September 9, 2024

கொரோனா; புதைப்பதற்கு இடமில்லை, சாலையில் உடல்களை விட்டுச்செல்லும் அவலம்!

தென்அமெரிக்க கண்டத்தில் உள்ள சிறிய நாடுகளில் ஒன்றான ஈக்வடாரில், கொரோனா வைரஸ் பாதிப்பால் நிலைமை மிகவும் சீர்கெட்டுள்ளது. பிணங்களை தெருவில் விட்டுச்செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கூறப்படுவதாவது; தென் அமெரிக்காவின் வடமேற்கு பகுதியில் 1.66 கோடி மக்களைக் கொண்ட ஒரு சிறய குடியரசு நாடு ஈக்வடார். இதுவரை அங்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,465 ஆக உயர்ந்துள்ளது மற்றும் 300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஈக்வடாரில் மருத்துவமனைகளும் மிகக் குறைவு. அதிகப்படியானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்குத் தேவையான படுக்கையோ, வென்டிலேட்டர்களோ அங்கு இல்லை. இதனால், போதுமான சிகிச்சை கிடைக்காமல், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழக்க நேரிடுகிறது.

மேலும், உயிரிழந்தவர்களை புதைப்பதற்கு போதுமான இடம் இல்லாததால், உயிரிழந்தவர்களின் சடலங்களை அவரது உறவினர்கள் சாலைகளில் விட்டுச் செல்லும் அவலம் நிலவுகிறது.
மருத்துவமனைகளிலும் இடம் இல்லாததால் வைரஸ் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதனால் பலர் வீட்டிலேயே உயிரிழக்கின்றனர். இறந்தவர்களின் உடல்களைப் புதைப்பதற்காக அதிகாரிகளை அழைத்தால், காத்திருக்கவும் என்ற பதிலே வருகிறது. எனவே, பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் சடலங்கள் வீட்டிலேயே இருப்பதால் மற்றவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால், சடலங்களை சாலைகளில் விட்டுச் செல்கின்றனர் என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இறந்தவர்களின் சடலங்களை முறைப்படி புதைக்காமல் சாலைகளில் போட்டுள்ளதால், ஈக்குவேடாரில், மேலும் பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்குள் அண்டை நாடுகளின் உதவியைப் பெற்று, சடலங்களை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதுபோன்ற கொள்ளை நோய்கள் வரும்போதுதான், ஒவ்வொரு நாட்டின் உண்மையான வளர்ச்சி, கையாளும் திறன், மருத்துவக் கட்டமைப்பு போன்ற விஷயங்கள் வெளியில் தெரிகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.