April 25, 2024

தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – கனடாவில் சாணக்கியன்

இலங்கையினை விட்டு வெளியே வாழ்கின்ற இலட்சக்கணக்கான தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.கனடாவில் இடம்பெற்ற தமிழ் தெரு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “எனக்கு முன்னர் உரையாற்றிய ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் சொன்னார். கனடாவில் வீதி ஒன்றினை மறித்து தமிழ் திருவிழா செய்வதற்கு நாம் வளர்ந்துள்ளோம் என்று. உண்மையிலேயே நான் உங்களை வாழ்த்துகின்றேன். உங்களுக்கு பாராட்டுக்களை தெரிவிக்கின்றேன்.

இந்த உலகத்திலேயே நாடு இல்லாத இனம் என்று சொன்னால் அது எங்களுடைய தமிழ் இனம்தான். அது எங்களுடைய ஒரு துரதிஷ்ட வசம். உலகம் எல்லாம் அனைத்து நாடுகளிலும் நாங்கள் வாழுகின்றோம். அனைத்து நாடுகளிலும் எங்களுடைய நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் இருகின்றது. அனைத்து மாகாணங்கள், மாநிலங்களிலும் எங்களுடைய பிரதிநிதிகள் இருகின்றனர். ஆனால் இன்று வரை எங்களுக்கென்று ஒரு நாடு இல்லாமல் நாங்கள் இருகின்றோம்.

உங்களுக்கு தெரியும் கடந்த காலத்தில் யுத்தத்தினால் விரட்டியடிக்கப்பட்ட எங்களுடைய மக்கள் எங்களுடைய நாட்டில் இருந்து அகதிகளாக அனுப்பப்பட்ட மக்கள் இன்று உலகம் எல்லாம் அனைத்து நாடுகளிலும் சிறந்த இடத்தில் இருக்கின்றனர்.

இன்று இலங்கை அரசு தமிழர்களின் முதலீடுகளையே நம்பியிருக்கின்றது என சொன்னால் அது எங்கள் அனைவருக்கும் பெருமையான ஒரு விடயம். இலங்கையினை பொறுத்தவரையில் நான் அடிக்கடி சொல்லுகின்ற ஒரு விடயம். எல்லாம் விதி. நான் நாடாளுமன்ற உறுப்பினராக வர வேண்டும் என்பது விதி. இன்று நான் கனடாவிலிருந்து பேசுகின்றது விதி. அதைப்போல இலங்கையில் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு நிச்சயமாக கிடைக்கும். அது கிடைக்கும் வரை நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து போராட வேண்டும்

நான் விதியில் நம்பிக்கை இருக்கு என்று சொல்கின்றேன் என்று சொன்னால், எங்களுடைய நாட்டை விட்டு, எங்களுடைய பிரதேசங்களை விட்டு எங்களை விரட்டியடித்த கோட்டாபய ராஜபக்ஷ, அதே நாட்டினை விட்டு அகதியாக இன்னுமொரு நாட்டில் தஞ்சமடைந்துள்ளார்.

இன்று கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வாக்களித்த அதே மக்கள் நாட்டை விட்டு அவரை விரட்டியடித்திருக்கின்றார்கள். அதுதான் விதி. நாங்கள் எங்களுடைய நாட்டிலே ஒரு கௌரவமான அரசியல் தீர்வினை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.

அந்த கௌரவமான அரசியல் தீர்வின் ஊடாக எங்களுடைய நாட்டிலே வாழுகின்ற தமிழ் மக்களுக்கான நிரந்தரமான, சமாதானமான, ஒரு அமைதியான ஒரு சிறந்த எதிர்காலத்தினை அமைக்கும் வரை எங்களுடைய அரசியல் பயணம் தொடரும் என்பதனை இந்த இடத்திலே பகிரங்கமாக சொல்லி வைக்க விரும்புகின்றேன்.

இலங்கையினை விட்டு வெளியே வாழ்கின்ற இலட்சக்கணக்கான தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இலங்கையில் எங்களுடைய அரசியல் தீர்வினை பெறுவதற்கு கடந்த காலங்களில் எவ்வாறு ஒன்றாக செயற்பட்டு சாதித்தோமோ அதேபோன்று மீண்டும் ஒன்றுபட்டு சாதிக்க வேண்டும். இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் உங்களைத்தான் நம்பியிருக்கின்றார்கள். உங்களுடைய ஆதரவினைத்தான் எதிர்பார்க்கின்றார்கள். உங்களுடைய ஆதரவின் ஊடாகத்தான் நிரந்தரமான அரசியல் தீர்வு கிடைக்கும். அதுவரைக்கும் நாங்கள் அனைவரும் ஒன்றாக போராடுவோம். வாழ்க தமிழ்.“ எனக் குறிப்பிட்டிருந்தார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert