März 29, 2024

சிவகாமசுந்தரி தியாகராஜா அவர்களுக்கு ‘‘நாட்டுப்பற்றாளர்’’ மதிப்பளிப்பு.

தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில்  ஜேர்மன் நாட்டில் மன்கைம் நகரத்தில்,  தன்னையும் ஒரு தேசியச் செயற்பாட்டாளராய் இணைத்துக்கொண்டு விடுதலைக்காகத் தொடர்ந்து பயணித்த சிவகாமசுந்தரி ஆசிரியர்  என்று பலராலும் அறியப்பட்டவரை 18.05.2022  அன்று நாம் இழந்துவிட்டோம்.

தமிழீழ தேசம் விடுதலைக்காகப் போராடுகின்றபோது, பல அடக்குமுறைகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் ஒரு தாயாக எமது  விடுதலைப்போராட்டத்திற்கு எத்தகைய பங்களிப்பை வழங்கவேண்டும் என்பதை நன்குணர்ந்து செயற்பட்டவராவார்.

நெருக்கடியான இராணுவ ஆக்கிரமிப்புக் காலங்களில் போராளிகளுக்கான காப்பரணாகவிருந்து உணவு, தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து விடுதலைப்போராட்டத்திற்குப் பலம் சேர்த்தவராவார்.

தாயகத்தைவிட்டுப் புலம்பெயர்ந்து ஜேர்மனியில் வசித்தபோதும், எமது மக்களின் விடுதலைக்காகவும் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காகவும் தொடர்ந்தும் செயற்படவேண்டும் என்பதற்காக தேசிய செயற்பாட்டாளராகத் தன்னை இணைத்துக்கொண்டு அர்ப்பணிப்புடன் செயற்பட்டது மட்டுமல்லாது, எமது மாணவர்களின் தாய்மொழிக் கல்வி வளர்ச்சிக்காகக் கல்விக்கழகத்தின் ஊடாகத்  தமிழாலயத்தில் இணைந்து நீண்டகாலம் செயலாற்றிய நல்லாசானாவார்.

மாவீரர்களின் தியாகங்களையும், தாயகமக்களின் விடுதலை அவாவையும் தன்னுள்தாங்கித் தொடர்ந்தும் அர்ப்பணிப்போடு தேசியப்பணியாற்றிய  இவரை  நாம் இழந்துவிட்டோம். அன்னாரின் இழப்பு தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கும் இவரிடம் கல்விகற்ற மாணவர்களுக்கும் குடும்பத்தினரிற்கும் பேரிழப்பாகும். இவரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களின் துயரில் நாமும் பங்கெடுத்துக் கொள்வதுடன் சிவகாமசுந்தரி தியாகராஜாஅவர்களின் தேசப்பற்றுமிக்கச் செயற்பாட்டிற்காக ‘‘நாட்டுப்பற்றாளர்’’ என மதிப்பளிப்பதில் நாம் பெருமையடைகின்றோம்.

‘‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’’

அனைத்துலகத் தொடர்பகம்.
தமிழீழ விடுதலைப் புலிகள்.

தமிழீழத் தாய்த்திரு நாட்டின் எழில்மிகு வளங்களோடும், தாய்மண்ணின் விடுதலை உணர்வோடும் இரண்டறக் கலந்து கிடக்கும் வடமராட்சியின் பருத்தித்துறையில் அவதரித்து, அந்த மகத்தான மண்ணுக்கே உரித்தான கல்வியால், கலையால், வீரத்தால், விடுதலை உணர்வால் மேலோங்கித் திகழ்ந்த ஓர் அற்புதமான அன்னையை இயற்கை இன்று தன்னோடு அணைத்துக்கொண்டுள்ளது. இயற்கையின் நியதியையும் தாண்டிய பெரு வலியோடு பிரிவுத் துயர் சுமந்து நிற்கும் அனைவரோடும் நாமும் துயரினைப் பகிர்ந்து கொள்வதோடு, தாயாரின் ஆன்மா அமைதி பெறவும் இயற்கையை வேண்டுகின்றோம்.

“ஒரு சிறந்த தாய் ஒரு சிறந்த ஆசிரியை” எனப்படும் தத்துவார்த்த வாக்கியத்திற்கு முழுமையான உதாரணமாகவும், அதன் வழியே வாழ்வின் தடங்களை பொதுவாழ்வின் வரலாறாக்கியும், தமிழ்த்தேசிய இனத்தின் மதிப்புமிகு அடையாளமாக அணியமாக்கப்படுபவர்களில் முதன்மை நிரலில் வாழ்ந்தவருமாக எப்போதும் மதிப்பளிக்கப்படுவார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert