April 20, 2024

இ.போ.ச வுடன் பேசி முடிவை எட்டமுடியவில்லை!

புதிய நெடுந்தூர பேருந்து நிலையத்திற்கு தாம் ஒருபோதும் வர மாட்டோமென இலங்கை போக்குவரத்து சபை விடாப்பிடியாக நின்ற காரணத்தால் இன்று இடம்பெற்ற கூட்டம் எந்தவித முடிவுமின்றி நிறைவுக்கு வந்ததாக யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.யாழ்.மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கான பேருந்து நிலையம் ஒன்று இ.போ.ச மத்திய பேருந்து நிலையத்திற்கு அண்மையாக புதிதாக அமைக்கப்பட்டது. ஆனாலும் அங்கிருந்து தாம் சேவையில் ஈடுபட மாட்டோம் என இலங்கை போக்குவரத்து சபை மறுத்து வருகிறது. இந்நிலையில் இ.போ.ச அங்கிருந்து சேவையில் ஈடுபட்டால் மாத்திரமே நாமும் அங்கிருந்து சேவையில் ஈடுபடுவோம் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அதனால் புதிய நெடுந்தூர பேருந்து நிலையம் பயன்பாடு இல்லாமல் காணப்படுகிறது.

இந்நிலையில் இந்தப் பிரச்சினை தொடர்பாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தலைமையில் ஆளுநர் அலுவலகத்தில் இன்று காலை  கூட்டமொன்று இடம்பெற்றது.

காலை கூட்டம் ஒரு முடிவுக்கு வராத நிலையில் , ஒரு கட்டத்தில் வடமாகாண ஆளுநர் , “ மக்களின் வரிப்பணத்தை வீணடிக்க முடியாது. தனி நபர் , குழுக்களின் சுயலாபத்திற்காக அதனை தேடுவாரற்று விட முடியாது“ என கூறி நல்லதொரு முடிவாக எடுங்கள் என கூறி விட்டு கூட்டத்தை விட்டு வெளியேறி சென்றார். அதனை தொடர்ந்து சிறிது நேரத்தில்
முதல்வரும் வெளியேறியுனார்.

சுமார் ஒரு இரு மணி நேரமாக ஆளுநர் அலுவலகத்தில் இ.போ.ச பிரதிநிதிகள் தமக்குள் கலந்துரையாடி இருந்த போதிலும் , எந்த ஒரு தீர்மானமும் எட்டப்படவில்லை.

இந்தக் கலந்துரையாடலில் யாழ் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன், யாழ் மாநகர ஆணையாளர், நகர அபிவிருத்தி சபை, இலங்கை போக்குவரத்து சபை, தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர் போன்றவர்கள் பங்கேற்றிருந்தனர்.