März 29, 2024

இலங்கையின் மோசமான பொருளாதார சூழ்நிலையில், தற்போதைய அரசாங்கம்,திவாலான பொருளாதாரத்தை மீட்டெடுப்பதிலேயே கவனத்தை செலுத்துகிறது. பொது மக்கள் தொடர்ந்தும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். எனவே இனப்பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடிய நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் ஜனாதிபதியாக செயற்பட்டு வரும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இல்லை என்று இந்தியாவின் தெ ஸ்டேட்ஸ்மன் என்ற செய்தித்தளம் கருத்துரைத்துள்ளது.

இதன் காரணமாக இலங்கையில் தமிழர்களுக்கான தீர்வை, இலங்கை அரசாங்கம் தவிர்த்து வருவதாக அந்த செய்தித்தளம் குறிப்பிட்டுள்ளது

கடந்த அக்டோபர் 6, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக 20 நாடுகள் வாக்களித்து தீர்மானத்தை நிறைவேற்றின. 2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவடைந்த பின்னர், போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறல் தொடர்பில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட 10ஆவது தீர்மானம் இதுவாகும்.

எனினும், இலங்கை அரசாங்கம், தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட குற்றங்களுக்கு இதுவரை பொறுப்புக்கூறவில்லை. போரிலும் அதன் பின்னரும் காணாமல் போன தங்களின் அன்புக்குரியவர்களுக்கு நீதி கோரி தமிழர்கள் 2,000 நாட்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

2018 ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசாங்கம் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தை அமைத்தது. எனினும் 2019 இல் ஆட்சி வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச,மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறலை சரிசெய்வதற்கான முன்னைய அரசாங்கத்தின் சர்வதேச கடப்பாடுகளுக்கு மதிப்பளிக்கப் போவதில்லை என்று திட்டவட்டமாக கூறிவிட்டதாக தெ ஸ்டேட்ஸ்மன் குறிப்பிட்டுள்ளது.

2020 இல், காணாமல் போனவர்கள் அனைவரும் இறந்துவிட்டார்கள், எனவே உறவினர்களுக்கு இறப்பு சான்றிதழ் வழங்கப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய கூறினார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பது முக்கியம்,எனினும் ஆதாரம் இல்லாமல் அவர்கள் இறந்ததாக கூறப்படுவதை, காணாமல் போனோரின் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் தெ ஸ்டேட்ஸ்மன் குறிப்பிட்டுள்ளது

இதேவேளை போர்க்குற்றங்கள் மற்றும் காணாமல் போனோர் தொடர்பான பொறுப்புக்கூறல் விடயத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், அரசியல் பிரச்சினையையும் தீர்க்க இலங்கை அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அந்த செய்தித்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert