April 24, 2024

அதிகாரப்பகிர்வை பெற்றுத்தருமாறு இந்தியாவைக் கோரும் தமிழ்க் கட்சிகள்


தமிழ் பேசும் மக்களுக்கான அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வினை இலங்கை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொடுப்பதற்காக இந்தியாவிடம் ஒருமித்துக் கோரிக்கை விடுப்பதற்கு தமிழ் பேசும் கட்சிகள் இணக்கப்பாட்டை எட்டுவதற்காக சந்திப்பு நடைபெற்று வருகிறது.இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு குளோபல் டவர்ஸ் தனியார் விடுதில் முற்பகல் 10.30 மணிக்கு முக்கிய சந்திப்பில் தமிழ் பேசும் கட்சிகள் ஈடுபட்டதோடு, இந்தியாவிடம் மேற்படி கோரிக்கையை முன்வைக்கும் எழுத்துமூலமான கடித வரைவு தயார் செய்யப்படவுள்ளது.

இந்தக் கூட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்றது. அத்துடன் இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான ரெலோ, புளொட் ஆகியனவும் பங்கேற்றிருந்தன.

மேலும், மனோகணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியனவும் கலந்துகொண்டன.

சம்பந்தன் இன்று நடைபெறும் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இக் கூட்டத்தில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனும் பங்கேற்றதோடு, சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான, .பி.ஆர்.எல்.எப். மற்றும் ஸ்ரீகாந்தா தலைமையிலான தமிழ்த் தேசியக் கட்சி ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இக் கூட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பங்கேற்கவில்லை என்பதோடு அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கூட்டத்தின் பின்னர் கருத்து வெளியிட்ட சி.வி விக்கினேஸ்வரன்,

தமிழர்களின் நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்ளும் வரையில் சட்ட புத்தகத்தில் இருக்கும் 13ஐ நடைமுறைப்படுத்துங்கள் என்பதே எமது கோரிக்கை” எனத் தெரிவித்தார்.

இதேவேளை, கூட்டத்தின் பின்னர் கருத்து வெளியிட்ட ரவூப் ஹக்கீம்,

ஜனாதிபதி செயலணி என்ற பெயரில் சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை கபளீகரம் செய்யும் செயற்பாட்டை முற்றாக முடிவுக்கு கொண்டுவர 13ஐ அமுல்படுத்த வேண்டியது அவசியம் எனத் தெரிவித்தார்.

இதேவேளை, கூட்டத்தின் பின்னர் கருத்து வெளியிட்ட மனோ கணேசன்,

13 ஐ  நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டிய பிரதான கடமைப்பாடு இந்தியாவிற்கு உண்டு எனத் தெரிவித்தார்.