November 21, 2024

வெளியேற படையினரின் பாஸ்:சிங்கள யாத்திரீகர்கள் வீட்டிற்கு?

யாழ்.குடாநாடு உள்ளிட்ட வடபுலத்தை முற்றாக இராணுவ மயப்படுத்தும்
நடவடிக்கைகள் முனைப்படைந்துள்ளன.கொரோனோ தொற்றை தடுப்பதென்ற பேரில் முப்படைகளும் களமிறங்கியிருப்பதுடன் தற்போது குடாநாட்டிற்கு வெளியே செல்வதற்கான பாஸ் அனுமதியை இராணுவ தலைமையகமே வழங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டிற்கு முன்னதாக படையினரது பாஸ் அனுமதியை பெற்றே குடாநாட்டிலிருந்து வெளியே செல்வதான சூழல் இதுவென சிவில் தரப்புக்கள் கண்டனம் வெளியிட்டுள்ளன.
இதனிடையே கிளிநொச்சி, இரணைமடு விமானப்படை முகாமில் தனிமைப்படுத்தலுக்காக தங்கவைக்கப்பட்டிருந்த 172 சிங்கள யாத்திரீகர்கள் இன்று வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனனர்.
கடந்த 21ஆம் திகதி இந்தியாவிற்கு சுற்றுலா சென்று நாடு திரும்பியவர்களே இவ்வாறு இரணைமடு விமானப்படை முகாமில் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டனர்.
அவர்கள் குறித்த முகாமிற்கு அழைத்து வரப்பட்டு 14 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இன்று பரிசோதனைகள் இடம்பெற்றதையடுத்து விசேட பாதுகாப்பு மற்றும் வாகன வசதிகளுடன் அவ்வந்த பிரதேசங்களுக்கு இன்று (சனிக்கிழமை) அனுப்பிவைக்கப்பட்டனர்.
குறித்த அனுப்பிவைக்கும் நிகழ்வு இன்று காலை 8 மணியளவில் இரணைமடு விமானப்படை முகாமில் இடம்பெற்றதுடன் குறித்த அனைவரும் இந்தியாவில் கௌதம புத்தர் பிறந்த புத்தகாயவினைப் பார்வையிட்டு வழிபடுவதற்காக சுற்றுலாப் பயணிகளாக சென்றிருந்தனர்.