல் கைதிகளை பிணையில் விடுவிக்க வலியுறுத்து!

கொரோனா அச்சம் காரணமாக சிறு குற்றக் கைதிகள் விடுவிக்கப்பட்டுவரும் நிலையில் பல்வேறு பாதிப்புக்களுக்கு உள்ளான அரசியல் கைதிகளையும் விடுதலைசெய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்புக்களும் இலங்கை ஜனாதிபதியிடம் கோரியுள்ளன.
இது தொடர்பில் சிவில் அமைப்புக்கள் மற்றும் ஜநா உதவி அமைப்புக்கள என பல தரப்புக்களும் ஜனாதிபதிக்கு கடிதங்களை அனுப்பியுள்ளன.
பல அரசியல் கைதிகளும் வழக்குகளை எதிர்கொண்டோ அல்லது தண்டனை பெற்றவர்களாகவோ உள்ளதால் அவர்களை பிணையில் செல்ல வீடு செல்ல அனுமதிப்பது தடையாக அமையாது எனவும் அவை சுட்டிக்காட்டியுள்ளன.
இதனிடையே கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனும் இக்கோரிக்கையினை இலங்கை ஜனாதிபதியிடம் விடுத்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளகடிதத்தில், ‚நாட்டில் ஏற்பட்ட யுத்தத்தின் போது காயங்களை உடலில் சுமந்தவாறு தற்போது பல அரசியல் கைதிகள் சிறையில் உள்ளனர். அத்துடன் தீர்ப்பு வழங்கப்பட்ட அரசியல் கைதிகளும் உள்ளனர்.
இவர்கள் தற்போது மருத்துவ வசதிகள் இல்லாமல் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். நாட்டில் கொரோனா அச்சம் காரணமாக சிறைச்சாலையில் உள்ள கைதிகள் பிணையில் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அரசியல் கைதிகளையும் முன்னுரிமை அடிப்படையில் அரசாங்கம் விடுதலைசெய்ய துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்‘ என கடிதத்தில் கோரியுள்ளார்.