April 19, 2024

13 சண்டை:அநாதரவாகும் போராட்டங்கள்!

 நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளிலான நடமாடும் சேவை இன்றையதினம் யாழ் மத்திய கல்லூரியில் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்ட நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் போனோரின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்றைய தினம் காலை 10.30 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி முன்பாக காணாமல் போனோரின் உறவுகள் நீதி அமைச்சின் நடமாடும் செயலமர்வில் காணாமல் போனோர் விவகாரத்தை கையில் எடுக்கக்கூடாது என தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீதியே இல்லாத நாட்டில் நீதி அமைச்சு எதற்கு அதற்கு அமைச்சர் எதற்கு, ஆணைக் குழுக்களும் வேண்டாம் ஓ.எம்.பியும் வேண்டாம், காணாமல் ஆக்கப்பட்டவர்களை காணாமல் போனவர்கள் எனக் கூறாதே போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நிகழ்வில் கலந்துகொள்ள வருகை தந்த வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகாராயா சந்தித்து இதிலே பங்கு கொண்டுள்ளவர்கள் உங்கள் பெயர் விபரங்களையும் தொலைபேசி இலக்கத்தையும் தந்தால் அழைத்து உரையாடுவேன் அல்லது அலுவலகத்திற்கும் வர முடியும் என்றார்.

ஆளுநரின் கருத்திற்கு பதிலளித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இதற்கு முன்பிருந்த ஆளுநர்களும் இவ்வாறு தெரிவித்தே பல தடவை அழைத்து ஏமாற்றினரே அன்றி தீர்வு முன்வைக்கப்படவில்லை. எமக்கு ஓ.எம்.பியோ உங்கள் சான்றிதழ்களோ அல்லது இழப்பீடோ தேவையில்லை பிச்சை எடுத்தும் எம்மால் வாழ முடியும் நாம் ஒப்படைத்த உறவுகளை மீட்டுத்தர முடியுமா எனக் கேள்வி எழுப்பினர். 

இந்நிலையில் போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தியமை குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே  நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளிலான நடமாடும் சேவை இன்றையதினம் யாழ் மத்திய கல்லூரியில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட குறித்த நிகழ்வு இன்றும் நாளையும் காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நடமாடும் சேவையில் நீதித்துறை சார்ந்த பல்வேறு அரச திணைக்களங்களில் பொதுமக்கள் சேவை பெறும் வகையில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் நீதி அமைச்சர் அலி சப்ரி, வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  அங்கஜன் இராமநாதன்,நீதி அமைச்சின் செயலாளர் மாயாதுன்னை, வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன் உள்ளிட்ட உயரதிகாரிகள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

வழமையாக முண்டியடித்து போராட்டங்களில் கலந்துகொள்ளும் தமிழ்க் கட்சிகளின் தலைகள் எவரையும் இப்போராட்டத்தில் காணமுடியவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert