April 25, 2024

தனக்காக உயிர் நீத்த செங்கொடி நினைவிடத்தில் பேரறிவாளன்!

சென்னை– 30 வருடம் கழித்து இன்று பிணையில் வெளியே வந்த பேரறிவாளன், தன்னுடைய தூக்கு தண்டனை இரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி உயிர்நீத்த செங்கொடி நினைவிடத்திற்கு தாயாருடன் சென்று அஞ்சலி செலுத்தினார்.

விடுதலை செய்

முன்னாள் ஒன்றிய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன், முருகன், சாந்தன் நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் உள்ளிட்டோரை விடுதலை செய்ய வேண்டும் என அரசியல் கட்சியினர், மாணவர்கள், திரைத்துறையினர் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தீர்மானம் நிறைவேற்றம்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்த நிலையில், தனக்கு அதிகாரமில்லை என ஆளுநர் அத்தீர்மானத்தை நிராகரித்து, குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் உள்ளது என ஆளுநர் தரப்பில் விளக்கமும் தரப்பட்டது.

தூக்கு தண்டனை

முன்னதாக கடந்த 2011ம் ஆண்டில் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்டோருக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம். இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும்  அரசியல் கட்சிகள், இயக்கங்கள், வழக்கறிஞர்கள் மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் தூக்கு தண்டனையை இரத்து செய்ய வேண்டும் என குரல் கொடுத்தனர்.

மாணவர்கள்

மேலும் சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் சென்னை கோயம்பேட்டில், பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் தூக்கு தண்டனையை இரத்து செய்ய வலியுறுத்தி காலவரையின்றி தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கொடி

அப்போது போராட்டம் உச்சத்தை எட்டிய நிலையில் காஞ்சிபுரத்தை சேர்ந்த செங்கொடி கடந்த 2011ம் ஆண்டு ஓகஸ்ட் 28ம் திகதி காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் முன் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி பேரறிவாளன் உள்ளிட்ட 3பேரின் தூக்கு தண்டனையை இரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தற்கொலை செய்து கொண்டார்.

வைகோ முயற்சி

செங்கொடி தற்கொலை போராட்டக்காரர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது, இந்த நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் முயற்சியால், பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் தூக்கு தண்டனைக்கு எதிராக வாதாடினார்.

உச்சநீதிமன்றம்

அப்போது உச்சநீதிமன்றம் பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் தூக்கு தண்டனையை இரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்றியது. மேலும் பேரறிவாளன் தரப்பில் 2016ம் ஆண்டு தன்னை இவ் வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

பேரறிவாளனுக்கு

இந்த வழக்கானது கடந்த வாரம் நீதிபதிகள் முன் விசாரணைக்கு வந்தபோது ஒன்றிய பாஜக அரசு பேரறிவாளனுக்கு பிணை வழங்கக் கூடாது என்று கடுமையாக எதிர்த்த நிலையில், தமிழ்நாடு அரசு பேரறிவாளனுக்கு பிணை வழங்க வேண்டும் என பல்வேறு காரணங்களை முன்வைத்து. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் பேரறிவாளனுக்கு கடந்த வாரம் பிணை வழங்கி உத்தரவிட்டார்கள்.

புழல் சிறை

இந்த நிலையில் பேரறிவாளன் இன்று சென்னை புழல் சிறையில் இருந்து 30 வருடங்கள் கழித்து பிணையில் வெளியே வந்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய பேரறிவாளன் நன்றி நன்றி என இரு வார்த்தைகள் மட்டுமே சொல்லி விடைபெற்றார். 

புகழ் வணக்கம்

இதனிடையே செய்தியாளர்கள் சந்திப்பிற்கு பிறகு நேராக காஞ்சிபுரம் சென்ற பேரறிவாளன், தன்னுடைய தூக்கு தண்டனைக்காக போராடி, தன் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு உயிர் நீத்த செங்கொடி நினைவிடத்திற்கு தாயாருடன் சென்று செங்கொடி சிலைக்கு மலர் வளையம் வைத்து புகழ் வணக்கம் செலுத்தினார்.

நெகிழ்ச்சி

பிணையில் விடுதலையானவுடன் , தன்னுடைய தூக்கு தண்டனையை இரத்து செய்ய வேண்டும் என போராடி உயிர் நீத்த செங்கொடி நினைவிடத்துக்கு பேரறிவாளன் அஞ்சலி செலுத்திய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert