April 18, 2024

ரணிலுடன் பேசத் தயார்! ஏன் ரணிலை ஆதரிக்கவில்லை? சம்பந்தன் விளக்கம்!!

ரணிலுடன் பேசத் தயார் எனவும் ரணில் மக்களால் விரட்டியடிக்கப்பட்ட ராஜபக்ஷகளின் பிரதிநிதி என்பதாலேயே ஆதரிக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

கொழும்பிலிருந்து வெளிவரும் வீரகேசரி நாளேடு கேட்ட கேள்விக்கு வழங்கிய பதிலேயே அவர் இக்கருத்தை வெளியிட்டார்.

மக்களால் விரட்டியடிக்கப்பட்ட ராஜபக்ஷக்களின் பிரதிநிதியாக ரணில் விக்கிரமசிங்க புதிய இடைக்கால ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டமையாலேயே நாம் அவரை ஆதரிப்பதில்லை என்ற தீர்மானத்தினை எடுத்திருந்தோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவின்றி புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவாகியுள்ள நிலையில் கூட்டமைப்பின் அடுத்தக்கட்ட அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் வினவியபோதே அவர் வீரகேசரிக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களில் பெருவாரியானவர்கள் எமக்கு ஆணை அளித்துள்ளார்கள். அவர்கள் நீண்டகாலமாக போராடி வரும் தமது அபிலாஷைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம். அந்த மக்களின் ஆணைபெற்றவர்கள் என்ற அடிப்படையில் நாமும் அந்த நிலைப்பாட்டில் பற்றுறுதியுடன் செயற்பட்டு வருகின்றோம். முயற்சிகளை மேற்கொள்கின்றோம்.

அந்த வகையில், இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, பாதிக்கப்பட்ட மக்களுக்கான பொறுப்புக்கூறல் உள்ளிட்ட மிக முக்கியமான விடயங்கள் தொடர்பில் நாம் புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ரணில் விக்கிரமசிங்கவுடனும் பேச்சுக்களை மேற்கொள்வதற்கு தயராகவே உள்ளோம்.

ஆனால், எமது அபிலாஷைகளைப் பெற்றுக்கொள்வதற்கான கொள்கைகளை, அடிப்படைக் கோட்பாடுகளை விட்டுக்கொடுக்க முடியாது என்பதில் திடமாகவே உள்ளோம். இந்த விடயத்தில் மாற்றமில்லை என்றார்.

ரணிலை ஏன் ஆதரிக்கவில்லை இதேவேளை, ரணில் விக்கிரசிங்கவுக்கு ஆதரவு அளிக்காத நிலையில் அவருடன் பேச்சுக்களை முன்னெடுப்பது சாத்தியமாகுமா என்று வினவியபோது, புதிய இடைக்கால ஜனாதிபதி தெரிவின்போது நாம் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்திருக்கவில்லை. இந்த நாட்டில் மக்கள் தன்னெழுச்சியாக ஒன்றுகூடி கோட்டாபய அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தினை தொடர்ச்சியாக நடத்திக்கொண்டு இருக்கின்றார்கள். இந்தப்பின்னணியில் தான் முதலில் மஹிந்த ராஜபக்ஷவும் பின்னர் பஷில் ராஜபக்ஷவும் இறுதியாக கோட்டாபய ராஜபக்ஷவும் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தினை ராஜபக்ஷக்களின் முழுமையான ஆதரவுடன் தான் ரணில் விக்கிரமசிங்க நிரப்புவதற்கு தயராகியிருந்தார். ஆரம்பத்தில் பிரதமர் பதவியைப்பெற்றுக் கொண்டவர் பின்னர் பதில் ஜனாதிபதியாகி தற்போது ஜனாதிபதியாகியுள்ளார். இது அரசியலமைப்பு முறையாக நடைபெற்றிருந்தாலும், தார்மீக அடிப்படையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முடியாது. ஏனெனில் மக்களின் விருப்புக்கு எதிரானதொரு செயற்பாட்டிற்கு நாம் துணைபோக முடியாது. அதுமட்டுமன்றி எமது கொள்கைகளுக்கு முரணாகவும் செயற்பட முடியாது. அந்த அடிப்படையில் தான் ராஜபக்ஷக்களின் பிரதிநிதியாக ரணில் விக்கிரமசிங்கவுக்கான ஆதரவினை தெரிவிக்கும் முடிவினை நாம் எடுத்திருக்கவில்லை.

அவர் ஜனாதிபதி பதவியில் அமர்ந்தால் ராஜபக்ஷக்களின் கை மீண்டும் ஓங்கிவிடும் என்பதால் அப்பதவியை ரணில் பெற்றுக்கொள்வதை தடுக்கும் முகமாக அவருக்கு எதிராக களமிறங்கிய வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் தீர்மானத்தினை எடுத்தோம். அந்த வகையில் எமது நிலைப்பாடு சரியானது என்றே கருதுகின்றேன்.

ரணிலுக்காக நீதிமன்றம் சென்றிருக்கின்றீர்களே? தற்போது, ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ள நீங்கள் 2018ஆம் ஆண்டு அவருக்காக நீதிமன்றத்திற்கு சென்றிருந்தீர்கள் அல்லவா? என்று வினா எழுப்பியபோது அதற்கு பதிலளித்த சம்பந்தன், “ஆம் நாம் 2018ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி, மஹிந்த ராஜபக்ஷவை அப்பதவிக்கு ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன நியமித்தமைக்கு எதிராக நீதிமன்றம் சென்றிருந்தோம்.

ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேன, அரசியலமைப்புக்கு முரணாக செயற்பட்டு மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டு வந்திருந்தார். ஆகவே, அரசியலமைப்புக்கு முரணான செயற்பாட்டை தடுத்து நிறுத்துவதற்கும், ஜனநாயகத்தினை பாதுகாப்பதற்காகவும் நாம் நீதிமன்றம் சென்றிருந்தோம்.

அதனைவிடுத்து, தனிநபர்களை அடிப்படையாக வைத்து நாம் நீதிமன்றத்தினை நாடியிருக்கவில்லை. ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதாக இருந்தால் அரசியலமைப்புச் சட்டங்கள் உட்பட சட்ட ஆட்சி முறையாக பின்பற்றப்பட வேண்டியது அவசியமாகும் மேலும் தெரிவித்திருந்தார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert