September 11, 2024

ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல்

கொவிட் 19 என்னும் கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் இன்று (04.04.2020) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் அநுருத்த பாதெனிய வைரஸின் உலகளாவிய பரவல் மற்றும் அதனை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் மேற்கொண்ட செயற்பாடுகளின் முன்னேற்றம் குறித்து விளக்கினார்.

நாட்டினுள் வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட முதல் சந்தர்ப்பத்திலேயே ஜனாதிபதி தலைமையில் அரசாங்கம் மேற்கொண்ட உடனடி நடவடிக்கைகளின் காரணமாக இந்த சுகாதார பிரச்சினை கட்டுப்பாட்டை மீறிச் செல்ல இடமளிக்காது முகாமைத்துவம் செய்ய முடியுமாக இருந்ததாக இங்கு கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

கொரோனா நோயாளிகள் அதிகம் கண்டறியப்பட்டுள்ள சில மாவட்டங்கள் தவிர பெரும்பாலான மாவட்டங்களில் நோய் பரவும் அச்சுறுத்தல் தற்போது இல்லை.

எதிர்வரும் புத்தாண்டு காலம் நிறைவுறுவதுடன் இடர் நிலைமை இல்லாத மாவட்டங்களில் தற்போது நடைமுறையிலுள்ள கட்டுப்பாடுகளை நீக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது.

எனவே புத்தாண்டு நிறைவுறும் வரை கொரோனா ஒழிப்பு தற்போதைய நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுத்துச் சென்று பின்னர் நிலைமையை ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்க கலந்துரையாட இணக்கம் காணப்பட்டது.

ஜனாதிபதி அவர்களின் தலைமையில் அரசாங்கம் இதுவரையில் செயற்பட்டதைப் போன்று வைரஸை ஒழிக்க தொடர்ந்தும் சுகாதார, மருத்துவ, பாதுகாப்பு மற்றும் சட்டம் உள்ளிட்ட குறித்த துறைகளின் நிபுணர்களின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும்.

நோயின் உலகளாவிய பரவலை கண்காணித்து உலக சுகாதார தாபனம் அவ்வப்போது செய்யும் பரிந்துரைகளை ஆராய்ந்து பொருத்தமான வகையில் பின்பற்றுவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்படும்.

தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள கொரோனா ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தை மேலும் முறையாக தொடர்ந்தும் முன்னெடுக்க கலந்துரையாடலில் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

தொற்றுக்குள்ளானவர்கள், தொற்றுக்குள்ளானவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் மற்றும் அவர்களுடன் பழகியவர்களை மீண்டும் மீண்டும் கடுமையான பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

தொற்றை கட்டுப்படுத்துவதில் வெற்றிகண்ட ஏனைய நாடுகளும் இத்தகைய நடைமுறைகளையே பின்பற்றியுள்ளன. தொற்றுக்குள்ளானவர்கள் மற்றும் அவர்களுடன் பழகியவர்களை சரியாக இனம்காண முடிந்திருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க, முன்னாள் ஆளுநர் வைத்தியர் சீதா அரம்பேபொல, பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன, அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் அதிகாரிகள், தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப நிறுவனத்தின் தலைவர் ஜயன்த டி சில்வா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.