November 23, 2024

விமானப்படையின் 73ஆவது ஆண்டு நிறைவு விழா யாழில்

இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டு பூர்த்தியை யாழ்ப்பாணத்தில் கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம், இலங்கை விமானப்படையின் படைத்தளபதி ஏயார் மார்சல் உதேனி ராஜபக்ஸ தெளிவுப்படுத்தினார்.

யாழ்ப்பாணத்திலுள்ள வட மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில், இலங்கை விமானப்படையின் படைத்தளபதி உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் ஆளுநரை இன்றைய தினம் புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போது ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், ஆளுநரின் இணைப்புச் செயலாளர் நிரான் மல்லவராச்சி, வடக்கு மாகாண கல்விச் செயலாளர் பற்றிக் நிரஞ்சன், தொல்பொருளியல் திணைக்களத்தின் யாழ்,கிளிநொச்சி மாவட்டங்களுக்கான பிராந்திய அலுவலகத்தின் அதிகாரிகள், இலங்கை விமானப்படையின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டனர்.

இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டு பூர்த்தியை யாழ்ப்பாணத்தில் கொண்டாடுவதற்குரிய திட்டங்கள், அதற்கு தேவையான வளப்பகிர்வு, இலங்கை விமானப்படையினால் ஏற்பாடு செய்யப்படும் போட்டிகள், இசைநிகழ்ச்சி உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அந்தவகையில், எதிர்வரும் 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் 02ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள விமானப்படையின் 73 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு யாழ் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்திற்காக எரிவாயு விசையாழி விமான இயந்திரங்களை வழங்கவுள்ளதாகவும், பல்கலைக்கழக மாணவர்களுக்கான கற்றல் உதவிகளை பெற்றுக்கொடுக்க உள்ளதாகவும் விமானப்படையின் படைத்தளபதி ஏயார் மார்சல் உதேனி ராஜபக்ஸ தெரிவித்தார்.

அத்துடன் யாழ் மாவட்டத்திலுள்ள 73 பாடசாலைகளை புனரமைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

மேலும், 73,000 தமிழ் மற்றும் ஆங்கில மொழி புத்தகங்களை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக விமானப்படையின் படைத்தளபதி, ஆளுநரிடம் தெரிவித்தார்.

இதேவேளை, மருத்துவ முகாம், பற்சிகிச்சை முகாம், கண் சிகிச்சை முகாம், இலவச கண்ணாடிகளை வழங்குதல், இரத்ததான முகாம் நடத்துதல், 73 ஆயிரம் மரக்கன்றுகளை பகிர்ந்தளித்தல் உள்ளிட்ட செயற்பாடுகளை முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் விமானப்படையின் படைத்தளபதி ஏயார் மார்சல் உதேனி ராஜபக்ஸ கூறினார்.

அத்துடன், சைக்கிள் ஓட்டப்போட்டி, கல்விக் கண்காட்சி, மாலை நேர இசைநிகழ்ச்சி என்பவற்றை நடாத்தவும் எதிர்பார்ப்பதாக விமானப்படையின் படைத்தளபதி ஆளுநரிடம் தெரிவித்தார்.விடயங்களை கேட்டறிந்த வடக்கு மாகாண ஆளுநர், இன நல்லிணக்கத்திற்கும். ஒற்றுமைக்கும் இந்த செயற்பாடுகள் வழிவகுக்கும் என கூறினார். 

பாடசாலைகளின் புனரமைப்பின் போது கழிவறை மற்றும் குடிநீர் வசதி தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் ஆளுநர் தெரிவித்தார். பல்கலைக்கழக மாணவர்களுக்கான தொழிற்துறைசார் பயிற்சிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் குறிப்பிட்டார்.

அத்துடன் முப்படைகளின் செயற்பாடுகள், படைத்தளங்கள் குறித்து கல்வி சுற்றுலாக்கள் ஊடாக மாணவர்களை தெளிவுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டு பூர்த்தியை இம்முறை வடக்கு மாகாணத்தில் கொண்டாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டமை மகிழ்ச்சியளிப்பதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert