März 29, 2024

சிங்கள மயமாக்கல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத வரைக்கும் தமிழர் நிலங்கள்பறிபோய்க்கொண்டே இருக்கும்

திட்டமிட்ட சிங்கள மயமாக்கல்களுக்கு ஒரு தேசமாக நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்காத வரைக்கும் எங்களுடைய நிலங்கள்பறிபோய்க்கொண்டே இருக்கும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிப்பு!

திட்டமிட்ட சிங்கள மயமாக்கல்களுக்கு ஒரு தேசமாக நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்காத வரைக்கும் எங்களுடைய நிலங்கள்பறிபோய்க்கொண்டே இருக்கும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்  நாடாளுமன்ற உறுப்பினருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

மக்களின் கோரிக்கைக்கு இணங்க தையிட்டியில் சட்டவிரோதமாக தனியார் காணியில் அமைக்கப்பட்ட விகாரையினை பார்வையிட்டு களநிலவரங்களை ஆராய்ந்தபோதே அவர் இதனைத்தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இந்த விகாரை அமைக்கப்பட்ட இடம் தனியாருக்கு சொந்தமானது. சட்டவிரோதமான இந்த கட்டட வேலைகள் இரண்டு வருடத்திற்கு முன்னதாக ஆரம்பிக்கப்பட்ட பொழுதே மாவட்ட அபிவிருத்தி சபை கூட்டங்களிலும் பிரதேச அபிவிருத்தி சபைக்கூட்டங்களிலும் இந்த சட்டவிரோத செயற்பாடுகளை வெளிப்படுத்தி இது உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என கோரியிருந்த நிலையில் இந்த விடயம் தொடர்பாக இன்னுமொரு விசேட கூட்டம் கூடப்படும் என வாக்குறுதி அளித்திருந்தும் எந்தவிதமான கூட்டங்களோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இன்று இந்த விகாரை இராணுவத்தினரின் முழுப்பங்களிப்போடு கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது.

தையிட்டியில் மட்டுமல்ல இன்று தமிழர்தாயக நிலப்பகுதி முழுவதிலும் சிங்களமயமாக்கல் வேலைத்திட்டத்திட்டமானது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நாங்கள் இந்த விடயத்தினை ஐ.நா மட்டிலும் பதிவு செய்திருக்கிறோம். ஆகவே எங்களைப்பொறுத்தவரையில் மக்கள் மட்டத்தில் இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது.  இன்று இப்பபுதியிலுள்ள மக்களின் தொண்டைகளில் கைவைத்த நிலையில் தான் மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிநார்கள்.

இவ்வாறான நிலைகள் மத்தியில் அவர்கள் எங்களை அழைத்து இந்த விகாரை சம்மந்தமாக பிரச்சனைகளை வெளிப்படுத்தி இருந்தார்கள். எங்களைப்பொறுத்த வரையில் இந்த மாதிரியான சட்டவிரோத இனவாத போக்கிற்கு ஒரு தேசமாக நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்காத வரைக்கும் எங்களுடைய நிலங்கள்பறிபோய்க்கொண்டே இருக்கும். நாங்கள் இவ்வாறான நடவடிக்கைகளுக்கெதிராக எங்களுடைய முழு எதிர்ப்பையும் வெளிப்படுத்துவோம். எங்களுடைய எதிர்ப்புக்களைத்தாண்டியே இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்ற நிலையை நாம் உருவாக்கிக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert