பொன்னாலைக் காட்டில் கசிப்பு குகை… பொலிஸாரால் சுற்றிவளைப்பு!

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நேரத்தில், பொன்னாலை காட்டில் கசிப்பு குகை ஒன்று முற்றுகையிடப்பட்டது.

இன்று (03) வெள்ளிக்கிழமை காலை குறித்த முற்றுகை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பிரதேச இளைஞர்களும் வட்டுக்கோட்டை பொலிஸாரும் இணைந்து இந்த முற்றுகை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதன்போது, கசிப்பு காய்ச்சிய நபர்கள் தப்பியோடிய நிலையில் அவர்களால் காய்ச்சப்பட்ட கசிப்பு, எஞ்சிய கோடா மற்றும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன.

பொன்னாலைக்கு வெளியே இருந்து வந்தவர்களே இங்கு கசிப்பு உற்பத்தில் ஈடுபட்டனர். முற்றுகையின்போது அவர்கள் தப்பிச்சென்ற போதிலும் பொலிஸார் அவர்களை அடையாளப்படுத்தியுள்ளனர்.

மேற்படி பிரதேசத்தில் இயற்கையாக உள்ள தாழ்வான இடத்தில் நீர் தேங்கி நின்றமையை சாதகமாக பயன்படுத்திய கசிப்பு உற்பத்தியாளர்கள் அங்கு பல தடவைகள் கசிப்பு காய்ச்சும் செயற்பாட்டை மேற்கொண்டிருந்தமை தெரியவந்துள்ளது.