சுமா-சுரேன் வெளிவிவகார அமைச்சருடன் நேபாளத்தில்?
ஜனாதிபதியுடனான சந்திப்பில் பங்கெடுக்காத எம்.ஏ.சுமந்திரன் சுரேன் சுரேந்திரன் சகிதம் புலம்பெயர் செயற்பாட்டாளர்களை சந்திக்க நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பரபரப்பான செய்திகள் உலாவ தொடங்கியுள்ளது.
இதனிடையே இலங்கையின் வெளிவிவகார அமைச்சரின் நேபாள பயணம் தொடர்பிலும் முக்கிய தமிழ் தரப்பினரது பயணம் தொடர்பிலும் தகவல்கள் பலவும் வெளிவந்த வண்ணமுள்ளபோதும் கட்சிகள் மௌனம் காத்தேவருகின்றன.
இதனிடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச ஒப்பந்தமான இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.அத்துடன் வடக்கு-கிழக்கு மாகாணங்கள் மீள இணைக்கப்பட்டு நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற எங்கள் நிலைப்பாட்டில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன்,தெரிவித்துள்ளதாக கட்சியால் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்றையதினம் இலங்கை ஜனாதிபதிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றிருந்தது.
அரசியல் தீர்வற்ற வெறும் நல்லிணக்கக் கொடியைக் காண்பித்து எங்களைத் தொடர்ந்தும் ஏமாற்ற முயலாதீர்கள். நாம் தொடர்ந்தும் ஏமாறத் தயாரில்லை என்றும் இரா.சம்பந்தன், தெரிவித்துள்ளாராம்.
இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதன் அடிப்படையில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினையைத் தீர்க்காவிடின் நாட்டுக்கு எதிராகச் சர்வதேச சமூகத்தை நாங்கள் நாடுவோம்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளடங்கலாகப் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு எவ்வித தீர்வையும் பெற்றுத் தராத உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்மொழிவை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவிததுள்ளார்.