ஊடகங்களை ஒடுக்கும் தேவை எங்களுக்கு இல்லை

தெற்காசியாவிலேயே சிறந்த ஊழலுக்கு எதிரான சட்டத்தை இலங்கை பாராளுமன்றத்தில் விரைவில் நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த சட்டமூலத்திற்கான அமைச்சரவை அங்கீகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, எதிர்காலத்தில் எதிர்க்கட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்து உங்களுக்குத் தெரிவிக்க இந்த நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொண்டேன்.

ஒரு வருடத்திற்கு முன்பு நாம் வங்குரோத்து நாடாக மாறினோம். IMF மற்றும் எங்கள் கடன் வழங்குநர்களின் ஆதரவுடன் நாங்கள் எங்கள் கடனை மறுசீரமைக்க வேண்டியேற்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இது வெறும் ஆரம்பம் தான். IMF ஆதரவு தொடர்பில் நிதி உத்தரவாதத்தைப் பெற்ற பிறகு, நம் நாடு வங்குரோத்து நாடாக கருதப்படமாட்டாது. இப்போது நாம் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும்.

அதாவது பலதரப்புக் கடன் வழங்குநர்கள் மற்றும் இருதரப்புக் கடன் வழங்குநர்கள் அனைவருடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தனியார் கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் கடினம். ஆனால் நாம் திரும்பிப் பார்க்காமல் நம்பிக்கையுடன் முன்னேற வேண்டும்

எனவே இது முடிவல்ல. ஒருபுறம், இது ஆரம்பம் மட்டுமே. அடுத்ததாக கடன் தருபவர்களுடனும் கலந்துரையாட வேண்டும்.

கடன் வழங்குபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அதே நேரம், எமக்கு நான்கு வருட வேலைத்திட்டமும் உள்ளது. அதனால்தான் இந்த ஒப்பந்தத்துக்கு பாராளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.

நான் அதை சட்டப்படி செய்ய விரும்பவில்லை. ஆனால் நாடாளுமன்றத்தில் இந்த உடன்படிக்கைக்கு வாக்களிப்பது எங்களை மேலும் பலப்படுத்துகிறது. இதற்கு மக்கள் ஏற்கனவே வாக்களித்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் இந்த ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள கொள்கையை நாடு ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை கடன் வழங்குநர்களுக்கு காட்ட வேண்டும்.

எனவே முதலில், இது ஒரு கடன் மறுசீரமைப்பு, ஆனால் கடன் மறுசீரமைப்பு மட்டும் அல்ல, நாம் அதை நமது பொருளாதார மறுசீரமைப்பாக மாற்ற வேண்டும்.

முதலில், எங்களுக்கு நிதி ஸ்திரத்தன்மை உள்ளது. இந்த செயல்முறை மூலம் நமது வருமானத்தை அதிகரிக்க வேண்டும். இது மிகவும் கடினமான காலமாக இருப்பதோடு, நாம் அரச செலவினங்களை ஸ்தீரப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஏனெனில் அது அரச செலவினங்களின் தன்மையையும், நமக்குக் கிடைக்கும் வருமானத்தையும் விவரிக்கிறது. இது முதன்மை வரவுசெலவுத் திட்டத்தில் மேலதிகம் இருப்பதை உறுதி செய்வதோடு, வருமானத்தை அதிகரிக்க உதவுகிறது.

நாம் அரசாங்க வரவு செலவுத் திட்டத்தை சிறப்பாகக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். ஆனால் இது எங்களுக்கு முதன்மை வரவுசெலவுத் திட்ட மேலதிகம் மற்றும் வருமான அதிகரிப்பை உறுதி செய்கிறது.

நாம் மேற்கொள்ளும் கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள், பொருளாதார வளர்ச்சியை அடைய உதவும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

நாம் மேலும் தாராளமயவாதத்தை (லிபரல்) தொடருவோம். தாராளமயம் என்பது நல்ல வார்த்தையல்ல என்றும், வெளிநாட்டு முதலீட்டுக்காக அதைத் திறந்து விடுகிறோம் என்றும் நினைப்பவர்கள் இருக்கிறார்கள்.

நாம் பல்வேறு முதலீட்டுத் துறைகள் மற்றும் உற்பத்தித் துறையில் கூடுதல் அன்னிய முதலீட்டையும் நாங்கள் எதிர்பார்த்து வருகிறோம். அதன் மூலம் நாம் தொடர்ந்து செல்ல வேண்டும் என்பதே அர்த்தம் ஆகும் என குறிப்பிட்டுள்ளார்.

10 வருடங்களில் நடுத்தர வருமானம் பெறும் ஒரு நாடாக மாறும் திட்டத்திற்கு. இந்தக் கடனை அடைப்பதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, மு

தல் பணியாக இந்த உடன்படிக்கையை அங்கீகரித்து அதன் பின்னர் கடனை மறுசீரமைக்க வேண்டும் என்றும் கடனை திருப்பிச் செலுத்தும் முறையை அதன்போதே அறிந்துகொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

இரண்டாவதாக, விவசாயம் மற்றும் மீன்பிடிக் கைத்தொழில் நவீனமயமாக்கப்பட வேண்டும். மூன்றாவதாக, இலங்கையை பிராந்திய விநியோக மையமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சுற்றுலாத் துறை, டிஜிட்டல் பொருளாதாரம், பசுமைப் பொருளாதாரம் ஆகியவை நிச்சயமாக மேம்படுத்தப்பட்டு விரிவாக்கப்பட வேண்டும். அதன் மூலம் புதிய இலங்கையை கட்டியெழுப்ப முடியும்.

இன்னும் 25 வருடங்களில் அதாவது 2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை உயர் நடுத்தர வருமான நாடாக மாற்றுவதே எனது நோக்கம் ஆகும். ஒரே இடத்தில் தேக்க நிலையில் உள்ள பொருளாதாரத்துடன் எம்மால் முன்னேற முடியாது. நம் நாட்டில் நடந்த அனைத்து பிரச்சினைகளும் இந்த பிரச்சினையுடன் தொடர்புடையவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

1971இல் ஏற்பட்ட வேலையில்லாப் பிரச்சினையைப் போன்று, 1983இல் மொழி மட்டுமன்றி, தமிழ் இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பின்மையால் பிரச்சினைகள் ஏற்பட்டன.

அதுதான் 1989 இலும் நடந்தது. எங்களுக்கு நிறைய பிரச்சினைகள் இருந்தன. பொருளாதார வளர்ச்சியின்மை மற்றும் உறுதியற்ற தன்மை இரத்தம் சிந்துவதற்கு வழிவகுத்தது. இப்போது புதிதாக தொடங்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இது ஒரு வரலாற்று செயல்முறை. அதற்கு உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன். இந்த சர்வதேச நாணய நிதியத்தின் செயல்முறை பற்றி அறிந்து கொள்ள எந்த நேரத்திலும் அதிகாரிகளுடன் பேசுவதற்கு பத்திரிகையாளர்களுக்கு வாய்ப்பு உள்ளது.

ஆனால் இந்த உடன்படிக்கையை நாம் முன்னெடுப்பதா இல்லையா என்பதிலேயே இலங்கையின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இல்லை என்றால் வருங்கால சந்ததி நம்மை சபிக்கும்.

எனவே, அனைவரின் வாழ்க்கையையும் எளிதாக்கும் வகையில் நமது பொருளாதாரத்தில் இந்த நீண்ட கால மாற்றங்களை ஏற்படுத்த உங்கள் ஆதரவை நான் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த ஒப்பந்தத்தை நாங்கள் முதல் பணியாக அங்கீகரித்து, கடனை மறுசீரமைக்கச் செல்கிறோம். அதன் பிறகே கடனை எப்படி செலுத்துவது என்பதை தீர்மானிக்க வேண்டும்.

எங்கள் நிகழ்ச்சிகள் முடிவடையவில்லை. ஏன் முடிக்கவில்லை? அது அரசியலாக மாறியது. இல்லையெனில், அது பொதுமக்களின் கருத்துக்கு உட்பட்டது. மக்கள் கருத்தை உருவாக்கியது ஊடகங்கள்தான். இம்முறை இத்திட்டம் வெற்றியடைய ஊடகங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கோருகிறேன்.

மேலும், எம்.சி.சி மானியத்தை இலங்கை பெறப்போகும் போது, சில தரப்பினர் நாட்டை பிளவுபடுத்துவதாக குற்றம்சாட்டினர். IMF வந்ததும் மேற்குலகிடம் சரணடைவோம் என்று சொன்னார்கள்.

அதனால் இப்படியே தொடர்வது கடினம். எனவேதான் சர்வதேச நாணய நிதியத்தின் 17ஆவது வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்ய இணையுமாறு ஊடகங்களைக் கோருகின்றோம்.

இந்த செயல்முறை மிகவும் கடினம். நாம் அனைவரும் அதை உணர்கிறோம். இது நான்கு வருட செயல்முறை. இது 2026இல் முடிவடையும். என்னுடன் வெகு தூரம் பயணித்தவர்கள், எனது கொள்கைகள் சரி என்று சொன்னவர்கள் இப்போது எனக்கு எதிராக பேசுகிறார்கள்.

அதனால் எதிர்த்தவர்கள் ஒன்று சேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாங்கள் இப்போது கடினமான இடத்தில் இருக்கிறோம்.

பழைய விளையாட்டுகளை மீண்டும் விளையாட முடியாது. பழைய விளையாட்டுகளைத் தொடர்ந்தால் மீண்டும் விழ நேரிடம். எனவே, கடந்த காலத்தை மறந்து முன்நோக்கிச் செல்ல வேண்டும்.

நாங்கள் அனைவரும் தவறு செய்தோம். இதை இப்போது ஏற்றுக்கொண்டு எங்களை ஆதரிக்கவும். இந்தப் பணத்தில் சம்பளம் வழங்குகிறோம். இது திருட்டல்ல. திருட்டு என்ற கதைகளினால், இவைகளை இழந்தோம். இதுபோன்ற கதைகளைப் பரப்ப வேண்டாம். இப்படி கூறுபவர்கள் இதைவிட திருடுகின்றனர்.

இங்கிருப்பவர்களைவிட எனது சம்பளம் குறைவாகவே இருக்கிறது. எமது மனப்பான்மையை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும்.

நான் திருடர்களைப் பாதுகாக்க வந்ததாகக் குற்றம் சாட்டினார்கள். ஆனால், IMF உடன் ஆலோசித்து தெற்காசியாவிலேயே சிறந்த ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தைக் கொண்டு வருகிறோம். எதிர்க்கட்சிகள் கூச்சலிட்டபோதும் இப்படி எதனையும் செய்யவில்லை. நீதியமைச்சர் இதுகுறித்து எதிர்க்கட்சிகளுடனும் ஆலோசனை நடத்துவார்.

அனைத்துக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்காகவே இதனை பாராளுமன்றத்தில் முன்வைத்தோம். இதை யாரும் எதிர்க்க முடியாது. சில புதிய சட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நாங்கள் புதிய சட்டங்கள் சிலவற்றையும் கொண்டுவரவுள்ளோம். பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

ஊடகங்களை ஒடுக்கும் தேவை எங்களுக்கு இல்லை. ஊடகங்கள் என்னையே அதிகமாக விமர்சிக்கின்றன. எனக்கே ஊடகங்கள் இல்லாமல் போனது.

ஊடகங்கள் மீதிருந்த குற்றவியல் சட்டத்தை நான் தான் நீக்கினேன். தகவல் அறியும் உரிமையையும் நான்தான் வழங்கினேன். சுயாதீன ஆணைக்குழுக்கள் மூன்று தடவைகள் நாடாளுமன்றத்திற்கு கொண்டுவந்தேன். இப்படிக்கு இருக்கும் போது ஊடகங்களை ஒடுக்கியதாக எப்படி கூற முடியும்?

தேசியப் பிரச்சினையைத் தீர்க்கச் சொல்கிறார்கள். ஆனால் நான் அந்த விடயங்களை செய்து கொண்டிருக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுடன் இணைந்து ஏனைய பிரச்சினைகளை களைய முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

இதுபோன்ற குற்றச்சாட்டுகள் ஏற்புடையதல்ல என்று ஊடகங்களில் யாரும் கூறவில்லை. தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் செயற்படுகின்றோம் என முன்னரே கூறியிருந்தேன். எந்த ஊடகமும் அதை எதிர்க்கவில்லை.

அதனை நாடாளுமன்றத்தில் அனைவரும் ஒப்புக்கொண்டனர். இந்தப் போர்வையில் இனவாதத்தை உருவாக்காதீர்கள். ஒரு ஊடக நிறுவனம் இனவாத செயற்பாடுகளை முன்னெடுக்கிறது. ஒரே விடயத்தை நான்கு நாட்கள் ஒளிபரப்பினார்கள். இதனைப் பார்த்துவிட்டு தமிழ் ஒருவர் தாக்கப்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்?

அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களைக் ஒளிபரப்பினால் பரவாயில்லை. அதற்கு இன்னொரு பக்கம் இருப்பதைக் காட்ட வேண்டும். ஆர்ப்பாட்டங்களைக் காட்ட வேண்டாம் என்றும் எனது நலவுகளை மாத்திரம் ஒளிபரப்புமாறும் நான் கேட்கவில்லை.“ எனக் குறிப்பிட்டார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert