April 25, 2024

இழப்பீட்டிற்காக போராடவில்லை!

அரச படையினரால் காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களுக்கு நீதி வழங்கத் தவறியதோடு இழப்பீடு பற்றி மாத்திரம் பேசும் காணாமல் போனோர் அலுவலகத்தை அகற்றுமாறு மன்னாரில் உள்ள உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2008ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட தனது 24 வயது மகனைத் தேடிப் போராடி வரும் மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி மானுவல் உதயச்சந்திரா, காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களுக்கு நட்டஈடு வழங்கப்படும் என நீதியமைச்சர் கூறுவதை நிறுத்துமாறும், மன்னாரில் இருந்து காணாமல்போனோர் குறித்த அலுவலகத்தை அகற்றுமாறும்  ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

“காணாமல்போனோர் குறித்த அலுவலகம் எங்கள் பிள்ளைகளுக்கு இழப்பீடு வழங்குவது அல்லது அவர்களுக்கு இறப்பு சான்றிதழ் வழங்குவது பற்றி பேசுகிறது. எங்களுக்கு இழப்பீடு அல்லது இறப்பு சான்றிதழ் தேவையில்லை. இழப்பீட்டுப் பேச்சுவார்த்தையை இப்போதே நிறுத்தி, மன்னாரில் உள்ள காணாமல்போனோர் அலுவலகத்தை அகற்றுங்கள் அல்லது அகற்றுவோம்.”

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வழங்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் தொடர் போராட்டம் 2,200 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில் நீதியமைச்சரும்  காணாமல்போனோர் அலுவலக அதிகாரிகளும் நாடு முழுவதும் சென்று நட்டஈடு வழங்குவது குறித்து பேசி வருவதாக மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கத்தின் தலைவி தெரிவித்துள்ளார். 

“இழப்பீடு அல்ல, அரச படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட எங்கள் பிள்ளைகளைத் திருப்பித் தருமாறு நீண்ட நாட்களாகக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அதைவிடுத்து இழப்பீடு பற்றி பேச நீதி அமைச்சருக்கு அதிகாரம் இல்லை. இழப்பீடு குறித்து பேசிக்கொண்டு மன்னார் பக்கம் வரவேண்டாம்.” 

“பிள்ளைகளைக் கண்டுபிடிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 148 பெற்றோர்கள் தங்கள் உறவினர்களுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் உயிரிழந்துள்ளனர். இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் விசாரணைகளில் எமக்கு நம்பிக்கை இல்லை. அதனால்தான் சர்வதேச விசாரணையை கோருகிறோம்.”

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert