April 25, 2024

நிபந்தனையுடன் செல்லுங்கள்!

மிகநீண்ட காலங்களாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 32தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விடயம் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் சார்பில் ஆளுக்கொரு கருத்தை நாளுக்கொரு வகையில் தெரிவித்து வருகிறார்கள். இது, தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் உறவினர்கள் மற்றும் மக்கள் மத்தியில் நல்லிணக்கம் தொடர்பான சந்தேகத்தையும் கேள்வியையும் எழுப்பியுள்ளது. அந்தவகையில், அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று பேச்சு வார்த்தைக்கான கலந்துரையாடலில் பங்கேற்கும் தமிழ்கட்சிகளின் பிரதிநிதிகளும் நாட்டில் முதலீடுகளை மேற்க்கொள்வதற்கு அடித்தளமிடுகின்ற புலம்பெயர் மக்கள் அல்லது அமைப்புக்களும் தமிழ்மக்கள் நலன்சார்ந்து வெகுநிதானமாக செயற்படவேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம் என தமிழ் அரசியல்கைதிகளது குடும்பங்கள் தெரிவித்துள்ளன.

யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடுகையில் ,13/12/2022 அன்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கட்சித்தலைவர்களின் கலந்துரையாடவில், தமிழ்ப் பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தைக்கு முன்னதாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளினுடைய விடுதலை உறுதி செய்யப்படுமென ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அதற்கு, ஏனைய சிங்களத் தலைவர்கள் எவரும் ஆட்சேபனைகளையோ எதிர்ப்புகளையோ வெளியிட்டிருக்க வில்லை. மாறாக சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் கூட ஆதரித்திருந்தார்கள்

* இவ்வாறிருக்கையில், 21/12/2022 அன்று,ஜனாதிபதிக்கும் தமிழரசுக் கட்சிக்குமிடையில் திடீரென ஒரு கலந்துரையாடல் நடைபெற்றிருந்தது. இதில்,நீதியமைச்சர், வெளிலிவகார அமைச்சர் மற்றும் சட்டமாஅதிபர் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். அதன்போது, அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாடுடைய கருத்துக்களே வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அதாவது, “விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 16 பேரின் வழக்குகள் துரிதப்படுத்தப்படும்“ என்ற பழைய புராணந்தையே மீண்டும் கையிலெடுத்துள்ள நீதிஅமைச்சர், தண்டனை அனுபவித்து வருகின்ற 13பேர் தொடர்பில் தீர்மானமான முடிவெதனையும் தெரிவிக்கவில்லை. மொத்தக் கைதிகளின் விடுதலையை எதிர்வருகின்ற சுதந்திர தினத்துக்குள்ளாவது சாத்தியமாக்கும் எண்ணம் வெளிப்படுத்தப்படவில்லை.

அதுமாத்திரமன்றி „வெடிப்புச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட தரப்புக்களது ஒப்புதலை பெற்றுக்கொண்டே அரசியல்கைதிகளது விடுதலையைத் திர்மானிக்க முடியும்” என்கின்ற நீதிஅமைச்சரின் கூற்றானது எந்தவகையிலும் அனைத்துக் கைதிகளுக்கும் ஏற்புடையதாகப் போவதில்லை. முற்பட்டகாலங்களில் ஜனாதிபதிப் பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்ட, குற்றவியல் வழக்குக்களில் மரணதண்டனை, ஆயுள்தண்டனை அனுபவித்து வந்திருந்த சிவில் கைதிகள் விடயத்தில் இதுபோன்ற பின்பற்றப்படவில்லை. புதிய விதிமுறைகள் எவையும் பின்பற்றப்படவில்லை.

*வழக்குகளுடன் தொடர்புபட்ட சம்பவங்களை பிரச்சாரப்பாணியில் பொது வெளிப்படுத்தி வரும் நீதிஅமைச்சர், குறித்தசம்பவங்களுடன் தடுத்துவைக்கப்பட்டு உள்ளவர்களின் நேர்மையான வகிபாகம் என்ன என்பதையோ; சம்பவங்களுக்கு கட்டளை பிறப்பித்தவர்கள் யார்; அவர்கள் எங்கே என்பதையோ; அரசியல் கைதிகள் தமது சுயவிருப்பின் அடிப்படையில் சொந்தத் தேவைக்காகவா சம்மந்தப்பட்டார்கள் என்பதையோ; மிகமோசமான பயங்கரவாதத் தடைச் சட்டவிதிகளின் கீழ் 13முதல் 27ஆண்டுகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள் என்பதையோ கொஞ்சமாவது சிந்தித்துப்பார்க்கத்தயங்குவதானது கவலை தரும் வீடயமாகும்.

* நாட்டில் சட்டமும் நீதியும் மக்களுக்காகவே அமுல்படுத்தப்படுகிறது என்ற அடிப்படையில், தமிழ் அரசியல் கைதிகள் குற்றமிழைத்தவர்களாகக் காணப்படுவார்களாயின் அவர்கள் மீளவும் சமூகத்துடன் சேர்ந்து வாழ்வதற்கு ஒரு சந்தர்ப்பத்தையெனும் வழங்கவேண்டும் அல்லவா! அதைத் தவிர்த்து வஞ்சிக்கும் மனப்பாங்குடனோ அரசியல் ஆதாயங்களுக்காகவோ அரசியல் கைதிக ளைப் பகடைக்காய்களாகப் பாவித்து தொடர்ந்து சிறைக்குள் அடைத்து வைத்து சிதைத்தழிப்பதால் நாட்டில் நல்லிணக்கம் ஏற்பட்டுவிடுமா?

*அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி அரசியல் தீர்மானம் ஒன்றை எடுப்பார் என எதிர்பார்த்திருந்த நிலையில் அவர், நீதிஅமைச்சர் மற்றும் சட்டமாஅதிபர் ஆகியோர் மீது பந்தைத் திருப்பிவிட்டு நல்லிணக்கக் கலந்துரையாடலுக்கு தமிழ்ப் பிரதிநிதிகளை அழைத்து அமர்த்திப் பேசுவது ஏற்புடையதா?

*குறைந்த பட்சம், எவ்வித எதிர்பார்ப்புக்களோ தடைகளோ இன்றி உடனடியாகவே நடைமுறைப்படுத்தக் கூடிய அரசியல் – கைதிகளது விடுதலை விடயத்தில் கூட நழுவல் போக்கை கடைப்பிடிக்கின்ற ஆட்சியாளர்கள், வேறெதனைப் பேசித் தீர்க்கப் போகிறார்கள்?

*எனவே, பாரிய பொருளாதார அரசியல் நெருக்கடியில் சிக்கியிருக்கும் அரசு, அதிலிருந்து தன்னை மீட்டெடுத்துக்கொள்வதற்கு உதட்டளவில் உச்சரிக்கப்படும் நல்லிணக்கப்பொறிக்குள் தடுமாறி வீழ்ந்து மீண்டும் மீண்டும் ஏமாறவேண்டுமா எனத் தமிழ்ப்பிரதிநிதிகள் நன்றாகச் சிந்தித்துச் செயலாற்றும் தருணமிது.

*ஆகவே, தமிழ்பிரதிநிதிகளும் புலம்பெயர் மக்களும் அரசுடனான இணக்கப் பேச்சுக்களில் தொடர்ந்து ஈடுபடுவதாயின் 32 தமிழ் அரசியல் கைதிகளையும் அரசியல்த் தீர்மானத்தின் அடிப்படையில் விடுதலை செய்யவேண்டும் என்பதை ஒருமித்த கருத்தாக முன்வைக்க வேண்டுமென, தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் வெகுமக்கள் சார்பாகக் கேட்டுக்கொள்கின்றோம்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert