தமிழீழ தேசிய மாவீரர் நாள் – யேர்மனி 2022,நினைவேந்தல் தொடர்பான முக்கிய அறிவிப்பு.
தமிழீழ தேசிய மாவீரர் நாள் – யேர்மனி 2022
மாவீரர்கள் காலத்தால் சாகாத சிரஞ்சீவிகள், சுதந்திரச்சிற்பிகள். எமது மண்ணில் ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்றவர்கள்.
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள்..
08.10.2022
நினைவேந்தல் தொடர்பான முக்கிய அறிவிப்பு.
அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய யேர்மனிய வாழ் தாய்த்தமிழ் உறவுகளே!
தமிழீழத் தாயகத்தின் விடுதலைக்காக உன்னதமான உயிர்களைக் கொடைகளாக்கி, மாவீர மகுடங்களாக, தமிழ்த்தேசிய இனமானப் போர்வைகளாக வாழும் கல்லறை நாயகரை ஒருசேர நினைவிருத்தி உணர்வெழுச்சியோடு பூசிக்கும் கார்த்திகை 27ல், நாம் வாழ்ந்துவரும் யேர்மனிய நாடு தழுவிய வகையிலும் இவ்வாண்டும் தயாராகி வருவதானது அறிந்ததே
கடந்த இரண்டு வருடங்களாக உலகம் தழுவிய வகையில், உயிர்களைப் பலிகொண்டு அச்சம் கொள்ளவைத்த கொறோனாப் பேரிடர் காரணமாக பெரும்பாலான மக்களை ஒரு தளத்தில் அணியமாக்கி நினைவேந்தலை முன்னெடுப்பதில் எண்ணற்ற சிரமங்களும், வாழ்விட தேச இடர்காலச் சட்ட மூலமாக மக்கள் பெருமளவில் ஒன்று சேர்வதை மறுத்திருந்தமையும் யாவரும் அறிந்ததே. இதன் காரணமாக நாம் இயல்பு நிலை கடந்து பல்வேறு இடங்களில், சிறு சிறு தளங்களில் மாவீரர்களுக்கான நினைவேந்தலை முன்னெடுத்த போதிலும், எமது மக்களும், மாவீர்களின் பெற்றோர்களும் உறவுகளுமாக பரிபூரணமான ஒத்துழைப்புக்களை நல்கியிருந்தார்கள்.
தற்போது கொறோனாப் பேரிடர்கால நெருக்கடிகள் தளர்ந்து பெரும்பாலான இயல்புநிலைத் தோற்றுவாயில் நாடுகள் திரும்பியுள்ளன. இச்சாதகச் சூழமைவில் நாம் மீண்டும் வழமை போன்று நாடு தழுவிய வகையிலான தேசிய எழுச்சி நிகழ்வுகளை மையப்படுத்துவதோடு, எமது இனவிடுதலை உணர்வுகளை, மக்கள் எழுச்சிகளை இடைவெளியின்றி, சோர்வின்றி, குறைவின்றி வெளிப்படுத்தவேண்டிய காலக் கடமைக்குள் வாழ்ந்து வருகின்றோம்.
எமது மக்கள் திரட்சியும், உணர்வுகளின் மேலீடுமே உலக அரங்கில் எம்மீதான கவனத்தை ஈர்க்கச் செய்யும் வலுவான ஆயுதம் என்பதையும், தற்போது ஸ்ரீலங்கா அரச பீடங்களில் ஏற்பட்டுள்ள குழப்பங்களும் பன்னாடுகளின் பார்வைகள் செறிந்துள்ள இக்காலப்பகுதியில் அவற்றை எமக்கு சாதகமாக்குவதற்கான செயல்ப்பணிகளைப் புரிந்துகொண்டு எங்கள் உணர்வுகளை ஒருமித்து வெளிப்படுத்த மாவீரர் துணைகொண்டு திடம் கொள்வோம்.
மாவீரர்களைப் பெற்றெடுத்த பெற்றோர்களே, உரித்துடையோர்களே பல்வேறு சிரமங்களையும், நெருக்கடிகளையும் தாங்கிநின்று கொறோனாப் பேரிடர்கால அறிவிப்புக்களை ஏற்று வழிநடந்தமை போலவும், அதற்கு முன்னய காலப்பகுதியில் நல்கிய உங்கள் பரிபூரணமான ஒத்துழைப்புக்களை இவ்வாண்டிலும் வேண்டிக் கொள்கிறோம். நகரச் செயற்பாட்டாளர்களின் வழிகாட்டுதலில் நாடு தழுவிய நினைவேந்தல்த் தளத்திற்கு அன்புரிமையுடன் அழைக்கின்றோம்.
அத்தோடு மாவீரர் நினைவாக வெளிவருகின்ற “கார்த்திகைத்தீபம்” சிறப்பு மலருக்கான ஆக்கங்களையும் ஐப்பசி 30ஆம்திகதிக்கு முன் எமக்கு அனுப்பிவைக்குமாறும் தாழ்மையோடு கேட்டுக்கொள்கின்றோம். மாவீரர் நினைவு சுமந்த ஆக்கங்கள், போராட்டம் சார்ந்த படைப்புக்களை கீழ்வரும் மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது எமது பணியகத்துக்கோ அனுப்பிவைக்க முடியும் என்பதை அறியத்தருகின்றோம்.
மாவீரர் பணிமனை
Maveerar Panimanai
Tiergartenstr 273-275
42117 Wuppertal
தொலைபேசி: 015906779532
மின்னஞ்சல்: mapagermany@gmx.de