ஊடகப்பேச்சாளர்: புளொட் ஆதரவாளர்கள் சண்டை?

கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியை யார் வைத்திருக்கிறார்கள் என்பதற்கப்பால் தமது தலைவர்கள் வைத்திருப்பதனை வைத்து அலுவல் பார்க்க பல தொண்டர்களும் முனைப்பாக இருக்கின்றனர்.

கூட்டமைப்பின் பேச்சாளர் செல்வம் என ஒருபுறம் கூற இல்லை சித்தர்தான் என இன்னொரு புறம் அவரது ஆதரவாளர்கள் கச்சை கட்டி நிற்கின்றனர்.

ஆனாலும் இந்த நிமிடம் வரை பேச்சாளர் பதவியை விட்டுக்கொடுக்க சுமந்திரனோ அவரது ஆதரவாளர்களோ தயாராக இல்லை.

இந்நிலையில்  சம்பந்தன் அந்த பக்கமும் இந்த பக்கமும் என தனது பதவியை தக்க வைக்க போராட கூட்டமைப்பு பேச்சாளர் பதவிக்காக குத்தி முறிய தொண்டர்கள் களமிறங்கியுள்ளனர்.

இதனிடையே வடக்கு – கிழக்கில் அபிவிருத்தியின் ஊடாக மக்களை தமது பக்கம் திருப்பி விடலாம் என அரசாங்கம் கருதுகின்றதென செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த இந்த அரசாங்கத்தின் நாடாளுமன்ற ஆரம்ப உரையில் இந்த நாட்டின் சிறுபான்மை இனங்களான தமிழ், முஸ்லிம், மலையக தமிழர் தொடர்பில் எந்தவொரு விடயத்தையும் ஜனாதிபதி தெரிவிக்கவில்லை. இனப்பிரச்சனைக்கான தீர்வு திட்டம் தொடர்பிலும் எதுவும் கூறவில்லை. அபிவிருத்தி என்பது கட்டாயம் செய்யப்பட வேண்டிய ஒரு விடயம். ஜனாதிபதியின் முன்னைய உரையிலும் பெரும்பான்மை மக்களின் ஆதரவுடன் வந்ததாகவும், அவர்களுக்கு முன்னுரிமையளித்தும் அவரது உரை அமைந்திருந்தது. தற்போதும் புத்த மதத்திற்கு முன்னுரிமையளித்து, அரசியல் சாசனத்தில் குறிப்பிட்டதை விட மேலும் முன்னுரிமை படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் அமைந்துள்ளது.

தற்போதைய அமைச்சரவையில் இந்து கலாசாரம், கிறிஸ்தவ கலாசாரம் ஆகிய அமைச்சுக்கள் இல்லை. கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் இருந்த அரச கரும மொழி அமைச்சும் இல்லாத தன்மை காணப்படுகின்றது. இதைவிட ஒவ்வொரு திணைக்களங்களுக்கும் இராணுவத்தினர் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதைவிட அபாயகரமான விடயம். கச்சேரி உள்ளிட்ட அரச திணைக்களங்கள் ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தது மிகவும் அபாயகரமானது. அவை அமைச்சுக்களின் கீழ் இருக்கும். எனவே எதிர் வரும் காலங்களில் அனைத்து திணைக்களங்களிலும் இராணுவத்தினுடைய செயற்பாடுகள் அதிகரிக்கும் என்பதை உணரக் கூடியதாகவுள்ளது.

அத்துடன் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழர் என வாழ்கின்ற நிலையில் ஒரு நாடு ஒரு சட்டம் என்பது எவ்வாறு சாத்தியப்படும் என்பது தெரியவில்லை. முஸ்லிம் சமூகத்திற்கு என தனியான ஒரு சட்டம் இருக்கின்றது. ஒரே சட்டத்தை மதங்களின் மீது பயன்படுத்துவதன் மூலம் அந்த மக்களின் தனித்தன்மை பாதிக்கப்பட்டு மதங்களின் மேல் கைவைக்கும் நிலைமையும் ஏற்படும். எனவே பெரும்பான்மை மக்களை தவிர ஏனைய தேசிய இனங்களான தமிழ், முஸ்லிம், மலையக தமிழர் ஆகியோரின் எதிர்காலம் கேள்விக்குறியான விடயமாகவுள்ளது. எந்தவொரு உரிமையையும் வழங்காது அபிவிருத்தியை மட்டும் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளார்கள் என உணர முடிகிறது. எமது மக்கள் அபிவிருத்தியையும் விரும்புகிறார்கள். அதேபோல் இனப்பிரச்சனைக்கான தீர்வையும் விரும்புகிறார்கள். ஆகவே அபிவிருத்தி ஊடாக தமிழ் மக்களது பிரச்சனைகளை தீர்காது விட்டு விடலாம் என்பதில் அரசாங்கம் பகல் கனவு காணக் கூடாது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் பிரச்சாரங்களில் அபிவிருத்தி தெர்டர்பாகவும் தெரிவித்துள்ளோம். அபிவிருத்தி என்பது எந்த வழியில் வந்தாலும் அதனை ஆதரிப்போம். அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அபிவிருத்தி என்ற போர்வையில் இராணுவத்தின் பிரச்சனம், தமிழர்களின் பூர்வீகத்திற்குள் சிங்கள மக்களின் பிரசன்னம் வருகின்ற போது அதனை நாங்கள் தட்டிக் கேட்போம்.