März 28, 2024

முதலில் மன்னிப்பு:பிறகு கோத்தா வெளியே!

இலங்கையில் மருத்துவர்கள் சட்டத்தரணிகளை உள்ளடக்கிய  Direction Sri Lanka என்ற சிவில் சமூக அமைப்பு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பதவி விலகவேண்டும் என மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தற்போது நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கும் தானும் காரணம் என்பதை பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ள ஜனாதிபதி தான் பதவி விலகவேண்டும் என விடுக்கப்படும் வேண்டுகோள்களை அலட்சியப்படுத்த முடியாது என மருத்துவர்கள் சட்டத்தரணிகளை உள்ளடக்கிய  சிவில் சமூக அமைப்புதெரிவித்துள்ளது.

நாட்டின் அரசியல் பொருளாதார சமூக நெருக்கடிக்கு தீர்வை காணும் விடயத்தில் இன்றுவரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை,நாளாந்தம் நிலைமை மோசமடைவது தேசத்தினதும் மக்களினதும் உயிர்வாழ்வதலிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

தற்போது பின்பற்றப்படும் அரைகுறை- அல்லது இடைக்கால நடவடிக்கைகள்  எரியும் பிரச்சினைகளிற்கு தீர்வை காணப்போவதில்லை என கருதுவதாக தொழில்சார்துறையினரை கொண்ட அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியும் அரசாங்கமும் எதிர்கட்சியும் இந்த விவகாரத்தை கையாளும் விதத்தினை நாங்கள் கடுமையாக கண்டிக்கின்றோம் அரசியல் பண மற்றும் தனிப்பட்ட ஆதாயங்களை அடைவதற்கு முயற்சி செய்யும் அனைத்து கட்சிகளும் மக்களின் அபிலாசைகளை விருப்பங்களை மறந்துவிட்டன போல தோன்றுகின்றது எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று ஜனாதிபதி உடனடியாக பதவி விலகவேண்டும்,இதுவே பொதுமக்களின் முதன்மையான வேண்டுகோள்  இந்த நெருக்கடி ஏற்படுவதற்கு தானும் காரணம் என்பதை ஜனாதிபதி வெளிப்படையாக ஏற்றுக்கொண்டுள்ளதால் அவர் உடனடியாக பதவி விலகவேண்டும் என அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert