இரகசிய வாக்கெடுப்பாம்!
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் எஸ்.யோகேஸ்வரன் ஆகிய மூன்று வேட்பாளர்களிடையே தனது தலைவரைத் தீர்மானிக்க இரகசிய வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரை தேர்தல் மூலமே தெரிவு செய்வது என தலைமைப் பதவிக்குப் போட்டியிடும் மூன்று போட்டியாளர்களும் இன்று காலை கூடித் தீர்மானித்துள்ளனர்.
கொழும்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீட்டுத் தொகுதியில் சிவஞானம் சிறிதரனின் இல்லத்தில் இன்று காலை முக்கிய சந்திப்பு இடம்பெற்றது.
சந்திப்பில் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்குப் போட்டியிடும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், எம்.ஏ. சுமந்திரன், மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சீ.யோகேஸ்வரன் ஆகியோர் கூடி ஆராய்ந்தனர்.
தேர்தல் இன்றி கட்சியின் தலைவரை தெரிவு செய்வது தொடர்பில் போட்டியாளர்கள் மூவரும் கலந்துரையாடியுள்ளனர்.
ஆயினும் அதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படாத நிலையில் தேர்தல் மூலமே தமிழரசுக் கட்சியின் தலைவர் தேர்வை நடத்துவது என மூவரும் சந்திப்பின் இறுதியில் முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயற்;குழுக் கூட்டம் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நேற்று நடைபெற்றது.
தமிழரசு கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தை வரும் 21ஆம் திகதி நடத்துவதுடன், தேசிய மாநாட்டை 28ஆம் திகதி நடத்துவது என்ற ஏற்கனவே எடுத்த முடிவு மாற்றமின்றி பேண ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
தொடர்ந்து, ;; இரா. சம்பந்தன், கட்சியின் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும் என்பதையும் போட்டியின்றி தலைவர் தெரிவு இடம்பெறவேண்டும் என்பதை வலியுறுத்தியதுடன் கட்சியின் செயல்குழுவும் அதனையே வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.