தமிழரசிலும் 20இல் தகிடுதம்?

நேற்றைய 20 திருத்த சட்ட வாக்களிப்பின் போது கூட்டமைப்பின் சாணக்கியன் அரச ஆதரவு  முடிவு எடுக்க இருந்ததாக கூறப்படுவது விவாதத்திற்குள்ளாகியுள்ளது.

முன்னதாக சாணக்கியனின் ஆதரவும் கோத்தாவால் கோரப்பட்டிருந்த போதும் முஸ்லீம்களது ஆதரவு இறுதி நேரத்தில் கிடைக்கப்பெற்றதால் இவரது ஆதரவு அரசாங்கத்துக்கு தேவைப்படவில்லையென தெரியவந்துள்ளது.

குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரி வாக்களிக்கமாட்டேனென்று பகிரங்கமாக அறிவித்ததால் அவரது உறவினரான ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம ஊடாக சாணக்கியனுடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுள்ளது . ஆனால் ஆறு முஸ்லீம் எம்பிகள் திடீரென்று ஆதரவு தெரிவித்தமையால் சாணக்கியனின் ஆதரவு தேவைப்படவில்லையென சொல்லப்படுகின்றது.

ஆயினும் நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் நடந்த அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலமாக்கலை எதிர்த்து நான் உரை ஆற்றி இருந்த அதேவேளை அதன் பின்னரான சந்திப்பு ஒன்று ஜனாதிபதியுடன் இடம்பெற்றிருந்தது. இதன் போது நான் வட கிழக்கில் மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் எல்லைப்புற காணிகள் பகிர்ந்தளிக்கப்படுவது தொடர்பாகவும் எமது “மயிலத்தமடு“, மாதவனை பிரசேங்களில் உள்ள மேய்ச்சல் நிலம் கிழக்கு மாகாண ஆளுனர் வெளிடப்படவுள்ளதாக கூறும் வர்த்தமானி குறித்து எழுந்துள்ள பிரச்சனை சம்பந்தமாகவும் பேசியதாக சாணக்கியன் விளக்கமளித்துள்ளார்.

சந்திப்பின் போதான கலந்துரையாடலில் தன்னுடைய சிறப்புரிமையை மீறும் வகையில் அமைந்திருந்த கிழக்கு ஆளுநருடனான சந்திப்பு பற்றியும் மற்றும் நாட்டின் சமகால அரசியல் பற்றியும் பல விடயங்கள் சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் விளக்கமளிக்க்பபட்டுள்ளது.

மொட்டு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களே கோத்தாவை கண்டு தப்பியோடுகையில் சாணக்கியனின் விளக்கம் சிரிப்பை தந்துள்ளது.