April 24, 2024

மலையகத்தில் சீரற்ற வானிலை! நான்கு பேர் உயிரிழப்பு: மூவரைக் காணவில்லை!

மலையகத்தில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை நால்வர் மரணித்துள்ளதுடன், மூவர் காணாமல் போயுள்ளனர்.

நோட்டன்-பிரிட்ஜ் டெப்லோ பகுதியில் நேற்று காலை ஏற்பட்ட மண்சரிவால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளன.

மண்சரிவில் சிக்கியே குறித்த நபர் உயிரிழந்துள்ளதுடன், அவரது சடலம் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் டெப்லோ குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் என காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை ஹட்டன் – பன்மூர் குளத்தில் வழுக்கி விழுந்து எபோட்சிலி தோட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 நாவலப்பிட்டி- கெட்டபுலா அக்கரவத்த பகுதியில் வெள்ளத்தில் சிக்கி  பெண்ணொருவரும் ஆண்கள் இருவரும் காணாமல் போயுள்ளனர்.

மேலும் நேற்று (1) அம்பகமுவ- பொல்பிட்டி பகுதியில் 5 வயது சிறுமி ஒருவரும் அவரது பாட்டியும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

மலையகத்தில் காலநிலை சீர்கேட்டின் காரணமாக பெய்து வரும் அடை மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் 02.08.2022 அன்று காலை முதல் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.

அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அத்தோடு மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டதன் காரணமாக சென்.கிளயார் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளமையும் குறிப்பிட்டதக்கது

இதேவேளை, நுவரெலியா – அட்டன் பிரதான வீதியில் தலவாக்கலை நகரத்திற்கு அண்மித்த பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பாதை ஊடான வாகனப் போக்குவரத்து முற்றாக தடைபட்டிருந்தது. பின்னர் பொலிஸாரும், பொது மக்களும் இணைந்து வீதியில் சரிந்துள்ள மண்ணை அகற்றி ஒரு வழி போக்குவரத்தாக மாற்றினர்.

நுவரெலியா  மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் அடை மழையால் ஆங்காங்கே மண்சரிவு அனர்த்தங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் நேற்று (01.08.2022) மாலை 3 மணியளவில் தலவாக்கலை நகரத்திற்கு அண்மித்த பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மரமும் சரிந்து விழுந்துள்ளது. மழை தொடர்ந்ததால் மீட்பு பணியும் தாமதித்தே ஆரம்பமானது.

இந்த மண்சரிவு காரணமாக சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரம் வரை போக்குவரத்து நெரிசல் காணப்பட்டமை குறிப்பிடதக்கது.

பாட்டியின் சடலம் அப்பகுதியில் உள்ள கால்வாய்க்கு அடியில் கண்டெடுக்கப்பட்டதுடன், பிரதேசவாசிகளும் பொல்பிட்டிய பொலிஸாரும் இணைந்து காணாமல் போன பேத்தியின் சடலத்தை தேடும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட பாட்டியின் சடலம் கினிகத்தேனை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கினிகத்தேனை விதுலிபுர டெப்லோ கிராமபகுதியில் மண்சரிவு ஏற்பட்டதன் காரணமாக இரண்டு வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளது. இதனால் இரண்டு வீட்டில் இருந்த ஆறு பேரில் 38 வயதான ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும், அவரை தேடும் பணியில் பொலிஸார் ஈடுப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், மண்சரிவு மற்றும் பாறைகள் சரிந்து வீதிகளில் விழுந்தமையால்  பல வீதிகள் மூடப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரஞ்சித் அழககோன் தெரிவித்தார்.

அட்டன் -கொழும்பு வீதியில் கினிகத்தேன தியகல பகுதியிலும் பாரிய மண்சரிவு இடம்பெற்றுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை மற்றும் பலத்த காற்றினால்  வட்டவளை பிரதேசத்தில் பல தாழ்நிலப் பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன.

கொட்டகலை- கொமர்ஷல் பகுதியிலுள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. குறித்த பகுதியிலுள்ள சிறிய ஆறு பெருக்கெடுத்தமை காரணமாக, சுமார் 50 வீடுகள் நீரில் மூழ்கியதாகவும் குறித்த வீடுகளில் வசித்தவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பொகவந்தலாவை  பிரசேத்தில் கெசல்கமுவ ஓயா பெருக்கெடுத்துள்ளமையால், பல இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

கினிகத்தேனை – பிட்டவல பிரதேசத்தில் மண்மேடு சரிந்து விழுந்தமையால், அட்டன்- கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அத்துடன், அட்டன்- கொழும்பு பிரதான வீதியின் அட்டன் தொடக்கம் கித்துல்கல வரையான பல பகுதிகளில் மரங்கள் வீதிகளில் முறிந்து விழுந்துள்ளதுடன், மண்மேடுகளும் சரிந்துள்ளன.

இதேவேளை, அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் ஆங்காங்கே மண்சரிவுகள் எற்பட்டுள்ளன. தலவாக்கலை நகரத்திற்கு அண்மித்த பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் அட்டன் நுவரெலியா பிரதான வீதியினூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மலையகத்துக்கான ரயில் சேவைகள் முழுமையாக முடங்கியுள்ளது. குறிப்பாக ரயில் பாதையில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதுடன், மண்மேடுகளும் சரிந்து விழுந்துள்ளது.

கொட்டகலை – தலவாக்கலை, கிரேட்வெஸ்டன், ரொசல்ல – வட்டவளை, வட்டவளை – கலபொட, இங்குருஓயா ஆகிய ரயில் நிலையங்களுக்கிடையில் இந்த அனர்த்தங்கள் பதிவாகியுள்ளன.

இதனால் கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரை பயணித்த ரயில், நாவலப்பிட்டி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை வரை பயணித்த ரயில், அட்டன் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இன்று கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரையும் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை வரை  பயணிக்கவிருந்த இரண்டு ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக ஆறுகள் நீரோடைகள் ஆகிய பெருக்கெடுத்துள்ளன.

நீரேந்தும் பிரதேசங்களில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதன் காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்ந்துள்ளன.

இதனால் கெனியன் நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவும், மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் மூன்று வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, நோர்ட்டன்பிரிட்ஜ் பகுதியில் அமைந்துள்ள விமல சுரேந்திர நீர்த்தேக்கப்பகுதியில் கடுமையான மழை பெய்து வருவதானால் அந்த நீர்த்தேக்கத்தில் ஆறு கதவுகள் ஊடாக நீர் வான்பாய்கின்றன.

மவுஸ்ஸாக்கலை, காசல்ரீ, லக்ஷபான, நவ லக்ஷபான ஆகிய நீர்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

எனவே நீர்த்தேக்கத்திற்கு கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert