September 9, 2024

கொரோனா தீவிரத்தால் சுய நினைவறுந்த நோயாளிகள்… உயிர் காக்க போராடும் மருத்துவர்கள்

பிரான்சில் கொரோனா தீவிரத்தால் சுய நினைவறுந்த நோயாளிகளை தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் உயிர் காக்க போராடும் காட்சிகள் புகைப்படமாக வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் புரியாமல் பிரித்தானியா உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளிலும் மக்கள் ஊரடங்கு உத்தரவுகளை மீறி வரும் நிலையில் இந்த நடுங்க வைக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

தென்மேற்கு பிரான்சில் உள்ள போர்டியாக்ஸ் பல்கலைக்கழக மருத்துவமனையிலேயே இந்த நடுங்க வைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

கொரோனாவின் தீவிரத்தால் சுய நினைவறுந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள இளம் நோயாளிகளை மருத்துவர்களும் செவிலியர்களும் உயிர் காக்க போராடி வருகின்றனர்.

இதுவரை இந்த மருத்துவமனையில், தீவிர சிகிசையில் இருந்து வந்த இருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.

 

மட்டுமின்றி, இங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவு படுக்கை அறையும் நோயாளிகளால் நிரம்பியுள்ளது.

உலகில் கொரோனா பாதிப்புக்கு அதிகம் இலக்கான நாடுகளில் ஒன்றான பிரான்சில் மருத்துவர்களும் செவிலியர்களும் தங்களைத் தாங்களே பாதிக்கப்படுவதைத் தவிர்க்க முயற்சிக்கின்றனர்.

ஞாயிறு நிலவரப்படி பிரான்சில் 93,000 பேர் கொரோனா பாதிப்புக்கு இலக்காகியுள்ளனர். இதுவரை 8,100 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.

ஆனால் நம்பிக்கை தரும் வகையில், பாதிப்புக்கு உள்ளாகும் நபர்களின் எண்ணிக்கையும் இறப்பு வீதமும் குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தவர்கள் எணிக்கை 357 எனவும், இது முந்தைய நாள் எண்ணிக்கையை விடவும் குறைவு என கூறப்படுகிறது.

இதுவரை பிரான்ஸ் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 5,889 எனவும் சுகாதார மையங்களில் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,189 எனவும் தெரியவந்துள்ளது.