November 24, 2024

மோடிக்கு கடிதம் எழுதும் தமிழ் தேசிய கட்சிகள்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும், தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்காக தயாரித்த கடிதத்தில் சில கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்ட நிலையில் கடிதம் நாளைய தினம் இந்திய தூதரிடம் கையளிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரைவில் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் இந்திய அரசாங்கம் தமிழர் தரப்பு விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி குறித்த கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளது.

நான்கு கட்சிகளின் தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் இல்லத்தில் இன்றையதினம் புதன்கிழமை கூடி குறித்த கடிதத்தில் கையொப்பமிட்டனர்.

கடிதத்தில் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரனும் , புளொட் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனும் , ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனும்,  ஐனநாயக போராளிகள் கட்சி சார்பில் வேந்தனும் கையொப்பமிட்டனர்.

மேலும் ரெலோவின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடமும், தமிழ் தேசிய கட்சி சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஶ்ரீகாந்தாவும் கையொப்பமிட்ட பின்னர் குறித்த கடிதம் நாளைய தினம் வியாழக்கிழமை  இலங்கைக்கான இந்திய தூதரிடம் கையளிக்கப்படவுள்ளது.

குறித்த கடிதத்தில் இந்திய இலங்கை ஒப்பந்தம் பிரகாரம் கொண்டு வரப்பட்ட 13ம் திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் வடக்கு கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சி தனியாக இந்திய பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பவுள்ள நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்கனவே கடிதத்தை இந்திய துணைத்தூதர் ஊடாக இந்தியப் பிரதமருக்கு அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert