April 20, 2024

யாழில் பாணிற்காகவும் கொலை மிரட்டலாம்

யாழ்.மாவட்டத்தில் ஒரு இறாத்தல் பாணின் விலையை 200 ரூபாய்க்கும் மேல் அதிகரிக்கும்படி சிலர் தன்னை மிரட்டி வருவதாக மாவட்ட வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கந்தையா குணரத்தினம் தெரிவித்தார்.

நேற்று யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் ஊடகவியலாளரிடம் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்

மாவட்டத்தில் பெரும்பாலான வெதுப்பக உரிமையாளர்கள் எமது சங்கத்தின் கோரிக்கையை ஏற்று ஒரு இறாத்தல் பாணின் நிர்ணய விலை 200 ரூபாயாக விற்பனை செய்கிறார்கள். சிலர் அவ்வாறு விற்பனை செய்ய முடியாது விலையை அதிகரிக்குமாறு என்னை தொலைபேசியில் மிரட்டுகிறார்கள்.

தற்போதைய சூழ்நிலையில் ஒரு இறாத்தல் பாண் 200 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியும். எமது சங்கத்தில் இருக்கின்ற சிறு வெதுப்பாக உரிமையாளர்கள் 200 ரூபாய்க்கு இணங்கி விற்பனை செய்கின்ற நிலையில் சில பெரிய முதலாளிகள் விற்பனை செய்ய முடியாது என கூறுவதை ஏற்க முடியாது.

இதை நான் ஊடகங்கள் முன் கூறக்கூடாது என சில நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன அவ்வாறு அவர்களின் கோரிக்கையை ஏற்று மௌனமாக இருக்க முடியாது. ஏனெனில் யாழ்.மாவட்டத்தில் பாணின் விற்பனை விலை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து கூறியமையால் தான் 200 ரூபாய்க்கு பாண் விற்பனை செய்ய முடிந்தது.

ஆகவே ஒரு சிலரின் தேவைகளுக்காக பாண் விலையை அதிகரித்து ஏழை மக்களின் வயிற்றில் அடிக்க முடியாது என கூறிய அவர், பாணின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்குரிய மாற்று ஒழுங்குகள் தொடர்பில் ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert