காணிப்பிரச்சினை:திருப்பியனுப்பினர்?
சிங்கள குடியேற்றவாசிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மாதவனை கால்நடை மேச்சல் தரவைக்கு சென்ற தமிழ் தேசிய முன்னணியின் தலைவரும்; யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக அக்கிராம மக்கள் குழுவொன்று வளமண்டி பாலத்தை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று வெள்ளிக்கிழமை (15) காலை வந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினரை பயணிக்க அனுமதிக்கவில்லை. சுமார் ஒன்றரை மணி நேரம் வளமண்டி பாலத்திற்கு அருகில் வாகனத்துக்கு உள்ளேயே இருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம கிராம மக்களின் கூச்சல்களுக்கு மத்தியில் திரும்பிச் சென்றார்.
அம்பிட்டிய சுமனரதன தேரர் மற்றும் பொல்கஹ அரவ பிரதேசத்தைச் சேர்ந்த தேரர் உட்பட பெருந்தொகையான கிராம மக்கள்; போராட்டத்தில் ஈடுபடடனர்.
இதனிடையே யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் காணி அளவீட்டுக்கு சென்ற நில அளவைத் திணைக்களத்தினருக்கு எதிராக காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணம் – கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை, நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கும் நோக்கில் வெள்ளிக்கிழமை (15) அளவீடு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து ஒன்றுகூடிய காணி உரிமையாளர்கள் நில அளவை திணைக்களத்தினரின் வாகனத்தை மறித்து கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதனையடுத்து அளவீட்டு பணிகள் கைவிடப்பட்டுள்ளது.
தெல்லிப்பளை நகுலேஸ்வரம் , காங்கேசன்துறை கிராம சேவகர் பிரிவுகளில் 29 ஏக்கர் நிலம் அளவீடு செய்ய தீர்மானிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.