அங்கீகரிக்கின்ற நாள் நெருங்கிக் கொண்டு இருக்கின்றது!
நாம் யாவரும் ஒன்றிணைந்து ஒரு சக்தியாக தமிழர் என்று திரள்கின்ற பொழுது உலகம் எம்மை அங்கீகரிக்கின்ற நாள் நெருங்கிக் கொண்டு இருக்கின்றது என்ற நம்பிக்கை எம்மிடம் இருக்க வேண்டுமென தமிழரசுக்கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நான்கு ஆண்டுகளுக்குள் உலகம் முழுவதும் பாரிய மாற்றங்கள் இடம்பெற இருக்கின்றன. இலங்கை நாடும் இங்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்று சொல்லிக்கொண்டிருக்கின்றது.
இலங்கை உலகத்தை ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றது என உலகம் தெளிவாக புரிந்து கொண்டு இருக்கின்றது.
தமிழர்களின் தேசிய அபிலாசைகளை உலகம் புதிய பரிமாணத்துடன் சிந்திக்க முற்பட்டுள்ளது. நாம் இழந்த ஆத்மாக்கள் இப்பொழுது எமக்கு உத்வேகத்தை தருகிறது.நாம் எந்த நோக்கத்துக்காக எமது உறவுகளின் உயிர்களை இழந்தோ மோ அந்த நோக்கங்கள் இன்னும் அழிந்து போகவில்லை.
இலங்கை அரசு தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்காவிடில் இந்த நாடு பெரும் பாதாளத்துக்குள் விழும் என்பது ஐயம் இல்லை.
நாம் பெற்ற துன்பங்களை சிங்கள மக்கள் அனுபவிக்க தொடங்கி விட்டனர். இதனால் அரசு பயத்தில் மூழ்கியுள்ளது. அதுவும் தமிழர்களுக்கான பாதை திறக்க வழியாகும். ஆகவே நாம் எல்லோரும் இணைந்து ஒருமிக்க வேண்டிய காலகட்டம் இது எனவும் சிவஞானம் சிறீதரன் கருத்து வெளியிட்டுள்ளார்.