März 21, 2023

இந்திய தூதரகத்தில் தமிழீழம் கேட்க போனால் தப்பில்லை!

கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் ஆகிய இருவரும் இந்தியத் தூதரகம் நடத்திய இந்திய சுதந்திரதின விழாவில் பங்குபற்றியமை தொடர்பாக சமூகவலைத் தளங்களில் நாகரிகமற்ற அரசியல் விமர்சனங்கள் வருவதை அவதானிக்க முடிகிறது .என மூத்த ஊடகவியலாளர்நிக்சன்தெரிவித்துள்ளார். 

தூதரகம் அழைக்கும் நேரம் எல்லாம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் செல்ல வேண்டும் என்பது அவசியமல்ல. 

ஆனாலும் முக்கிய நிகழ்வு ஒன்றுக்கு வெளிநாடு ஒன்றின் தூதரகமோ, துணைத் தூதரகமோ அழைத்தால், அந்த நிகழ்வில் பங்குபற்ற வேண்டும் என்பது அரசியல் பண்பாடு.

முக்கியமான அரசியல் உரையாடலுக்கு அழைத்தாலும் செல்ல வேண்டும். எதிரி நாடாக இருந்தாலும் அந்த நாட்டின் நிகழ்வுகளில் தூதுவர்கள் பங்குகொள்வது வழமை. உதாரணம், இந்தியா – பாகிஸ்தான், அமெரிக்கா – சீனா

            அதேபோன்றுதான் அரசியல் அதிகாரங்கள் இன்றிப் பாதிக்கப்பட்ட மற்றும் அரசற்ற தேசிய இனம் ஒன்றின் அரசியல் பிரதிநிதிகளும், தூதரகங்கள் நிகழ்வுக்கு அழைக்கும் போது நிச்சியம் பங்குகொள்ள வேண்டும். 

ஏனெனில் அரசியல் அதிகாரப் பங்கீடு பற்றிய பேச்சுக்கள் மற்றும் இணக்கப்பாடுகள் ஏற்படும் போது, சா்வதேச நாடுகளின் குறிப்பாக அயல் நாடுகளின் ஒத்துழைப்பு விரும்பியோ விரும்பாமலோ அவசியம். 

ஈழத்தமிழர் அரசியல் விடுதலை விவகாரங்களில் இந்தியா அக்கறை செலுத்தவில்லை என்பது கசப்பான உண்மை. 13 ஆவது திருத்தச் சட்டத்தை மட்டுமே பேசுகின்றது என்பதெல்லாம் பகிரங்கமான குற்றச்சாட்டுக்கள் – வெறுப்புகள் என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை. 

அதற்காக இந்தியத் தூதரகம் நடத்தும் நிகழ்வுகளில் பங்குகொள்ளக்கூடாது என்ற அரசியல் விதிகள் எதுவும் இல்லை. பங்குபற்றுவதன் மூலம் குறைந்த பட்சப் புரிதலை உருவாக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு. 

           ஆனால் இலங்கையின் சுதந்திர தின நிகழ்வைப் புறக்கணித்தல் என்பது வேறு. ஏனெனில் அந்த சுதந்திரம் தமிழர்களுக்கு உரியதல்ல. இலங்கை அரச கட்டமைப்பில் இருந்து தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். 

அதேபோன்று இந்திய சுதந்திரம் பற்றியும், அதன் பின்னரான இந்தியா குறித்தும் கடும் எதிர்மறை விமர்சனங்கள் – குற்றச்சாட்டுக்கள் உண்டு. 

இருந்தாலும் அயல் நாடு என்ற முறையிலும், தமிழ் நாட்டு  உறவுகள் இருப்பதாலும் இந்திய சுதந்திர தின நிகழ்வில் தமிழ்த் தேசியக் கட்சிகள் பங்குபற்றுவதைத் தவறாகப் பார்க்க முடியாது. 

ஆனால் இந்தியாவினால் கையாளப்படும் சக்திகளாக மாத்திரம் இருந்து கொண்டு, இந்தியத் தூதரகம் நடத்தும் நிகழ்வுகளில் பங்குபற்றுவதைத் தவறான கண்ணோட்டத்துடனேயே பலரும் அவதானிப்பா். 

இதுதான் நிரந்தர அரசியல் தீர்வு என்று அடித்துக்கூறி இந்தியாவை ஈர்ப்பதற்கான பொறிமுறையை உருவாக்க தமிழ்த்தரப்பு தயங்குகின்றது. இதுவரை உரிய ஏற்பாடுகள் எதுவுமேயில்லை. 

மாறாக இந்தியா சொல்வதைக் கேட்பது அல்லது இந்தியத் தூதரகம் அழைத்தும் ஓடிச் சென்று விருந்துபசாரங்களில் பங்குபற்றுவது என்ற நோக்கம் மாத்திரமே தமிழ்த் தேசியக் கட்சிகளிடம் விஞ்சிக் காணப்படுகின்றன. 

            தமது வசதிக்காகக் கட்சிகளைப் பிரிதாளும் இந்தியத் தந்திரோபாயத்துக்கும்  ஒத்துழைக்கின்றன.

இந்த இடத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,  செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் இந்திய சுதந்திரதின நிகழ்வில் பங்குபற்றியதைப் பிழையாக விமர்சிக்க எவருக்கும் உரிமையில்லை. 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert