April 19, 2024

அஸ்வின் சுதர்சனின் 6 ஆண்டுகள் நினைவேந்தல்!

மறைந்த ஊடகவியலாளரும் கேலிச்சித்திர கலைஞருமான அஸ்வின் சுதர்சனின் 6 ஆண்டுகள் நினைவேந்தல் நிகழ்வும், அவர் ஞாபகார்த்த ஊடக கற்கை மாணவருக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (25.09.2022) யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நடைபெறவுள்ளது. 

இலங்கை ஊடக அரங்கில் கருத்தாளமிக்க மற்றும் தீர்க்கதரிசனம் கூறும் கார்ட்டூன்களால் அனைவரையும் கவர்ந்திழுத்து தனக்கெனவொரு முத்திரையை பதித்த முன்னணி கேலிச்சித்திரக்கலைஞர் அஸ்வின் சுதர்சன் மறைந்து ஆறு ஆண்டுகளான நிலையில், அவரை நினைவுகூறும் முகமாக யாழ். ஊடக அமையத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 25.09.2022 அன்று பி.ப.3.00 மணிக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ளது. 

இதில் அஸ்வின் குறித்த ஞாபகார்த்த உரைகள் இடம்பெறவுள்ளதுடன் சிறப்பாக அஸ்வினின் குடும்பத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஊடக கற்கைநெறியை தொடரும் மாணவர்களில் தெரிவு செய்யப்பட்ட தேவையுடைய மாணவருக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது. 

கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் நமது ஈழநாடு அனுசரனையுடன் ஆரம்பிக்கப்பட்டு ஆண்டுதோறும் வழங்கப்பட்டுவரும் அஸ்வின் ஞாபகார்த்த புலமைப்பரிசில் திட்டத்தில் இம்முறை யாழ்.பல்கலைக்கழகத்தினால் தெரிவு செய்யப்பட்ட ஊடக கற்கையில் சிறப்பு கலைமாணியாக இரண்டாம் ஆண்டில் கல்வியைத்தொடரும் மாணவி ஸ்ரீபன் நத்தாசா அவர்களுக்கு கற்றல் ஊக்குவிப்புக்கான பணத்தொகையாக ரூபா 50 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.

யாழ்.ஊடக அமையத்தினால் முன்னெடுக்கப்படும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு அஸ்வினின் நினைவுகளை பகிர உங்கள் அனைவரிற்கும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. 

ஈழநாடு பத்திரிகையில் தனது ஊடகப்பயணத்தை ஆரம்பித்த அஸ்வின், வலம்புரி, சுடரொளி, வீரகேசரி, தினக்குரல் பத்திரிகைகளில் தனக்கான முத்திரிகைகளை பதித்துள்ளார். அதேவேளை வீரகேசரியின் யாழ்.ஓசை பதிப்பின் ஆசிரியராகவும் கடமையாற்றினார்.

இதில் இவர் எழுதிய கேட்டியளே சங்கதி என்ற பத்தி எழுத்து பல இடங்களிலும் எதிரொலித்தது. அந்த எழுத்துகள் ஓர் மௌனப் புரட்சியையும் செய்தது. இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனமும் சிறந்த ஊடகவியலாளர் விருதை கேட்டியளோ சங்கதி பத்திக்காக வழங்கிக் கௌரவித்தது.

இறுதியாக தினக்குரல் பத்திரிகையில் இவர் வரைந்த கருத்தாழமிக்க கார்ட்டூன்கள் வாசகர்களை மட்டுமின்றி அரசியல் தலைவர்களையும் பேசவைத்தது. அவரது காட்டூன்கள் பல இன்றை காலத்திற்கும் பொருத்தமான தீர்க்கதரிசன ஓவியங்களாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert