April 20, 2024

திருவள்ளுவர் விழா – திருக்குறள் மனனப் போட்டி

யேர்மனி தமிழ்க் கல்விச் சேவை – ஐரோப்பா அமைப்புடன் சேர்ந்தியங்கும் டோட்முண்ட் வள்ளுவர் தமிழ்ப் பாடசாலை வருடாந்தம் நடத்தும் திருவள்ளுவர் விழா – திருக்குறள் மனனப் போட்டி 19.11.2022ஆம் திகதி டோட்முண்ட் நகரத்தில் மிகுந்த சிறப்புடன் நடைபெற்றது. வள்ளுவர் தமிழ்ப் பாடசாலையின் ஆசிரியை திருமதி. கிளி சிறீஜீவகன் அவர்களின் ஒழுங்கமைப்புடன் பல பிரிவுகளுக்கான போட்டிகளும் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.

பாரம்பரிய முறைப்படி மங்கலவிளக்கேற்றி நிகழ்வுகள் ஆரம்பமாகின. மங்கலவிளக்கினை (என்னிங்லோ) நாகபூசணி தமிழ்க் கல்வி மையத்தின் ஆசிரியை திருமதி.குமுதினி சுரேஜன், சங்கீத ஆசிரியை திருமதி.விஜயகலா கிருபாகரன், (ஒபகவுசன்) அறிவாலயம் தமிழ்ப் பாடசாலை ஆசிரியர் திரு.கே.ரி.நந்தகுமார், போகும் – விற்றன் தமிழ்ப் பாடசாலை ஆசிரியை திருமதி.சிவசக்தி ஜெயதேவன், யேர்மனி தமிழ்க் கல்விச் சேவையின் செயற்குழு உறுப்பினர் திருமதி.வித்யா சுபாஸ்கரன், யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர் திரு.சி.சிவவினோபன், (எசன்) தமிழ்ப் பாடசாலைப் பெற்றார் திருமதி.சாந்தி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் ஏற்றி வைத்தனர்.

முதலில் தமிழ்மொழி, தமிழின, தமிழ்க் கலை கலாசாரப் பண்பாட்டு வளர்ச்சிக்காகவும், விடுதலைக்காகவும் செயற்பட்டுத் தம்முயிர்களைத் தியாகம் செய்த அனைவருக்காகவும், உலகமெங்கும் சாந்தியும், சமாதானமும் நிலவ வேண்டியும் ஒரு நிமிட மௌன வணக்கம் நிகழ்த்தப்பட்டது.

தொடர்ந்து நிகழ்வுகளை மூத்த அறிவிப்பாளரும், ஊடகவியலாளருமான திரு.முல்லைமோகன் அவர்கள் தொகுத்து வழங்க மேடை நிகழ்வுகள் ஆரம்பமாகி நடைபெற்றன.

தமிழ் வாழ்த்தினை, வள்ளுவர் தமிழ்ப் பாடசாலையின் இசை வகுப்பு ஆசிரியை திருமதி. ஞானாம்பாள் விஜயகுமார் அவர்களின் மாணவிகள் செல்விகள்.சுப்ரஜா திருச்செந்தூரநாதன், கோசிகா சத்தியசீலன் ஆகியோர் இசைத்தனர்.

வரவேற்புரையை, யேர்மனி தமிழ்க் கல்விச் சேவை – ஐரோப்பா அமைப்பின் உபதலைவியும், (ஒபகவுசன்) அறிவாலயம் தமிழ்ப் பாடசாலையின் ஆசிரியருமான திருமதி.கலா மகேந்திரன் நிகழ்த்தினார்.

யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் உபதலைவரும், யேர்மனி தமிழ்க் கல்விச் சேவை – ஐரோப்பா அமைப்பின் செயற்குழு உறுப்பினரும், கவிஞருமான திரு.அம்பலவன் புவனேந்திரன் தலைமையுரை வழங்கினார். அவர் தனது தலைமையுரையில் கொரோனா தொற்றுநோய் காரணமாக தடைப்பட்டிருந்த திருக்குறள் போட்டி மீண்டும் மிகச்சிறப்பான முன்னேற்பாடுகளுடன் நடைபெறுவது பெருமகிழ்வைத் தருகின்றது. இன்று நடக்கும் திருவள்ளுவர் திருக்குறள் போட்டி 16ஆவது முறையாக நடைபெறுகின்றது. இன்று பாலர் தமிழ் அமுதம் சிறுவர்களுக்கான புத்தகமும் வெளியீடு செய்யப்பட்டு, அறிமுகப்படுத்தப்படுவது சிறப்பான நிகழ்வாகும். இதனைத் தொடர்ந்து பல புத்தகங்கள் கல்விச் சேவையால் வெளியீடு செய்யப்படும் என்று கூறித் தனது தலைமையுரையை நிறைவு செய்தார்.

யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர் திரு.சிவவினோபன் அவர்கள் திருக்குறள் பற்றிய கருத்துரையில் பெரியோரைத் துணைக்கோடல் என்ற அதிகாரத்தில் உள்ள சிறப்புகளை எடுத்துக்கூறினார்.

திருக்குறள் போட்டிக்கான நடைமுறைகள் பற்றி யேர்மனி தமிழ்க் கல்விச் சேவை – ஐரோப்பா அமைப்பின் தலைவர், வள்ளுவர் தமிழ்ப் பாடசாலையின் பொறுப்பாசிரியர் திரு.பொ.சிறீஜீவகன் விளக்கிக் கூறினார். மனனப் போட்டிகள் வைப்பதன் மூலம் பிள்ளைகளுக்கு திருக்குறளையும், திருவள்ளுவரையும் தெரியப்படுத்தப்படுகின்றன. அவர்களின் நினைவாற்றல்கள் அதிகரித்து வளர்க்கப்படுகின்றன. சமுதாயத்தில் மற்றவர்களுடன் சேர்ந்து ஒழுக்கமாகவும், பண்பாகவும் வாழ்வதற்கான வழிமுறைகள் கற்பிக்கப்படுகின்றன. இவற்றை மனதில் நிலைநிறுத்திப் பிள்ளைகளை திருக்குறள் போட்டிக்குப் பெற்றோரும், ஆசிரியர்களும் ஊக்கம் கொடுத்துத் தயார்படுத்திச் செயற்படுதல் நன்றாகும். பிள்ளைகளை மேடைக்கு அழைத்துவருவது பெற்றோர்களின் பொறுப்பாகும். பிள்ளைகள் தங்கள் திறைமைகளை வளர்த்து முன்னேறி உயர்வடைவது அவர்கள் பொறுப்பாகும் என்று கூறியதுடன், நடுவர்கள் எப்படி புள்ளிகளை இடுகின்றார்கள், அதற்கான விதிமுறைகள், பிள்ளைகளின் மனனம், உச்சரிப்பு, சபைநிலை, உடல்மொழிப் பாவனை என்பன பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார்.

தொடர்ந்து எட்டுப்பிரிவுகளுக்கான திருக்குறள் போட்டிகள் மிகவும் அமைதியாகவும், சுறுசுறுப்பாகவும் நடைபெற்றன. போட்டிகளுக்கு, யேர்மனி தமிழ்க் கல்விச் சேவை – ஐரோப்பா அமைப்பின் உபதலைவியும், ஒபகவுசன் அறிவாலயம் தமிழ்ப் பாடசாலையின் ஆசிரியருமான திருமதி.கலா மகேந்திரன், போகும் – விற்றன் தமிழ்ப் பாடசாலை ஆசிரியை திருமதி.சிவசக்தி ஜெயதேவன், சங்கீத ஆசிரியை திருமதி.விஜயகலா கிருபாகரன், கம்பனி முகாமைச் செயற்திட்ட உதவிச் செயற்பாட்டாளர் திருமதி.ரஜீவா ஜெயரங்கன், (ஒபகவுசன்) அறிவாலயம் தமிழ்ப் பாடசாலை ஆசிரியர் திரு.கே.ரி.நந்தகுமார், யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர் திரு.சிவவினோபன், (போகும்) பற்சிகிச்சை நிலையத்தின் முகாமைப் பொறுப்பாளர் திரு.ராகவன் சிறீஜீவகன், யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் உபதலைவர், யேர்மனி தமிழ்க் கல்விச் சேவை – ஐரோப்பா அமைப்பின் செயற்குழு உறுப்பினர், கவிஞர் திரு.அம்பலவன் புவனேந்திரன் ஆகியோர் நடுவர்களாக இருந்து சேவையாற்றினர்.

போட்டிகளுக்கு இடையில் கலைநிகழ்வுகளும், பாலர் தமிழ் அமுதம் நூல் வெளியீட்டு அறிமுக நிகழ்வும் நடைபெற்றன. கலைநிகழ்வில் சங்கீத ஆசிரியை திருமதி.விஜயகலா கிருபாகரன் அவர்களின் மாணவர்கள் செல்விகள். பிரீத்திகா சஜீவன், தர்வீனா சுதாகரன், ஜொகேனா கீதன், கிஷாணி பேரானந்தம், செல்வன்கள். பிரவீன் சஜீவன், தாமீரன் சுதாகரன், அச்சுதன் சுபாஸ்கரன் ஆகியோர் திருக்குறளின் கல்வி அதிகாரத்திலுள்ள குறட்பாக்களை, பல இராகங்களில் இசையமைத்துப் பாடினார்கள். செல்வி. மார்ட்டினா மனோகரன் வயலின் இசையையும், செல்வன். திலக்சன் கணேசலிங்கம் தவில் இசையையும் வழங்கினர். இந்நிகழ்வு எல்லோர் மனங்களையும் கொள்ளை கொண்டதாக அமைந்ததன. தொடர்ந்து ஆசிரியை திருமதி.விஜயகலா கிருபாகரன் அவர்களும் தமிழிசைப் பாடலை பாடி மேலும் சிறப்பாக்கினார். அவரை எல்லோரும் மகிழ்வாகப் பாராட்டப்பட்டினர்.

தொடர்ந்து பாலர் தமிழ் அமுதம் புத்தகம் பற்றிய கருத்துரையினை ஒபகவுசன் அறிவாலயம் தமிழ்ப் பாடசாலை ஆசிரியர் திரு.கே.ரீ.நந்தகுமார் அவர்கள் வழங்கினார். அவர் தனது உரையில் பாலர் தமிழ் அமுதம் எமது பிள்ளைகளுக்கு மிகமிக வேண்டப்பட்ட புத்தகமாகும். இதில் தெளிவான படங்களுடன் சொற்கள் பதியப்பட்டுள்ளன. ஒரே உறவுமுறைகளை கூறித் தெரிந்து வாழும் எமது பிள்ளைகளுக்கு தமிழர்களின் உறவு முறைகளுக்கான பெயர்கள் மிகச் சிறப்பாக தரப்பட்டுள்ளன. இச்சிறப்புக்கொண்ட புத்தகம் எல்லோர் வீடுகளிலும் இருப்பது சிறப்பாகும் என கூறினார். தொடர்ந்து பாலர் தமிழ் அமுதம் புத்தகத்தை திருமதி.கிளி சிறீஜீவகன் வெளியீடு செய்ய அதன் முதற் பிரதியை அவரது பேரன் செல்வன்.எலியாஸ்ராசா ஜெயரங்கன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து திருக்குறள் போட்டியில் பங்குபற்றிய பாலர்களும், சிறுவர்களும் தங்கள்தங்கள் பெற்றோர்களுடன் மேடைக்கு வந்து புத்தகத்தைப் பெற்றுக்கொண்டனர். மற்றும் தமிழார்வலர்களும், பெரியோர்களும் புத்தகத்தை பெற்றுக்கொண்டனர்.

இப் பாலர் தமிழ் அமுதம் கடந்த 06.10.2022ஆம் திகதி தமிழ்நாட்டின் தௌ்ளார் கிராமத்தில் அமைந்துள் இராசா நந்திவர்மன் கலை அறிவியற் கல்லூரியில் நடைபெற்ற உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் 15ஆவது பன்னாட்டுப் பண்பாட்டு மாநாட்டில், வவுனியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திரு.மங்களேஸ்வரன் அவர்களினால் வெளியீடு செய்யப்பட்டதுபற்றி திரு.முல்லைமோகன் சிறப்பாக எடுத்துக்கூறினார்.

தொடர்ந்து குருதிப்பரிமாற்ற வேதியல் மருத்துவ நிபுனர் திரு.பா. காந்தரூபன் அவர்கள் உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் திருக்குறள் மனித வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டுள்ள தன்மைகளை விஞ்ஞான உதாரணங்களுடன் கூறினார். நினைவாற்றல், கூடிவாழ்தல், மனமகிழ்வு என்ற தன்மைகளைப் பற்றி எடுத்துக்கூறினார்.

எஸ் ரீ எஸ் தமிழ்த் தொலைக்காட்சி இயக்குனர் திரு.எஸ்.தேவராஜா அவர்கள் பிள்ளைகளையும், பெற்றோர் களையும் வாழ்த்திப் பாராட்டிப் பேசினார்.

பெற்றோர் கருத்துரையினை மனநல மருத்துவ நிபுனர் திருமதி.சுபேஜன் அவர்கள் வழங்கினார். அவர் பிள்ளைகள் திருக்குறளை படிப்படியாகப் பாடமாக்கி சிறப்படைந் திருக்கின்றார்கள். இந்த நிகழ்வுக்கு எனது பிள்ளைகளைக் கூட்டிவருவதன் மூலம், இங்கு பிறந்து வளர்ந்த நானும் தமிழ்மொழியின் சிறப்புக்களை அறிந்துள்ளேன் எனக் கூறினார்.

திருக்குறள் போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கு திருவள்ளுவர் சிலைகள் பரிசாக வழங்கப்பட்டன. திருவள்ளுவர் சிலைகளை இந்தியாவிலிருந்து பெறுவதற்கான முழுச்செலவு களையும் நொய்ஸ் வாழ் பொறியியலாளர், தொழிலதிபர் திரு.மாவை.சோ.தங்கராஜா அவர்கள் பொறுப்பேற்றுப் பெற்றுக் கொடுத்தார். பிள்ளைகளுக்கான பரிசுகளை நடுநிலைவகித்த நடுவர்கள் யாவரும் வழங்கிவைத்தனர்.

தாயக மாணவர்களுக்கான கல்வி அபிவிருத்தி நிதிக்கான உண்டியல் சேகரிப்பில் 126 ஒயிரோ 16 சென்ற் சேகரிக்கப்பட்டன. இத்தொகை யேர்மனி தமிழ்க் கல்விச் சேவையின் தாயக மாணவர்களுக்கான கல்வி அபிவிருத்தி நிதியுடன் இணைத்து மன்னார் பகுதிப் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் வருமானம் குறைந்த பிள்ளைகளுக்கு நீண்டகால வைப்பில் இடப்பட்டு வழங்கப்படவுள்ளன.

இறுதியாக நிகழ்வின் பொறுப்பாளர் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவடைந்தன.

திருவள்ளுவர் விழா – திருக்குறள் மன்னப் போட்டி நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற அனுசரணைகள் வழங்கியோர்.
யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம். உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க யேர்மனிக்கிளை. எஸ் ரீ எஸ் தமிழ் தொலைக்காட்சி நிறுவனம். மண் கலை இலக்கியச் சஞ்சிகை யேர்மனி.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert