März 28, 2024

இலங்கை கலவர பூமியாக மாறும் அபாயம்!! ஆளும் தரப்பு எம்.பி தகவல்

இன்னும் இரண்டு வாரங்களில் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு முடிந்து பூச்சியமாகி, நாட்டில் மிகப் பெரிய பஞ்சம் ஏற்படும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe) தெரிவித்துள்ளார்.

பன்னிப்பிட்டிய வீர மாவத்தையில் ஐக்கிய பொதுச் சேவை சங்கத்தின் புதிய கட்டடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று கலந்துகொண்ட போது, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் கூறியுள்ளார். இதன்போது மேலும் பதில் வழங்கிய அவர்,

“அடுத்த சில வாரங்களில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிக்க முடியாத நிலைமைக்கு அரசாங்கம் மாறும். இதனை அடுத்து நாட்டிற்குள் கலவரமான நிலைமை ஏற்படும்.

20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு பின்னர், பிரதமர் தலைமையிலான அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்களும் அரச தலைவரின் அடிமைகளாக மாறியுள்ளனர்.

தனி நபர் ஒருவர் நாட்டை ஆட்சி செய்யவே 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது” என்றார்.

இதன்போது ஏழு மூளைகளைக் கொண்ட நிதியமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது. அவரால், நாட்டை கரை சேர்க்க முடியுமா என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள விஜயதாச ராஜபக்ச, நிதியமைச்சர் ஏழாலாம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றுள்ளதால், அவரை ஏழு மூளை கொண்டவர் கூறியிருக்கலாம் என தெரிவித்துள்ளார். ஆனால், நாட்டை கரை சேர்க்க அது போதுமானதல்ல என பதில் வழங்கியுள்ளார்.