April 19, 2024

பேராசிரியர் தனபாலசிங்கம் இராஜேஸ்வரன் அவர்களுக்கு “நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு

பேராசிரியர் தனபாலசிங்கம் இராஜேஸ்வரன் அவர்களுக்கு “நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு.

அவுஸ்திரேலியா பேர்த் நகரத்தில் வாழ்ந்த தேசியச்செயற்பாட்டாளர் பேராசிரியர் தனபாலசிங்கம் இராஜேஸ்வரன் அவர்கள்,  சாவடைந்தார் என்ற செய்தி எம்மைப் பெருந்துயரில் ஆழ்த்தியிருக்கிறது.

அவுஸ்திரேலியா கேட்டின் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பேராசிரியரான ராஜ் இராஜேஸ்வரன் அவர்கள், தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் கொண்ட பற்றுறுதி காரணமாகத் தன்னை ஒரு தேசியச்செயற்பாட்டாளராக அவுஸ்திரேலியா தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவில் தன்னை இணைத்துக் கொண்டவராவார்.

விடுதலைப்போராட்டம் வீச்சுப்பெற்றிருந்த காலத்தில், தாயகமக்கள் பொருளாதாரத் தடையினால் இன்னல்களை அனுபவித்த வேளையில் பொருளாதாரரீதியாகவும் துறைசார்பட்டறிவு ஊடாகவும் தனது பங்களிப்பைத் தாயகத்திற்கு வழங்கியிருந்தார். 

கிளிநொச்சி மாவட்டத்தின் அறிவியல்நகர்ப் பகுதியில் பல்கலைக்கழகத்திற்கான கட்டுமானப்பணி முன்னெடுக்கப்பட்ட காலப்பகுதியில், இவர் தாயகத்திற்கு நேரடியாகச் சென்று பொறியியல் துறையினை உருவாக்குவதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். 

அத்துடன் தமிழீழப் பொருண்மிய மதியுரையகத்தின் அவுஸ்திரேலியாக் கிளையின் பணிகளைப் பொறுப்பெடுத்துத் தாயகக் கட்டுமானத்தை ஒருங்கிணைத்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாயபீடத்துடன் இணைத்துத் தாயகப் பகுதிகளுக்கான தற்சார்புப் பொருளாதார மேம்பாட்டிற்கான பல திட்டங்களை உருவாக்குவதில் தனது பங்களிப்பைச் செலுத்தியிருந்தார்.

புலம்பெயர் நாடுகளில் வாழும் துறைசார் நிபுணர்களை ஒருங்கிணைத்து, தாயக மேம்பாட்டுத் திட்டங்களை வடிவமைப்பதிலும் தாயகத்திலிருந்து இளையோரை புலம்பெயர் நாடுகளுக்கு அழைத்துவந்து நவீன தொழில்நுட்பங்களைக் கற்கவைப்பதிலும் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இவர், 2009 ஆயுத மௌனிப்பிற்குப் பின்னரும் தமிழர்களின் விடுதலையை வென்றெடுக்கும் போராட்டப் பயணத்தில் அவுஸ்திரேலியா தமிழர் பேரவையை உருவாக்குவதில் பெரும் பங்காற்றியிருந்தார்.

இத்தகைய விடுதலைப்பற்றுறுதியுடன் இறுதிவரை செயற்பட்ட செயற்பாட்டாளரைத் தமிழ்மக்கள் இழந்து நிற்கின்றனர். இவரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களின் துயரில் நாமும் பங்கெடுத்துக் கொள்வதுடன் பேராசிரியர் தனபாலசிங்கம் இராஜேஸ்வரன் அவர்களது தேசப்பற்றுக்காகவும் தமிழினத்திற்கு ஆற்றிய பணிக்காகவும் “நாட்டுப்பற்றாளர்” என மதிப்பளிப்பதில் நாம் பெருமையடைகின்றோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert