März 29, 2024

ஆட்சிக் கவிழ்ப்பு அச்சத்தில் கோதாவின் அதிரடிக் களையெடுப்பு – பனங்காட்டான்


கோதா வீட்டுக்குப் போ என்ற எழுச்சி அவரின் சகோதரர்களையும் மருமக்களையும் மட்டுமன்றி, அவரால் பதவி வழங்கப்பட்ட பல படைத்துறை அதிகாரிகளையும் வீட்டுக்கு அனுப்ப ஆரம்பித்துள்ளது. இவ்வாறு வெளியேறும் – வெளியேற்றப்படும் ‚பிரமுகர்கள்‘ கோதா கோ ஹோம் பக்கம் திரும்புவார்களானால் என்ன நடைபெறும்? இதற்கான பதிலைச் சொல்லக்கூடிய ஒருவர் இப்போதைக்கு ரணில்தான். 

மார்ச் மாதம் 31ம் திகதி மிரிஹானையிலுள்ள கோதபாய ராஜபக்சவின் வீட்டுக்கு முன்னால் திடுதிப்பென ஆரம்பமான கோதா வீட்டுக்குப் போ (கோதா கோ ஹோம்) என்னும் மக்கள் எழுச்சி இந்த மாதம் 30ம் திகதியுடன் இரண்டு மாதங்களைப் பூர்த்தி செய்கிறது. 

கோதாவை இலக்கு வைத்து எறியப்பட்ட அம்பு திசை திருப்பப்பட்டு, இலக்கு மாறி – அவரை ஜனாதிபதி ஆசனத்தில் இருத்தி அழகு பார்த்த அண்ணன் மகிந்தவை மட்டுமன்றி அனைத்து ராஜபக்சக்களையும் வீடேக வைத்துவிட்டது. 

இந்த வீடேற்றம் தற்காலிகமானதா அல்லது நிரந்தரமானதா என்பதை இப்போது கூறமுடியாது. கடந்த தேர்தலில் பூச்சியத்தின் மன்னராக்கப்பட்ட ரணில், திடீரென துள்ளி எழுந்ததுபோல காலக்கிரமத்தில் ராஜபக்சக்களும் எழக்கூடும். அதற்காகவாவது இன்னும் சில காலம் ஒருவாறு தமது பதவியை தக்க வைத்திருக்க வேண்டுமென கோதபாய எண்ணுகிறார் போல் தெரிகிறது. அதற்கேற்றாற்போல ரணிலை பிரதமராக்கி, அரச வண்டியை இழுத்துக் கொண்டிருக்கிறார். 

சிங்கள தேசிய அரசியலில் சுட்ட மண்ணும் பச்ச மண்ணுமாக இருந்துவரும் இருவேறு கட்சிகளின் தலைகள், தங்கள் இருப்புக்காக இணைந்த கலப்பாட்சி இருவேறு திசைகளில் நகர்வதைக் காணமுடிகிறது. 

இதனால் தினமும் இரவு வேளையில் விசேட வர்த்தமானிகள், அவசரகால விதிகள் உருவாக்கலும் ரத்தாவதும், புதுப்புது உயர்மட்ட நியமனங்கள், அதற்கு நிகராக பலரது பதவிகள் பறிக்கப்படுவது, கோடிக் கணக்கான ரூபாவில் ஆளிழுப்புகள் என்பவற்றோடு ரொக்கட் வேகத்தில் விலைவாசி உயர்வும் பொருட்கள் தட்டுப்பாடும் காணப்படுகிறது. 

ஒன்றுக்கொன்று சோடி சேரமுடியாத இரண்டு மாடுகள், ஒற்றைத் திருக்கல் வண்டியை இழுத்தால் எப்படியிருக்குமோ அப்படித்தான் இலங்கையின் அரச சக்கரம் உருளுகிறது. 

மே மாதம் 9ம் திகதிய சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதில் மகிந்தவும் அவரது மகன் நாமலும் விதிவிலக்கல்ல. இவர்களது வெளிநாட்டுப் பயணங்களை தடைசெய்த நீதிமன்றம், கடவுச்சீட்டுகளையும் ஒப்படைக்க உத்தரவிட்டது. மகன் ஒப்படைத்துவிட்டார். அப்பா இழுத்தடிக்கிறார். முன்னாள் பிரதமர் – முன்னாள் ஜனாதிபதி என்ற கௌரவ பிரச்சனை தடுக்கிறது போலும். 

என்ன சொன்னாலும், இரத்தம் தண்ணீரிலும் தடிப்பானது என்பதால் தம்பி கோதாவின் கடைக்கண் பார்வை தமக்குக் கிடைக்கலாமென அண்ணன் மகிந்த எண்ணுகிறாரானால், அதிலும் தவறில்லை. இப்போது குடும்ப – நீதிமன்ற பிரச்சனை, நாட்டுப் பிரச்சனையைவிட மேலோங்கியுள்ளது. இந்தக் கட்டத்தில் இரட்டைப் பிரஜாவுரிமைக்காரரான பசில் ராஜபக்ச தமது வழமையான திரைமறை வேலைகளை தொடர ஆரம்பித்துள்ளார். 

ரணிலை எவ்வாறு பிரதமர் கதிரையிலிருந்து இறக்குவது, இரட்டைப் பிரஜாவுரிமை உள்ள தம்மை புதிய இருபத்தோராவது அரசியல் திருத்தத்திலிருந்து எவ்வாறு காப்பாற்றுவது என்ற விடயங்களில் மிகக் கரிசனையோடு இவர் செயற்படுகிறார். 

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை நீக்கி அவற்றை நாடாளுமன்றத்துக்கு பாரப்படுத்தி விட்டால் தமது எதிர்காலம் சுபீட்சமாகும் என்ற நப்பாசையில் இருபத்தோராவது திருத்தத்தை துரிதமாக நிறைவேற்ற வேகமாக இயங்குகிறார் ரணில். 

நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுள்ள பொதுஜன பெரமுனவின் ஆதரவின்றி இதனை நிறைவேற்ற முடியாதென்பதால், பசில் தமது பணியை கச்சிதமாகக் கவனிப்பாரென்ற நம்பிக்கையில், இருபத்தோராவது திருத்தத்தைத் தாம் ஆதரிப்பது போன்று வெளிக்காட்டுகிறார் கோதபாய. இந்த அரசியல் குறளி விளையாட்டுகளை குள்ளநரி ரணில் புரியாதவரல்ல. இன்னும் சில மாதங்களில் கோதாவும் ரணிலும் கிளித்தட்டு விளையாடும்போது சகலதும் அம்பலமாகும். 

பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவாசம் ரணிலை நோக்கி சூடாகத் தன் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இவரை பிரதமர் பதவிக்குக் கொண்டு வந்தது பொருளாதார நெருக்கடியை நீக்கவே தவிர புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கு அல்ல என்ற இவரின் கருத்தினூடாக ரணிலை பொதுஜன பெரமுன எங்கு வைத்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். 

சமகாலத்தில் சில முக்கிய களையெடுப்புகளில் கோதபாய இறங்கியுள்ளார். கடந்த இரண்டு வருடங்களில் தம்மால் அரச உயர் பதவிகளுக்கு கொண்டு வரப்பட்டவர்களில் சிலரை இலகுவாக வீட்டுக்கு அனுப்பிவைக்கும் செயற்பாடு இது. 

படைத்துறைகளைச் சேர்ந்த – தமிழின அழிப்பில் முனைப்புடன் செயற்பட்ட – தம்முடன் இணைந்து முள்ளிவாய்க்காலில் மனித குலத்துக்கு எதிராக இயங்கிய சுமார் முப்பதுக்கும் அதிகமானவர்களை பல முக்கியமான பதவிகளில் கோதபாய அமர்த்தியிருந்தார். இதனை ஜெனிவா மனித உரிமைகள் பேரவை, சர்வதேச மன்னிப்புச் சபை உட்பட பல அனைத்துலக அமைப்புகள் கண்டித்திருந்தன. 

வழமையாக சிவில் சேவை அதிகாரிகள் வகிக்கும் பல அமைச்சுகளின் செயலாளர் பதவிகளை  தமது கூட்டாளிகளான ராணுவத்தினருக்கு கோதா வழங்கினார். அதுமட்டுமன்றி துறைமுக சேவை, விமானப் போக்குவரத்து, கூட்டுத்தாபனங்களின் தலைமைப் பதவிகள் என்று பலவற்றுக்கு தமது படைத்துறை நண்பர்களையே நியமித்தார். 

கோதா கோ ஹோம் போராட்டத்தின் விளைவாக இவர்களுள் முக்கியமான சிலர் இந்த வாரத்தில் பதவி பறிக்கப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க, பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜெகத் அல்விஸ், வெளியுறவு அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே ஆகியோர் இதுவரை பதவியிழந்த முக்கியமான மூவர். டோக்கியோவில் இலங்கையின் தூதுவராக இருந்த சஞ்சீவ குணசேகர பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

கோதாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக – வலது கரமாக இயங்கிய பாதுகாப்புச் செயலாளர் சவேந்திர சில்வா இந்த மாதம் 31ம் திகதியுடன் அப்பதவியிலிருந்து நீங்குகிறார். இவர் தாமாகவே பதவி விலகுவதாகக் கூறப்படினும், கோதபாயவின் கோரிக்கைக்கு இணங்கியே (மகிந்தவுக்கு நடந்தது போன்று) பதவி விலகுகிறார். இப்போதைக்கு சில மாதங்களுக்கு முப்படைகளின் பிரதானியாக கடமையாற்றிவிட்டு அதிலிருந்தும் விலக்கப்படுவாரென்பது தெரிந்த விடயம். 

இந்த மாத ஆரம்பத்தில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவர் ஜூலி சங், சவேந்திர சில்வாவை தனிமையில் சந்தித்து உரையாடினார். வெளிநாட்டுத் தூதுவர் ஒருவர் ராணுவத் தளபதியை சந்தித்து களநிலைவரம் பற்றி உரையாடுவது வழமையானதல்ல. ராஜரீக (டிப்ளோமசி) நடைமுறைக்கு இது முரணானது. இச்சந்திப்பையிட்டு கோதபாய சற்றே சலனமடைந்திருந்தார். 

இந்தச் சந்திப்பின் பின்னர் மே மாதம் 9ம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டக்காரர் மீதான தாக்குதல், அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வீடுகள் எரிக்கப்பட்டது சேதமாக்கப்பட்டது போன்ற விடயங்களில் ராணுவத் தளபதி நடவடிக்கை எடுக்கத் தவறியதாக பல குற்றச்சாட்டுகள் பகிரங்கமாக வைக்கப்பட்டன. அமெரிக்க தூதுவருக்கும் சவேந்திர சில்வாவுக்குமிடையிலான சந்திப்பின் பின்னணியில் இவ்வாறு நடவடிக்கை எடுக்கத் தவறியிருக்கலாம் என்ற சந்தேகம் கொழும்பின் சில பிரதான ஊடகங்களில் சுட்டிக்காட்டப்பட்டது. இவ்வாறான கருத்தை ஊடகங்களுக்கு கோதபாய தரப்பே கசிய விட்டதாகவும் சொல்லப்படுகிறது. 

இது உண்மையாக இருக்குமானால், சிலவேளை ஆட்சிக்கவிழ்ப்பினூடாக ராணுவப் புரட்சி ஒன்றுக்கு திட்டமிடப்படுகிறதா என்ற கேள்வி கோதபாயவின் சுற்றுவட்டத்துக்குள் எழுந்தது. இதன் முன்னெச்சரிக்கையாக சவேந்திர சில்வா ராணுவத் தளபதி பதவியிலிருந்து இறக்கப்படுகிறார். ராணுவ மேஜர் ஜெனரலாகவிருக்கும் விகுன் லியனகே இப்பதவியை யூன் 1ம் திகதி ஏற்கவுள்ளார். 

1980ன் பிற்பகுதியில் ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியாகப் பதவியேற்றபோது, பிரதமர் பதவிக்கு உயர் தகுதியான பலர் அவரது கட்சியில் இருந்தபோதும், தபால் அமைச்சராகவிருந்த ஷசப்பாணி| அரசியல்வாதியான டி.பி.விஜேதுங்கவை பிரதமர் பதவிக்கு நியமித்தார். தமது பதவியை கவிழ்க்கும் சாதுரியமில்லாதவரை பிரதமராக நியமித்தால் தமது பதவிக்கு ஆபத்தில்லையென்ற எண்ணமே விஜேதுங்க தெரிவுக்கிருந்த ஒரேயொரு தகுதி. 

இதே பாணியில்தான் விகும் லியனகேயை புதிய ராணுவத் தளபதியாக தேடிப்பிடித்து நியமித்துள்ளார் கோதபாய. பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்னதான் இப்போது எஞ்சியிருக்கும் கோதாவின் கூட்டாளி. மே மாதம் 9ம் திகதி அசம்பாவிதத்தின்போது பொலிசார் சில நடவடிக்கைகளை எடுக்க முனைந்தவேளை – இது அண்ணன் தம்பி பிரச்சனை, இதற்குள் தலையிட வேண்டாம் என்று கமால் குணரட்ன ஆலோசனை வழங்கியதும் இப்போது பகிரங்கமாகியுள்ளது. இதனைச் சாதமாக கோதபாய பார்ப்பாரானால் கமாலின் தலை உருளாது. வேறு மாதிரிப் பார்ப்பாரானால் இவரும் விரைவில் வீட்டுக்குச் செல்ல வேண்டியவராவார். 

மொத்தத்தில் ஒன்றுமட்டும் நன்கு தெரிகிறது. கோதா வீட்டுக்குப் போ என்ற எழுச்சி அவரின் சகோதரர்கள் மருமக்களை மட்டுமன்றி, அவரால் பதவி வழங்கப்பட்ட பல படைத்துறை அதிகாரிகளையும் வீட்டுக்கு அனுப்ப ஆரம்பித்துள்ளது. 

இவ்வாறு வெளியேறும் – வெளியேற்றப்படும் ஷபிரமுகர்கள்|, கோதா கோ ஹோம் பக்கம் திரும்புவார்களானால் என்ன நடைபெறும்? இதற்கான பதிலைச் சொல்லக்கூடிய ஒருவர் இப்போதைக்கு ரணில்தான். 

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert