August 14, 2022

தெற்கின் சமூகம் உணர்ந்தால் மட்டுமே வடக்கின் சமூகத்தோடு கைகோர்க்க முடியும் – சத்திவேல் அடிகளார்

தெற்கின் சமூகம் உணர்ந்தால் மட்டுமே வடக்கின் சமூகத்தோடு கைகோர்க்க முடியும். புதிய அரசியல் கலாச்சாரத்தை கட்டி எழுப்ப முடியும்.

எதிர்காலம் எதிர் கால சந்ததியினர் சுதந்திரத்தை அனுபவிக்க முடியும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (05) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

குருநாகல் ஐஓசி பெட்றோல் நிலையத்தில் இராணுவ அதிகாரி பொதுமகன் மீது நடத்திய மிலேச்சதனமான தாக்குதல் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று மட்டுமல்ல நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவும் வேண்டும்.

இராணுவ அதிகாரியின் செயற்பாட்டை அமைதியுடன் அனுமதித்து நின்ற ஏனைய இராணுவத்தினரும் பொலிசாரும் தண்டனைக்குரியவர்களே.

இதே இராணுவம் வடகிழக்கில் நிகழ்த்திய கொடுமைகளுக்கு நீதி கேட்கும் குரலும் தெற்கின் சமூகத்தின் காதுகளுக்கும் எட்டவேண்டும். உணர வேண்டும். அது இதுவரை உணரப்படவில்லை.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்கள் குடும்பமாக வீதிக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். அரசு நாட்டின் வளங்களையும், பொருளாதாரத்தையும் சரியான வழியில் முகாமைத்துவம் செய்யாமையே இதற்கு காரணம்.

தன்னுடைய பிழைகளை திருத்திக் கொள்வதற்கு பதிலாக இராணுவத்தை வீதியில் இறக்கியிருப்பதும் அவர்கள் தமது படைபலத்தை பொதுமக்கள் மீது காட்டுவதும் அதிகரித்துள்ளன. இது இன்னும் ஒரு இரத்தம் சிந்துதலுக்கு வழி வகுத்து விடுமோ எனும் பயம் மக்கள் மத்தியிலே எழுந்துள்ளது.

வடகிழக்கில் இராணுவத்தினர் பொதுமக்களுக்கு எதிராக நிக ழ்த்திய வன்முறை சம்பவங்களே 30 வருட யுத்தத்திற்கு காரணம்.

அது மட்டுமல்ல அதே இராணுவம் யுத்த குற்றங்களையும் இழைத்துள்ளது. இன அழிப்பையும் அரச ஆதரவோடு நிகழ்த்தியுள்ளது. இதுவே தமிழர்களின் குற்றச் சாட்டு.

வடகிழக்கு எங்கும் பலவந்த கைதுகளும், காணாமல் ஆக்குதலும் மட்டுமல்ல சமூக கொலைகளும் நிகழ்த்தப்பட்டுள்ளன. இராணுவத்தினர் அதனை நிகழ்த்தியுள்ளனர் என்பது நிரூபிக்கப்பட்டும் உள்ளது உதாரணமாக செம்மணி, மிருசுவல் படுகொலைகளை நாம் குறிப்பிடலாம்.

இக்குறைகளுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படவும் இல்லை நீதிமன்றம் மரண தண்டனை கொடுத்த போது கூட அந்த மரணதண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கின்றார் அத்தோடு குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட இராணுவத்தினர் பதவி உயர்வு கொடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டிருக்கும் இதையெல்லாம் தெற்கின் சமூகம் பார்த்து மகிழ்ந்தது. வீரப்படையினர் என கொண்டாடினர்.

இறுதி யுத்தத்தின் பின்னர் இராணுவத்திடம் தனது உறவுகளை கையளித்த அன்னையர் கடந்த 13 வருட காலமாக எங்கள் பிள்ளைகளுக்கு, எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என கேட்கின்றனர். அது தெற்கு சமூகத்தின் காதுகளுக்கு எட்டவில்லை. நீதி கேட்போர் தேசத் துரோகிகளாகவும் பயங்கர வாதிகளாகவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

அது மட்டுமல்ல 1971, 1988/89 காலப்பகுதியில் இராணுவத்தின் முகம் என்னவென்று தெற்கின் சமூகத்திற்கு தெரிந்தும் இராணுவம் வடக்கில் நடத்திய வன் கொடுமைகளை அனுமதித்த பௌத்தப்பிக்குகள் ஆசீர்வதித்தனர். வடகிழக்கில் நடந்த உண்மையின் நேரடி சாட்சிகள் முன்வைக்கப்பட்ட போதும் அவற்றை ஏற்றுக் கொள்வதற்கு தெற்கின் சமூகம் ஆயத்தமாக இருக்கவில்லை.

இப்போது அதே இராணுவம் தெற்கில் ஆயுதங்களை தூக்கி நிற்கின்ற போது, நெஞ்சில் உதைக்கும் போது வலிக்கிறது. இதனைத் தான் அரசியல் கைதியான குட்டிமணி 1982ல் வெளிப்படையாக அறிவித்தார். வடக்கிலே இராணுவம் எதனை செய்கின்றதோ அது தெற்கிலும் நடக்கும் எனும் பொருள்பட கருத்துரைத்தார். அது நிதர்சனமாக நடந்து கொண்டிருக்கின்றது.

கடந்த 74 ஆண்டுகளாக இந்நாட்டை ஆட்சி புரிபவர்கள் மக்களுக்கு எதிரானவர்கள் என்பதை தமிழர்கள் பல தசாப்தங்களாக கூறி வந்தார்கள்.

பேரினவாத போதை ஊட்டப்பட்டதால் தெற்கு அதனை ஏற்கவில்லை. இப்போது அதை அரசு பசியையும், பட்டினியையும் நாட்டுக்கு தந்துள்ளது. ஆட்சியாளர்கள் தங்கள் பதவிகளில் மட்டும் நோக்காக கொண்டு செயல்படுகின்றார்.

தமிழர்களுக்கு எதிராக இராணுவம் புரிந்த பாரிய யுத்த குற்றங்களுக்கான நீதி தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டும். அரசியல் நீதியும் தமிழ் மக்களுக்கு உரியது.

இதனையும் தெற்கின் சமூகம் உணர்ந்தால் மட்டுமே வடக்கின் சமூகத்தோடு கைகோர்க்க முடியும். புதிய அரசியல் கலாச்சாரத்தை கட்டி எழுப்ப முடியும். எதிர்காலம் எதிர் கால சந்ததியினர் சுதந்திரத்தை அனுபவிக்க முடியும்.  

நாடு முழுவதும் தற்போது மக்கள் முகம் கொடுக்கின்ற பொருளாதார நெருக்கடிக்கு, நாட்டில் நீண்ட காலம் நிலவிய யுத்தமும் அதற்காக பல்வேறு நாடுகளால் கொடுக்கப்பட்ட அல்லது வாங்கி குவிக்கப்பட்ட இராணுவ தளபாடங்களும் அவற்றின் பராமரிப்பும் நாட்டின் அபிவிருத்திக்கு எவ்வகையிலும் தொடர்பற்ற இராணுவத்தை கொண்டிருகின்றமையுமே அடிப்படை காரணம். இதனை தெற்கு உணர வேண்டும்.

உலகின் அதி கூடிய இராணுவத்தை கொண்டிருக்கின்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை 14 ம் இடத்தை தமதாக்கியுள்ளது.

இந்த சுமையே மக்களை வீதிக்கு தள்ளியுள்ளது. அதற்கு சொந்தக்காரர்களே இன்று வரை நாட்டை ஆள்கின்றனர். முற்படையினர் சர்வாதிகாரத்தினதும் முதலாளித்துவத்தினதும் காவலர்களே என்பதை தெற்கு உணர்கின்ற காலமிது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert.