April 25, 2024

கைகளால் தோளை அணைத்தவாறு கழுத்தை நெரிக்கும் அரசியல்! பனங்காட்டான்


பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்கிறது. காணாமலாக்கப்பட்டோர் என எவரும் இல்லையென்று அறிவிக்கப்படுகிறது. மாகாண சபைகளுக்கும் உள்ளூராட்சிச் சபைகளுக்கும் எப்போது தேர்தல் என்பது தெரியாது. போர்க்குற்ற பொறுப்புக்கூறலுக்கும் சர்வதேச நீதி விசாரணைக்கும் முழு மறுப்பு. இவை அனைத்துக்கும் சர்வரோக நிவாரணியாக புதிய அரசியலமைப்பு ஒரு வருடத்துள் வரப்போகிறதாம்! இதனைத் தமிழர் நம்ப வேண்டுமாம்!

ஓர் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் அல்லது ஓர் ஆட்சித் தலைவர் பதவிக்கு வந்தால், அதன் முதல் நூறு நாட்கள் முக்கியமானதாகப் பார்க்கப்படுவதுண்டு. அதற்கு ஏற்றாற்போல பதவிக்கு வருபவர்களும் தங்களின் முதல் நூறு நாள் திட்டத்தை முற்கூட்டியே அறிவிப்பர். 

ஆனால், இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவ்வாறான கடப்பாடு எதுவும் கிடையாது. காரணம், அவர் வகிக்கும் பதவி தேர்தல் மூலம் மக்களின் வாக்கினால் பெற்றதல்ல.

இவர் 2020ம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் தோல்வி கண்டவர். இவரது தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி ஓர் ஆசனத்தைக்கூட பெறவில்லை. ஜே.ஆர்.ஜெயவர்த்தன உருவாக்கிய அரசியலமைப்பு வழங்கிய தேசியப்பட்டியலூடாக 2021 யூன் 23ல் நாடாளுமன்ற உறுப்பினரானார். 

தெற்காசியாவின் அதிகார பலமும், ஊழல் மிக்க அரசியல் வம்சமுமான ராஜபக்சக்களுக்கு எதிராக சுனாமி போன்று எழுந்த மக்கள் பேரெழுச்சி ரணிலுக்கு அதிர்ஸ்ட தேவதையானது. 

இந்த ஆண்டு மே மாதம் 12ம் திகதி பிரதமராக நியமனமாகி, யூலை மாதம் 13ம் திகதி ஜனாதிபதியாக நியமனமாகி, யூலை 20ம் திகதி நாடாளுமன்ற வாக்கெடுப்பால் ஜனாதிபதியாகி, மறுநாள் அதிகாரபூர்வமாக இப்பதவியில் அமர்ந்த ரணில் விக்கிரமசிங்க நூறு நாட்களைப் பூர்த்தி செய்துவிட்டார். இந்தக் காலத்தில் இவரது சாதனைகள் என்ன?

எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் பங்குபற்ற பிரித்தானியாவுக்கும், ஜப்பானின் முன்னாள் பிரதமர் சின்ஸோ அபேயின் இறுதிச் சடங்கில் பங்குபற்ற ஜப்பானுக்கும் விஜயம் செய்தார். ஆசிய அபிவிருத்தி வங்கிக் கூட்டத்தில் கலந்து கொள்ள பிலிப்பைன்ஸ் போனார். எகிப்தில் இடம்பெற்ற காலநிலை மாநாட்டில் கடந்த வாரம் பங்குபற்றினார். முதல் நூறு நாட்களும் நான்கு நாடுகளுக்குப் பயணம் செய்த ஜனாதிபதி என்பது சிலவேளை ஒரு சாதனையாக அமையலாம்.

இதற்கும் அப்பால் என்று பார்ப்பதற்கு செய்யாதவைகளே அதிகமுண்டு. பயங்கரவாத தடைச் சட்டத்துக்குப் பதிலாக பிரித்தானியாவிலுள்ளது போன்ற புதிய சட்டம் வரப்போவதாகக் கூறினார். அதனைக் காணவில்லை. மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறும் சாத்தியக்கூறுகள் தெரியவில்லை. மாகாண சபைகளுக்கு தேர்தல் நடைபெற்றால் அந்தந்த மாகாண உள்;ராட்சிச் சபை உறுப்பினர்களை அதற்கு நியமிக்கப் போவதாகவும் ஒரு அறிவிப்பு வந்துள்ளது. 

நாட்டிலுள்ள 341 உள்;ராட்சிச் சபைகளுக்கான தேர்தல்களும் பின்போடப்பட்டுள்ளன. இவற்றுக்கு தேர்தல் எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட பின்னரே தேர்தல் நடைபெறும். காணாமலாக்கப்பட்டோரின் விவகாரத்துக்குத் தீர்வாக அப்படியாக எவரும் இல்லையென்று அதற்கான அலுவலகத்தின் தலைவர் கை விரித்துள்ளார்.

ஜெனிவா தீர்மானம் மீண்டும் மீண்டும் கேட்கும் போர்க்குற்ற பொறுப்புக் கூறலுக்கும், சர்வதேச நீதிவிசாரணைப் பொறிமுறைக்கும் மறுப்பே பதிலாக வருகிறது. 

நிலைமை இவ்வாறிருக்க, தீர்க்கப்படாத அரசியல் பிரச்சனைகளுக்கு ஒரு வருடத்துள் தீர்வு காணப்படுமென ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில்  உறுதியாகக் கூறியுள்ளார். இந்தக் கூற்றை அவரது நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச வழிமொழிந்து வருகிறார். இதற்கு முன்னதாக நியமிக்க வேண்டிய அரசியலமைப்புப் பேரவை முயற்சி இழுபறியிலுள்ளது. 

21வது திருத்தத்தை நிறைவேற்றியதன் முதன்மைப் பணியாக அரசியலமைப்புப் பேரவையே நிறுவப்பட வேண்டும். அதன் பின்னரே தேர்தல், காவற்துறை, கணக்காய்வு, மனித உரிமைகள், லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள், நீதி, தேசிய கொள்வனவு ஆகியவற்றுக்கான ஆணைக்குழுக்களை உருவாக்க முடியும்.

அரசியலமைப்புப் பேரவை பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், நாடாளுமன்ற சபாநாயகர் ஆகியோருடன், ஜனாதிபதி ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை நியமிக்க முடியும். பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவரும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமிப்பர். அத்துடன் சிறுகட்சிகள் நியமிக்கும் ஒருவரும், இலங்கை வர்த்தக சம்மேளனம், தொழில்சார் சங்கங்களின் அமைப்பு, பல்கலைக்கழக மானியங்களின் ஆணைக்குழு நியமிக்கும் ஒருவர் என மொத்தம் பத்து உறுப்பினர்களை கொண்டதாக பேரவை அமையும். 

அரசியலமைப்புப் பேரவை இப்போது நடைமுறைக்கு வந்துள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச கூறுகின்றார் ஆயினும், இதற்கான உறுப்பினர்கள் எவரும் இதுவரை நியமிக்கப்படவில்லை. எதிர்க்கட்சிகள் இவ்விடயத்தில் சாத்தியமாகச் செயற்படவில்லையெனக் கூறப்படுகிறது. 

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைக்கப் போவதாகவும் நீதியமைச்சர் அறிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோதபாய ராஜபக்ச புதிய அரசியலமைப்பை உருவாக்க ஒன்பது பேர் கொண்ட குழுவொன்றை அப்போது நியமித்ததை பலரும் ஞாபகத்தில் வைத்திருப்பர். இந்தக் குழு 272 பக்கங்களைக் கொண்ட புதிய அரசியலமைப்பு அறிக்கையை சமர்ப்பித்திருந்தது. அந்தக் குழுவில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட எவரும் இடம்பெறவில்லை. 

இந்தக் குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்படாது குளிரூட்டிக்குள் வைக்கப்பட்டது. எனினும், அதன் முக்கிய அம்சங்கள் இப்போது கசிந்துள்ளது. 

1987ம் ஆண்டு இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் கீழான 13வது திருத்தத்துக்கு அமைய உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைமையை நீக்க வேண்டும் – அதாவது இந்த முறைமைக்கு மக்கள் ஆதரவில்லையென்று பெரும்பான்மை உறுப்பினர்கள் அபிப்பிராயம் கொண்டுள்ளதாக இந்த அறிக்கை சுட்டியுள்ளது. அனைத்து மக்களும் சமத்துவமாக இருப்பதற்கு 13ம் திருத்தத்தின் கீழான மாகாண சபை முறைமை குந்தகமாக உள்ளது என்ற கருத்து இங்கே வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாகாண சபை முறைமை ஒரு குழுமத்தினருக்கு சலுகை வழங்குவது போன்று அமைந்துள்ளது என்று இந்தக் குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் கருதுவதாக இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சில உறுப்பினர்களின் பெயர்களும் அவர்களின் அபிப்பிராயங்களும் தெரியவந்துள்ளது. இக்குழுவில் இடம்பெற்ற ஒரேயொரு தமிழரான சட்டப் பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் 13ம் திருத்தத்தின் கீழான மாகாண சபை தக்கவைக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். 

ஜனாதிபதி சட்டத்தரணிகளான மனோகர டி சில்வா, சமந்தா ரத்வத்த, பேராசிரியர் ஜி.எச்.பீரிஸ் ஆகிய மூவரும் 13ம் திருத்தத்துக்கு பாதகமான கருத்தை முன்வைத்துள்ளனர். இலங்கையின் சுதந்திரம், இறையாண்மை, ஒற்றையாட்சி முறைமை, பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு 13ம் திருத்தம் ஏற்க முடியாதது என்ற கருத்தை இவர்கள் தெரிவித்துள்ளனர். 

நாட்டு மக்கள் ஒரு நேர உணவுக்குத் திண்டாடிக் கொண்டிருந்த காலகட்டத்தில், 158 மில்லியன் ரூபாவை இந்த அரசியலமைப்புக் குழு விழுங்கியுள்ள போதிலும், அதன் பணி இன்னமும் முடியவில்லையென கணக்காளர் நாயகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. 

கணக்காளர் நாயகத்தின் அறிக்கை உண்மையெனின், கோதபாய நியமித்த குழு இன்னமும் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதே அர்த்தம். அப்படியானால் புதிய அரசியலமைப்புக் குழுவொன்றை ரணிலினால் எவ்வாறு நியமிக்க முடியும்? சிலவேளை கோதபாய குழுவின் அறிக்கையை தூசு தட்டியெடுத்து அமுல்படுத்த  ரணில் விரும்புகிறாரோ தெரியவில்லை. அவ்வாறு செயற்படின் பொதுஜன பெரமுனவின் ஆதரவை பெறமுடியுமென நம்புகிறார் போலும். 

உள்;ராட்சிச் சபைகளின் உறுப்பினர்களது மொத்த எண்ணிக்கையை ஐம்பது வீதத்தினால் குறைப்பது, மாகாண சபை உறுப்பினர்களாக அந்தந்த மாகாண உள்;ராட்சிச் சபை உறுப்பினர்களை நியமிப்பது போன்ற திட்டங்களை ரணில் தரப்பு ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்தப் பின்னணியில் பார்க்கையில் புத்தம்புதிதாக உருவாகப்போகும் அரசியலமைப்பில் (1972ல் சிறிமாவோ பண்டாரநாயக்க உருவாக்கிய அரசியலமைப்பை 1978ல் ஜே.ஆர்.ஜெயவர்த்தன இல்லாற்செய்து புதியதை உருவாக்கியது போன்று) 13ம் திருத்தம் முற்றாக உள்வாங்கப்படுமா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. 

தம்மை நம்புமாறும், தமிழர் தரப்பு தம்மோடு இணைந்து செயற்பட வேண்டுமென்றும்  வேண்டுகோள் விடுக்கும் ரணில் விக்கிரமசிங்கவின் போக்கு நம்பிக்கையைத் தருவதாக இல்லை. அருகிருப்பவர் தோள்களில் கைகளைப் போட்டு நண்பராகக் காட்டிக் கொண்டு, குரல்வளையை நசுக்கும் அரசியலில் கை தேர்ந்தவரான ரணில் அதேபாணியில்தான் தமிழருக்கான அரசியல் தீர்வையும் வழங்கப் போகிறாரா?

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert