Juli 17, 2024

தமிழர் தேசமும் தேசியமும் நேர்த்திசைக்கு திரும்புகிறதா? பனங்காட்டான்

ஒட்டகம் தனது தலையையே முதலில் வீட்டுக்குள் நுழைக்கும். பின்னர் படிப்படியாக முழு உடம்பையும் உட்புகுத்தும். அதன்பின் உள்ளிருந்த அதனைக் கட்டியவர்களை வெளியே தள்ளிவிட்டு வீட்டையும் நிர்மூலமாக்கும். 1989, 1994, 1997ம் ஆண்டுத் தேர்தல்களில் தமது திருமலைத் தொகுதியில் தோல்விகண்ட சம்பந்தன், 2000இல் விடுதலைப் புலிகள் போட்ட பிச்சையால் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினரான அந்தப் பதவியை தக்கவைக்க சேராத கூட்டத்தில் சேர்ந்ததால் நிலைமை என்னாகுமென்பதை இந்த மாதத் தேர்தல் முடிவு புகட்டியுள்ளது. இந்த மாதம் ஐந்தாம் திகதி நடைபெற்ற இலங்கையின் பொதுத்தேர்தல் முடிவுகள் தொடர்பாக முக்கியமாக மூன்று விடயங்கள் பேசப்படுகிறது. சிங்கள தேசம், தமிழ்த் தேசம் (தமிழ்த் தேசியம்) என்றவாறு நாடு இரண்டாகப் பிளவுபட்ட நிலைமையை தேர்தல் முடிவு காட்டி நிற்கிறது என்ற சிந்தனையுடன் இப்பத்தியை எழுதுவது பொருத்தமாகும்.

கோதபாய – மகிந்த சகோதர கூட்டிலான பொதுஜன பெரமுன (இது சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பிரசவம்) எதிர்பார்த்ததிலும் மேலாக தனித்து மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, சிங்கள பௌத்த இராச்சியத்தை நோக்கி மேலெழ ஆரம்பித்துள்ளது.

1972ல் சிறிமாவோ பண்டாரநாயக்க மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடனும், 1977ல் ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆறில் ஐந்து பெரும்பான்மையுடனும் ஆட்சியைக் கைப்பற்றியதற்கு நிகராக பொதுஜன பெரமுனவின் வெற்றியைப் பார்க்க முடிகிறது.

இங்கு காணப்படும் ஒரேயொரு வித்தியாசம் இப்போது பதவியேற்றுள்ள புதிய அரசு முற்று முழுதாக இராணுவ மயப்படுத்தப்பட்டு வருவதாகும்.

சிங்கள மக்களின் முதலாவது கட்சியாக 1946ல் தோற்றம் பெற்று, இரண்டு ஜனாதிபதிகள் உட்பட பல பிரதமர்களை உருவாக்கி யானை இராச்சியம் நடத்திய ஐக்கிய தேசிய கட்சி யாவும் அக்களத்தே விட்டு வெறுமனே பூச்சியத்தில் வந்து நிற்கிறது. கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்ககூட வெற்றிபெற முடியாத பாதாளத் தோல்வி இது.

தனது தந்தையை பிரதமராகவும், ஜனாதிபதியாகவும் அரியாசனமேற்றிய தாய்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியை சஜித் பிரேமதாச அழித்துவிட்டாரென்ற பெருமை பேசப்படுகிறது. சனநாயக சோசலிச குடியரசின் பரிணாம வளர்ச்சி இது.

தமிழர் தாயகத்தைப் பொறுத்தளவில் தமிழரசுக் கட்சியின் வீடு சின்னத்தில் கடந்த இருபது ஆண்டுகளாக (விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு என்ற பெயரால்) வெற்றி நடைபோட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தடம்புரண்ட கொள்கையினாலும், ஏமாற்று அரசியலாலும் கூரை கழன்ற வீடாக காட்சி தருகிறது.

பத்தாண்டுகளுக்கு முன்னர் பின்கதவால் வீட்டுக்குள் தலையைப் புகுத்திய ஒட்டகம் ஒன்று படிப்படியாக தனது முழு உடம்பையும் நுழைத்து உள்ளிருந்த பழசுகளை வெளியே தள்ளியதுடன் வீட்டையே நிர்மூலமாக்க முயற்சித்துக் கொண்டிருப்பதாக அதற்குள் குடியிருப்பவர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

அந்த ஒட்டகம் கூட்டமைப்பின் தலைமைப் பதவிக்குத்தான் ஆசைப்படுகிறது என்று அவர்கள் முன்னர் நினைத்தனர். தந்தை செல்வா போன்ற தியாகசீல சிந்தையர்களின் உதிரத்தால் உருவாக்கப்பட்ட தமிழரசை தம் வசமாக்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அந்த ஒட்டகம் இப்போது முனைகிறது என்பதும் வீட்டுக்குள் இருப்பவர்களின் கருத்தாக வெளிவருகிறது.

கூட்டமைப்பை விடுதலைப் புலிகளின் தலைமை உருவாக்கியபோது அதில் இடம்பெற்ற கஜேந்திரகுமாரின் தமிழ் காங்கிரஸ், சுரேஸ் பிரேமசந்திரனின் ஈ.பி.ஆர்.எல்.எவ். என்பவை இப்போது அதில் இல்லை. ரெலோவின் அரைவாசி (சிறிகாந்தா, சிவாஜிலிங்கம்) கழன்றுவிட்டது.

முள்ளிவாய்க்கால் மௌனிக்கப்பட்ட வேளையில் “போரில் நாங்கள் வென்றுவிட்டோம்” என்று வீரமுழக்கமிட்ட சித்தார்த்தனின் புளொட் கூட்டமைப்பில் பின்னர் இணைக்கப்பட்டது விசித்திரமானது. விடுதலைப் புலிகளை தோற்கடித்த மகிந்த அரசுக்கு தமது நாடாளுமன்ற உரையில் பகிரங்கமாக நன்றி கூறிய சம்பந்தன், கூட்டமைப்பின் ஆயுட்கால தலைவர். ரணில் விக்கிரமசிங்கவினால் கூட்டமைப்புக்குள் உட்புகுத்தப்பட்டதாகக் கூறப்படும் சுமந்திரன் கூட்டமைப்பின் பேச்சாளர்.

இப்போதுள்ள கூட்டமைப்பு விடுதலைப் புலிகளின் தலைமையால் உருவாக்கப்பட்டதல்ல என்று தெரிந்து கொள்வதற்கு ஒருசிலவற்றை மேலே குறிப்பிட நேர்ந்தது. இன்னும் பலவுண்டு.

இங்கு இன்னொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும். தமிழரசுக் கட்சியின் தொண்டரடிப் பொடியனாக ஐம்பதாண்டுகளுக்கு முன்னர் இணைந்து சிறைவாசம், கல்லடி பொல்லடி வாள்வெட்டுகளைக் கண்ட மாவை சேனாதிராஜா தமிழரசின் தலைவரானது இன்னொரு தனிக்கதை.

2013ல் வடமாகாண சபைத் தலைவராக வருவதற்கு விரும்பிய மாவையை ஓரங்கட்டவென சுமந்திரனின் சூழ்ச்சியால் விக்னேஸ்வரன் கொண்டுவரப்பட்டார். இதனால் விரக்தியடைந்த மாவையரை திருப்திப்படுத்த பின்னர் தமிழரசு தலைவர் பதவி வழங்கப்பட்டது. இது ஒரு றப்பர் ஸ்ராம்ப் பதவி என்பதை பாவம் மாவையர் இப்போதுதான் புரிந்து கொண்டுள்ளார்.

தேர்தலில் உட்கட்சிப் போட்டியால் திட்டமிட்டுத் தோற்கடிக்கப்பட்ட மாவையரின் தலைமைப் பதவியைப் பறிப்பதற்கு இப்போது வெட்டவெளியில் வேலை நடைபெறுகிறது. கண்மூடித் துயில்கொள்ளும் வயோதிபர் சம்பந்தனுக்கு சாமரை வீசும் சுமந்திரனே சிறிதரனை இணைத்துக் கொண்டு இந்தக் கைங்கரியத்தில் ஈடுபடுகிறார்.

இதன் மிகுதிப் பகுதியை மற்றொரு தடவை பார்க்கலாம். அதற்கு முன்னர் தமிழர் தாயக தேர்தல் முடிவை மீள்நோக்குவது தேவையாகவுள்ளது.

கொள்கைப் பிடிமானத்துடன் விட்டுக்கொடாத அரசியல் கோட்பாட்டில், தமிழ்த் தேசிய – புலிகள் நீக்க அரசியலுக்கு எதிராக ஒரு தசாப்தமாக தனித்து நின்று போராடி வீழ்த்தப்பட்ட கஜேந்திரகுமாரின் மக்கள் முன்னணிக்கு, இம்முறை மக்கள் அங்கீகாரம் வழங்கி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

வாழ்வாதார – அபிவிருத்தி – சலுகை என்ற அரசியலுக்குள் தள்ளப்பட்ட அல்லது சிக்குப்பட்ட அப்பாவி மக்களுக்கப்பால், உரிமையை வேண்டி நிற்கும் மக்கள் உண்மையை நன்குணர்ந்து அளித்த வாக்குகளே முன்னணிக்கு இரண்டு ஆசனங்களைப் பெற்றுக்கொடுத்தது.

விக்னேஸ்வரனின் கூட்டணியுடன் கஜேந்திரகுமாரின் முன்னணி இணைந்து போட்டியிட்டிருந்தால், அதேசமயம் சைக்கிள் சின்னத்தைவிட்டு பொதுச்சின்னத்தில் போட்டியிட்டிருந்தால் இரண்டுக்கும் அதிகமான ஆசனங்களைப் பெற்றிருக்கலாமென்று சில விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.

இதுபற்றிய மற்றொரு பார்வை முக்கியமானது. அவ்வாறு இவர்கள் இணைந்து போட்டியிட்டிருந்தால் சிலவேளை ஐந்து, ஆறு, ஏழு ஆசனங்கள் கிடைத்திருக்கலாம் (ஆனால் தவறியும் போயிருக்கலாம்).

தேர்தலை அவ்வாறு சந்தித்திருப்பின், கூட்டமைப்பில் சுமந்திரனும் சிறிதரனும் இணைந்து அதன் மற்றைய வேட்பாளர்களை தோற்கடித்ததுபோல இங்கும் சிலர் ரகசிய கூட்டுச் சேர்ந்து கஜேந்திரகுமாரின் முன்னணியினரைப் பின்தள்ள திட்டமிட வாய்ப்பிருந்தது. சுரேஸ் பிரேமசந்திரன் இதனைச் செய்யக்கூடியவர்.

முன்னணி – கூட்டணி இணைப்பால் கிடைக்கும் தேசியப் பட்டியல் இடத்தை கூட்டணித் தலைவர் விக்கி தமக்காக்கியிருப்பார். இதனால் கஜேந்திரகுமாரின் முன்னணி ஏமாற்றப்பட்டிருக்கும். இதற்கும் மேலாக இனி வரப்போகிற மாகாணசபை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் முன்னணி மீது மக்கள் நம்பிக்கையிழந்து வாக்களிக்கத் தவறுவர். முன்னணியின் கொள்கைப் பிடிமானத்தைச் சந்தேகிப்பார்களாயின் அதன் விளைவு இணக்க அரசியலில் லாபம் பெற்ற கூட்டமைப்புக்கு மீண்டும் பிராணவாயு கொடுப்பதாக அமையும்.

அடுத்தது சைக்கிள் சின்னம் சம்பந்தமானது. தமிழ் அரசியல் அரங்கில் முதலில் அறிமுகமான தேர்தல் சின்னம் தமிழ் காங்கிரசின் சைக்கிள்தான். அதில் பயணிக்க ஆரம்பித்தவர்களே பின்னர் பிரிந்து சென்று வீட்டை அமைத்தனர்.

மாமனிதர் குமார் பொன்னம்பலம் தேர்தல்களில் தோல்வியையும் கொள்கையில் வெற்றியையும் கண்ட சின்னம் சைக்கிள். தமிழர்களிடம் நன்கு அறிமுகமான அந்தச் சின்னத்தைவிட்டு இரவல் சின்னத்தில் முன்னணியினர் போட்டியிட வேண்டிய தேவையிருக்கவில்லை. இதனை நன்கறிந்த மக்களே காலத்தின் தேவை கருதி மாற்று அரசியலாக முன்னணியை வெற்றி பெறச் செய்துள்ளனர்.

2004ல் 22 ஆசனங்களிலிருந்த வீடு 2015 தேர்தலில் பதினாறாகி, இவ்வருடத் தேர்தலில் பத்தில் வந்து நிற்கிறது. காலக்கிரமத்தில் இது எத்தனையாகுமென்பது முன்னணியின் ஐந்தாண்டின் செயற்பாட்டில்தான் தங்கியிருக்கிறது.

ஒரு லட்சம் வாக்குகளால் வெற்றி பெறுவேனென்று சிங்கள தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்து, அதில் கால்வாசியை மட்டும் பெற்று ஒருவாறு தெரிவான சுமந்திரன், தேர்தல் முடிவு வந்த சூட்டோடு சூடாக ஒரு அழைப்பு விடுத்தார்.

“வாருங்கள், இணைந்து செயற்படுவோம்” என்ற இந்த அழைப்பு விக்னேஸ்வரனுக்கும் கஜேந்திரகுமாருக்குமானது. தோற்றுப்போன கட்சியின் பேச்சாளர் வெற்றி பெற்ற மாற்றுக்கட்சியினருக்கு அவசரமாக விடுத்த இந்த அழைப்,பு உள்நோக்கம் கொண்டது.

வாருங்கள் என்று தங்களிடம் அழைப்பதைத் தவிர்த்து, நாம் இணைந்து செயற்படுவோம் என்பதாக இருந்திருப்பின் அதில் ஏதோ நன்மை ஏற்படுவதாகப் பார்க்கப்பட்டிருக்கும். வென்றவர்கள் சுடு கண்ட பூனைகள். வீட்டுக்குள் இருந்து வெளியேறியவர்கள். சுமந்திரன் இதனை மறந்துவிட்டார் போலும்.

அதேசமயம் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் அழைப்பு வேறுவிதமானது. பிரிந்து செயற்படுவதால் இலக்கை அடைய முடியாது, வாருங்கள் என ஒருவாயால் அழைத்துக் கொண்டு, பதவிக்கு வந்துள்ள அரசுடன் இணைந்து செயற்பட தயாரென்று மறுவாயால் சொன்னால்…. என்ன விளையாட்டு இது.

இப்படியான செயற்பாடுகளால்தான் 1989, 1994, 1997 தேர்தல்களில் திருமலையில் தாம் தோல்வி கண்டதைக்கூட மறந்துவிட்டார் போலும்.

2000ம் ஆண்டு தமிழ்த் தேசிய தலைவர் வே. பிரபாகரன் போட்ட பிச்சையால் கிடைத்த கூட்டமைப்பின் தலைவர் பதவியே, அதன் பின்னரான ஐந்து தேர்தல்களிலும் தமக்கு வெற்றியைத் தந்தது என்பதை மறந்து மீண்டும் பதவிப் பித்தில் இறங்கியுள்ளார்.

சம்பந்தன் – சுமந்திரன் இணையர்களின் இணக்க அரசியலுக்கு இந்தத் தேர்தல் பாடம் புகட்டியுள்ளது. தாயக தேசிய தன்னாட்சிக் கொள்கையை பற்றிப் பிடித்த முன்னணி மீண்டும் அரங்குக்கு வந்துள்ளது. இதனால் நாடாளுமன்ற அரசியலில் முன்னணியோடு இணைந்து செல்ல வேண்டிய நிலை விக்கியின் கூட்டணிக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழரசின் வளர்ச்சிக்கு தன் வாழ்நாளை அர்ப்பணித்த மாவையை ஒதுக்கிவிட்டு, அதனை சுவீகரிக்க நினைப்பவர்களின் உள்நோக்கு அந்த வீட்டை நிர்மூலமாக்குவதே தவிர புனரமைத்துக் கட்டியெழுப்புவதல்ல.

இதனால்தான் மாற்றுத் தலைமையை தேசப்பற்றுள்ள மக்கள் நேசத்தோடு அரங்கத்துக்குக் கொண்டுவந்துள்ளனர். இவர்களது தேடல் வெற்றியின் தோற்றுவாய் ஏமாற்று அரசியல் செய்யும் சம்பந்தன் – சுமந்திரன் இணையரால் ஏற்பட்டது. இந்த உண்மையை இவர்கள் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.