September 9, 2024

சிறையை குடைந்து தப்பிய கில்லாடிகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (07) அதிகாலை சுவரை குடைந்து தப்பிச்சென்ற ஹெரோயின் கடத்தல் கைதிகள் மூன்று பேர் மீண்டும் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் அண்மையில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மூவரே இவ்வாறு தப்பிச்சென்றிருந்தனர்.

அண்மையில் கைது செய்யப்படும் கைதிகள் அனைவரும் 14 நாட்கள் பிரத்தியேக அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டு கொரோன வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதன் பின்பே சிறை அறைகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையில் வைக்கப்பட்டிருந்த மூன்று சந்தேக நபர்களே சிறைச்சாலை சுவரை குடைந்து இன்று அதிகாலை 12.10 மணியளவில் தப்பிச் சென்றனர்.

இதனையடுத்து விரைவாக செயற்பட  சிறைச்சாலை அதிகாரிகள், பொலிஸார், முப்படையினர் இணைந்து நடத்திய தேடுதலில் இரண்டு கைதிகள் சிறைச்சாலை அருகில் உள்ள மைதானத்தில் ஒளிந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் ஒரு கைதி நீர்கொழும்பு கடோல் கேளே பகுதியில் அவரது வீட்டில் ஒளிந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.