April 18, 2024

மீண்டும் தவணையிடப்பட்டது எழிலன் வழக்கு

காணாமல் ஆக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளராக செயற்பட்ட எழிலன் உட்பட ஏனையோரை இன்றையதினம் (22) நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு வவுனியா மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. எனினும் இன்றையதினம் நீதிபதி வருகை தராமையினால் குறித்த வழக்கு மீண்டும் திகதியிடப்பட்டது.

விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளராக செயற்பட்ட எழிலன் உட்பட இறுதிக்கட்ட போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போனவர்கள் தொடர்பாக சரணடைந்த குடும்ப அங்கத்தவர்கள் சார்பில் ஆட்கொணர்வு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுமீதான தீர்ப்பினை வவுனியா மேல்நீதிமன்றம் கடந்தமாதம் வழங்கியது.

அதில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இராணுவத்திடம் சரணடைந்தனர் என்பதற்குரிய ஆதாரங்கள் இருப்பதில் மன்று திருப்தியடைந்தது.

எனவே அத்தகைய நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதுடன், அப்படி முடியாது போனால் அதற்கான காரணங்களை நீதிமன்றுக்கு இன்றையதினம் விளக்கமளிக்குமாறும் வழக்கு திகதியிடப்பட்டது.

எனினும் இன்றையதினம் நீதிபதி மன்றுக்கு சமுகமளிக்காமையினால் குறித்த வழக்கு எதிர்வரும் மே மாதத்திற்கு திகதியிடப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

அத்துடன் இன்றையதினம் இராணுவம் சார்பாக சட்டத்தரணி ஒருவரே மன்றுக்கு சமுகமாகியிருந்ததுடன், வேறு எவரும் நீதிமன்றத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert