September 9, 2024

இனி யாழிலும் பரிசோதனை!

வடக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான மருத்துவ பரிசோதனையை நேற்றில் (04) இருந்து யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் செய்து கொள்ள முடியும் என மருத்துவ பீடாதிபதி வைத்தியர் ரவிராஜ் தெரிவித்துள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று தொடர்பான மருத்துவ பரிசோதனைகள் இதுவரை காலமும் அநுராதபுரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு சோதனைகள் இடம்பெற்றன.

எனினும் தற்போது யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் அதனை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன இன்றில் (நேற்று) மருத்துவ பரிசோதனைகள் இடம்பெறுகின்றன.

சுகாதார அமைச்சு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஆகியோரின் தீவிர முயற்சியிலேயே இந்த பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த கொரோனா சந்தேகத்துக்குரிய நோயாளர்கள் தங்கள் மருத்துவ பரிசோதனையை இலகுவாக செய்யக்கூடிய வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவ அறிக்கையை சுமார் மூன்று மணி நேரத்துக்குள் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும். யாழ் பல்கலைக்கழகத்தில் மிகவும் நுணுக்கமான – பாதுகாப்பான முறையில் இந்தப் பரிசோதனைகள் இடம்பெறுகின்றன. – என்றார்.