Oktober 16, 2024

தமிழ்த் தேசிய ஒற்றுமையை ஒன்றுபட்டு நிலைநாட்டுவதற்கான இறுதிச் சந்தர்ப்பம் நவம்பர் 14! பனங்காட்டான்


தெற்கில் ‚தோழர்‘ ஜனாதிபதியின் ஐக்கிய மக்கள் சக்தி பொதுத்தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையைத் தாண்டி மூன்றிலிரண்டு பெறுமென எதிர்பார்க்கப்படும் இவ்வேளையில், தமிழ்த் தேசியம் என்று கூறிக்கொண்டு கதிரைக்குப்  போட்டியிடுபவர்கள் தங்களுக்குள் பிளவுபட்டு நிற்பார்களாயின், இருபத்தியிரண்டிலிருந்து பத்துக்கு இறங்கிய எண்ணிக்கை மேலும் குறையும் அபாயம் உண்டு. 

ஒரு பெருந்திருவிழா முடிந்து அதன் சலசலப்பு நிறைவடைவதற்குள் அடுத்த மகோற்சவத்துக்கான கொடியேற்றம் ஆரம்பமாகிவிட்டது. உற்சவகாரர்களின் போட்டியும் அடிபாடும் பகிரங்கமாகக் காணப்படுகிறது. 

ஊழல்களைக் களையும் புதிய ஆட்சி என்ற மகுட வாசகத்துடன் புதிய ஜனாதிபதியாக தோழர் அநுர குமார திஸ்ஸநாயக்க அமைதித் தோற்றத்துடன் தமது நிகழ்ச்சி நிரலை படிப்படியாக நிறைவேற்ற ஆரம்பித்துள்ளார். 

தனது மகன் சிறுவனாகவிருக்கும்போது குழந்தைப் பிக்குவாக அவனை அனுப்புமாறு ஒரு பௌத்த பிக்கு கேட்ட வேளையில் அதனைத் தான் மறுத்ததாகவும், பின்னர் ஒரு சோதிடர் தனது மகனின் சாதகத்தைப் பார்த்துவிட்டு ஷஇவன் ஒரு நாள் அரசாள்வான்| என்று கூறியதாகவும், அவ்வாறே அவன் வந்துள்ளதாகவும் அநுர குமாரவின் தாயாரான 86 வயது ஷீலாவதி ஒரு செவ்வியில் தெரிவித்த விடயம் இப்போது வைரலாகியுள்ளது. 

அந்தச் சோதிடன் சொன்னதுபோல அரசாளும் பதவி கிடைத்திருப்பினும் கௌரவ, மாண்புமிகு, மேன்மை தங்கிய என்று அழைக்காமல் தம்மை ‚தோழர் ஜனாதிபதி‘ என அழைக்குமாறு மார்க்ஸிச வழிவந்த அநுர குமார கூறியிருப்பதாக அவரது தோழர்கள் ஊடகச் செவ்விகளில் தெரிவித்து வருகின்றனர். 

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதும் இவர் கூறிய கூற்று (பொன்மொழி), ‚எங்களைப் புதைத்துவிட்டதாக அவர்கள் எண்ணினார்கள். ஆனால், நாங்கள் விதைகள் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை“ என்பதாகும். ‚விதை முளைத்தால் மரம், இல்லையேல் உரம்“ என்ற விடுதலைப் புலிகளின் காலத்து வாசகத்தை இவரது கூற்று ஒத்திருக்கிறது. 

அநுர குமாரவின் தாய் அமைப்பான ஜே.வி.பி. 1971ல் சேகுவேரா புரட்சியை மேற்கொண்டது. இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் உதவியுடன் இலங்கைப் பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்க இதனை முறியடித்ததோடு, ஜே.வி.பி.யின் ஸ்தாபகரான றோகண விஜேவீர உட்பட பல நூற்றுக்கணக்கானவர்களைக் கைது செய்து குற்றவியல் நீதி ஆணைக்குழு முன் நிறுத்தி ஆயுட்தண்டனை வழங்கியது. அப்போது றோகண விஜேவீர பின்வருமாறு தெரிவித்திருந்தார்: ‚நாங்கள் கொல்லப்படலாம். ஆனால், எங்கள் குரல்கள் ஒருபோதும் சாகாது“ (We may be killed. But our voices will never die) என்பதன் நவயுக வடிவமாக அநுர குமாரவின் வாசகம் அமைந்துள்ளது. 

தேர்தல் நடைபெற்றபோது இவர்களின் கட்சியின் எம்.பிக்களாக இருந்த மூவரும் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர் பதவிகளைப் பெற்று நாற்பத்தைந்துக்கும் அதிகமான அமைச்சுகளைப் பங்கிட்டுள்ளனர். முன்னைய ஆட்சியாளர்களிடமிருந்து மீட்கப்பட்ட அரசுக்குச் சொந்தமான வாகனங்களிண் அணிவகுப்பை பார்த்த மக்கள் நெடுமூச்சு விடுகின்றனர். 

படைத்துறைகளின் மூத்த அதிகாரிகள் சிலர் முக்கிய கதிரைகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். முன்னாள் வான்படைத் தளபதி சம்பத் துஷ்யகொத்தா பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும், முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனிவிரத்தின பொலிஸ்துறை சார்ந்த பொதுப்பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும், முன்னாள் கடற்படைத் தளபதி சிறீமேவன் ரணசிங்க துறைமுக அதிகாரசபைத் தலைவராகவும் பதவியேற்றுள்ளனர். பொதுத்தேர்தலுக்குப் பின்னர் இன்னும் எத்தனை படைத்துறை அதிகாரிகளுக்காக கதிரைகள் காத்திருக்கின்றனவோ?

தோழர் ஜனாதிபதியை நேரில் வந்து சந்தித்தார் இந்திய வெளியுறத்துறை அமைச்சர் ஜெய்சங்கர். 13 வருடங்களுக்கு மேலாகப் பேசப்படும் பதின்மூன்றாம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது பற்றியே இம்முறையும் பேசினாராம். 1987ல் இலங்கை-இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது ஜே.வி.பி.யினர் சன்னதம் கொண்டு ஆடிய ஆட்டம் ஜெய்சங்கருக்கு நினைவிருக்க வேண்டும். வடக்கு-கிழக்கு இணைப்பையே பிரித்த ஜே.வி.பி.யினர் புதிய அரசியலமைப்பில் மாகாண சபை முறைமையை இல்லாமற் செய்யப்போவதாக பேசப்படுகையில் 13ம் திருத்தம் எங்கே இருக்கப் போகிறது?

நித்தம் நித்தம் கொழும்பிலுள்ள ராஜதந்திரிகள் தோழர் ஜனாதிபதியை சந்தித்து வருகின்றனர். ஏழு ராஜதந்திரிகள் ஒரே நாளில் தனித்தனியாகச் சந்தித்து சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. அநுரவின் வெற்றியை பூமி அதிர்ச்சிக்கு நிகரானது என்று விதந்துள்ள நோர்வேயின் சமாதானத் தூதுவர்(?) எரிக் சொல்கெய்ம், உலக நாடுகள் தோழர் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க வேண்டுமென்று வேண்டியுள்ளார். 

இவ்வாறான விசித்திர நீரோட்டத்துக்குள் பொதுத்தேர்தலில் நீந்தி எழும்ப இன்னமும் ஐந்து வாரங்களே உள்ளன. கடந்த மாத ஜனாதிபதித் தேர்தலில் மொத்தம் 160 தொகுதிகளில் 106ல் வெற்றி பெற்ற அநுர குமார அணிக்கு  பொதுத்தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை (113) நிச்சயம் என்று தோழர் கூட்டம் சொல்கிறது. மூன்றிலிரண்டு பெரும்பான்மையை நோக்கி (151) தாங்கள் நடைபயில்வதாகவும், இதற்கு ஏதுவாக இளையோர் மற்றும் பெண்களுக்கு அபேட்சகர் தெரிவில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும் சொல்கிறார்கள். 

இந்த எழுச்சிக்கு முகம் கொடுக்க முடியுமா என்ற அச்சத்தில் ரணில் விக்கிரமசிங்க, றுவான் விஜேவர்த்தன, பந்துல குணவர்த்தன உட்பட பலர் தேர்தலில் பங்குபற்றுவதைத் தவிர்க்கின்றனர். தமிழர் தரப்பிலும் சி.வி.விக்னேஸ்வரன், சீ.வீ.சிவஞானம், மாவை சேனாதிராஜா, விநோநோகராதலிங்கம் உட்பட வேறும் சிலர் அரசியலில் ஓய்வெடுக்கப் போவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒதுக்கப்படுவதற்கு முன்னர் ஒதுங்கி விடுவது கௌரவம் என நினைப்பவர்கள் தாமாக விலகிச் சென்று இளையோருக்கு வழி விடுவது காலத்தின் தேவை. 

தமிழர் தாயகத்தில் யாழ்ப்பாண மாவட்டமும், கிழக்கில் திருமலை, அம்பாறை மாவட்டங்களும் சோதனைக் களத்தில் நிற்கின்றன. திருமலையில் கடந்த தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட நால்வரில் மூன்றாவது இடத்தில் அன்றைய தமிழரசுத் தலைவர் இரா.சம்பந்தன் வெற்றி பெற்றார். சிறு எண்ணிக்கையால் அருந்தப்பில் இவர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

அம்பாறை மாவட்டத்தில் தமிழர் எவரும் வெற்றி பெறாததால் தேசியப் பட்டியலூடாக கலையரசன் நியமனமானார். அடுத்த மாத பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசியம் என்ற குடைக்குள் சுவாசம் செய்யும் அனைத்துத் தமிழ் கட்சிகளும் இணைந்து ஒரு பெதுவேட்பாளரை நியமித்தால் மட்டுமே ஒருவாறு இவ்விரு தொகுதிகளிலும் இருப்பைக் காப்பாற்ற முடியும். அந்த ஒற்றுமையைக் காப்பாற்ற முடியும். சின்னத்துக்கான போட்டியால் ஆசனத்தை இழக்கக் கூடாது. 

யாழ்ப்பாண மாவட்டம் சுருக்குக் கயிற்றில் தொங்குவதுபோல் காட்சி தருகிறது. மக்கள் தொகை குறைந்து போனதால் ஏழு பிரதிநிதிகள் எண்ணிக்கை ஆறாகக் குறைந்துள்ளது. கடந்த பொதுத்தேர்தலில் இங்கு தமிழரசுக்கு இரண்டும், தமிழ் மக்கள் கூட்டணிக்கு ஓன்றும், தமிழ் காங்கிரசுக்கு ஒன்றும், புளொட்டுக்கு ஒன்றும், ஈ.பி.டி.பி.க்கு ஒன்றும், சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஒன்றுமாக ஏழு ஆசனங்கள் கிடைத்தன. இவற்றுள் ஐந்து மட்டுமே தமிழ்த் தேசிய கொள்கைக்கு உட்பட்டவை. 

அடுத்த மாத தேர்தலில் தமிழரசுக் கட்சிக்குள் பயங்கரமான கழுத்தறுப்பு இடம்பெறுகிறது. வயோதிபத் தலைமையால் எதுவும் செய்ய முடியாத நிலையில், சகல அதிகாரங்களையும் தனது பொக்கற்றுக்குள் எடுத்துக் கொண்ட சுமந்திரன் அந்த வீட்டை சிதைக்கும் அரும்பணியில் ஈடுபட்டிருக்கிறார். இளையோருக்கும் பெண்களுக்கும் முக்கியத்துவம் என்ற பெயரில் தம்முடன் முட்டி மோதுபவர்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபடுகிறார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து கழன்ற ஐந்து கட்சியினரும் ஜனநாயக கூட்டமைப்பு என்ற பெயரில் சங்கு சின்னத்துடன் களம் இறங்குகின்றனர். 

அநுர குமாரவின் அணி யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு தொகுதியை கைப்பற்றும் சாத்தியம் உண்டென தமிழ்த் தேசிய கட்சியினரே நம்புகின்றனர். குமார் பொன்னம்பலத்தின் அண்மைய அபாய எச்சரிக்கை இது சம்பந்தமானது. அநுர குமாரவின் தோழர்கள் தமிழர் தாயகத்தின் மற்றைய மாவட்டங்களிலும் மூன்று ஆசனங்களைப் பெறக்கூடுமென எதிர்வு கூறப்படுகின்றது. 

இவை எல்லாவற்றுக்கும் அப்பால், புதிய நாடாளுமன்றத்தில் தோழர் அநுரவின் ஆட்சிக்குத் தேவையான சகல ஆதரவுகளையும் வழங்க அவர் கேட்காமலேயே சஜித் பிரேமதாச அணி முன்வாக்குறுதி அளித்துள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க தங்களின் பொதுஜன பெரமுன ஆதரவு வழங்குமென நாமல் ராஜபக்ச அட்வான்ஸ் உத்தரவாதம் வழங்கியுள்ளார். இந்தத் தேர்தலிலும் ரணில் தரப்பு மூன்றாம் இடம்தான் என்ற கணிப்பில் அதனை யாரும் கணக்கெடுப்பதாகத் தெரியவில்லை. 

தோழர் ஜனாதிபதி அணிக்கு கிடைத்துவரும் பாரிய ஆதரவு பற்றி நீண்டகால அரசியல் அனுபவ ஊடகர் ஒருவர் பின்வருமாறு தெரிவித்தார்: 

‚2004ம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் விடுதலைப் புலிகளின் ஆதரவால் வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாரிய வெற்றியைப் பெற்றது. அதேபோன்று  அடுத்த மாத பொதுத்தேர்தலில் அநுர குமாரவின் ஐக்கிய மக்கள் சக்தி அதிக ஆசனங்களைப் பெறும். இதற்கான அடிப்படைக் காரணம் ஜே.வி.பி. மீதான ‚பய-பக்தி“ என்று சுருக்கமாகக் கூறினார் அந்த ஊடகர். 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert