September 9, 2024

கோத்தாக்கு சித்தா எழுதிய கடிதம்!

நாட்டின் இப்போதைய சுகாதார நெருக்கடிச் சூழலில் தமிழ் மக்கள் எதிர் கொண்டிருக்கும் நிலைமை தொடர்பாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்க்ஷவுக்கு யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கடந்த வாரம் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.
குறித்த கடிதம் வருமாறு,
கோவிட்-19, கொரோனா நோய்க்கிருமி பரவலை நாம் எதிர்த்துப் போராடும் மிக முக்கியமான இந்த நேரத்தில், நீங்கள் எமது நாட்டிற்கு அளித்து வரும் பாராட்டுக்குரிய தலைமைக்கு எங்கள் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவிக்கவே இந்த கடிதத்தை எழுதுகின்றேன்.
இந்த நெருக்கடியான நேரத்திலும் எமது நாட்டு மக்களினது வாழ்க்கையில் இயல்புநிலை கண்டிப்பாகப் பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதற்கு நீங்கள் எடுத்துவரும் முயற்சிகள் அசாதாரணமானவை என்றுதான் சொல்ல வேண்டும். இருந்தாலும் – உங்களது அரசாங்கத்தின் அதி உயர் பீடத்தில் உரிய முடிவுகள் உடனுக்குடன் எடுக்கப்பட்டாலும், அரசாங்கத்தின் கீழ் மட்டத்தில் அந்த முடிவுகள் செயற்படுத்தப்படுவதில் வேகமின்மையும் வினைத்திறன் இன்மையுமே தெரிகின்றது என்பதனை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். குறைந்தபட்சம், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் நிலை இதுவரை இதுதான்.
எனவே, இந்த நிலை சாதாரண மக்களை – குறிப்பாக மாதச் சம்பள வேலை செய்யாத, ஆனால் அன்றாட ஊதியத்தில் வாழ்பவர்களைப் பெரிதும் பாதிக்கத் தொடங்கிவிட்டது. தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருப்பதனால், அவர்கள் தினசரி உழைப்புக்குச் செல்லமுடியாத நிலையில் இருக்கின்றார்கள். இந்த நிலையானது – வடக்கு மாகாணத்தின் பின்தங்கிய கிராமப் பகுதிகளில் பட்டினி நிலையை ஏற்படுத்திவிடுமோ என்று நான் அஞ்சுகிறேன். ஒரு வேளை, அவ்வாறு நடக்கத் தொடங்கிவிட்டால், அது நீங்கள் எடுத்துவரும் அனைத்து முயற்சிகளையுமே பயனற்றவையாக ஆக்கிவிடும் என்று நான் கவலைப்படுகிறேன்.
பசில் ராஜபக்க்ஷவின் தலைமையில் நீங்கள் உருவாக்கியுள்ள “ஜனாதிபதி செயலணி,” வருமானம் குறைந்த மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை வீட்டுக்கு வீடு வழங்குவதற்கான ஒரு பொறிமுறையை அறிமுகப்படுத்தியிருக்கின்றது. அதேபோல – உள்ளூர் விவசாயிகளிடமிருந்து உற்பத்திகளை வாங்கி விற்பதன் மூலம் அவர்களது பொருளாதார வாழ்வை மேம்படுத்துவதற்கு ஒரு திட்டத்தையும் உருவாக்கியிருக்கின்றது. ஆனால், அவை எங்கள் பகுதிகளில் முறையாகச் செயல்படுத்தப்படவில்லை.
காய்கறிகளுக்கான அதிகபட்ச சில்லறை விற்பனை விலையையும் அந்த செயலணி அறிவித்துள்ளது; எவ்வாறாயினும், இவற்றுக்கான ஒரு சரியான கண்காணிப்பு பொறிமுறையானது எங்கள் பகுதியில் நடைமுறையில் இல்லை, எனவே, இடைத்தரகர்கள் விவசாயிகளிடமிருந்து பொருட்களை மிகக் குறைந்த விலைக்கு வாங்கி வீட்டுக்கு வீடு மிக அதிக விலைக்கு விற்கிறார்கள்; சில சந்தர்ப்பங்களில், 400% லாபம் வைத்துக்கூட விற்கின்றார்கள். உற்பத்தி செய்யும் விவசாயிகளும் நுகரும் பொது மக்களும் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதேபோன்ற நிலைமையை மீனவர்கள் மற்றும் கடலுணவு நுகர்வோர் எதிர்கொள்கின்றனர்.
இதற்கிடையில், நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள உள்ளூர் சில்லறைக் கடை உரிமையாளர்களும் அதிக விலைக்குப் பொருட்களை விற்பனை செய்கிறார்கள்; செயலணி அறிவித்ததை விடவும் மிக அதிக விலைக்கு விற்கின்றார்கள்.  இந்த நிலை, குறிப்பாக உணவு மற்றும் மருத்துவப் பொருட்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது என்று மக்கள் என்னிடம் தெரிவிக்கின்றார்கள். இது போன்ற நிலை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மட்டும்தான் நிலவும் என்றில்லை என்பதனையும் நான் அறிவேன்.
எனது தேர்தல் மாவட்டத்தில், நாளாந்த தொழில் செய்து, தினசரி ஊதியத்தில் வாழும் பலர், தங்கள் நிலைமையை உங்களது கவனத்திற்கு கொண்டு செல்லும்படி என்னைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால், ஒரு நாடாக, நாம் தற்போது எதிர்கொண்டிருக்கும் இந்த தொற்றுநோய் நெருக்கடியைச் சமாளிக்க நீங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் அனைத்து முயற்சிகளையும் அவர்கள் அனைவரும் முழு மனதுடன் பாராட்டுவதுடன், தற்போதைய நெருக்கடியால் உருவாக்கப்பட்டுவரும் தமது சொல்லொணாக் கஷ்டங்களைத் தணிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நீங்கள் உடனடியாக வினைத்திறனுடன் எடுப்பீர்கள் என்றும் அவர்கள் அனைவரும் நம்புகிறார்கள்.
நாட்டின் இந்த பகுதியில் நிலவும் மற்றொரு பிரச்சினை, கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு ‘திரிபோஷா’ போன்ற சத்துணவை வழங்குவதில் நிலவும் பற்றாக்குறை ஆகும். கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பது தவிர்க்க முடியாதது என்பதால், இந்த விஷயத்தையும் கவனிக்குமாறு உங்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த நெருக்கடியான காலகட்டத்தில் – அரசாங்கத்தால் மக்களுக்காகச் செய்யப்படும் ஏற்பாடுகள் அனைத்தும் அவர்களுக்குச் சென்று கிடைப்பதில் – எவ்வித செயற்கையான தாமதமும் இல்லாதிருப்பதை உறுதி செய்யுமாறு நான் கேட்டுக்கொள்ளுகின்றேன். அத்தோடு – உங்களது திட்டங்களை முழுமையாகச் செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளையும் எடுக்குமாறு – மாகாண, மாவட்ட மற்றும் உள்ளூர் மட்ட அதிகாரிகளுக்கும், சட்டங்களை நடைமுறைப்படுத்தும் காவல்துறையினருக்கும் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்குமாறும் நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
நோய்த்தொற்று நெருக்கடியை நாடு எதிர்கொண்டுள்ள இந்த கடுமையான நேரத்தில், அரசியல் கைதிகளாக உள்ள தமது உறவுகள் மற்றும் அன்புக்குரியவர்கள் பற்றியும் தமிழ் மக்கள் பெரிதும் கவலைப்படுகிறார்கள்.
உங்களுக்கு தெரியும் – அவர்களுள் சில கைதிகள், 25 ஆண்டுகளுக்கும் மேலாக கூட சிறையில் உள்ளனர். அவர்களில் சிலர் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டிருந்தாலும், பலர் எந்தவிதமான தண்டனையும் இன்றி பல ஆண்டுகளாகச் சிறையில் உள்ளனர்.
சிறைகளில் அவர்கள் ஏற்கெனவே கழித்துவிட்ட காலத்தைக் கருத்தில் கொண்டும், நம் நாட்டின் தற்போதைய நோய்த்தொற்று நிலைமையைக் கருத்தில் கொண்டும் – இந்த விடயத்தைச் சாதகமாக ஆராய்ந்து, சிறைகளில் இருந்து அவர்களை விடுவிக்கத் தயவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். – என்றுள்ளது.