April 19, 2024

மாவீரர் நாளில் அரச படைகளின் அராஜகம்- சஜித் அணி கடும் கண்டனம்! 

sharethis sharing button


மாவீரர் நாளான நேற்று வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் மற்றும் காவற்துறையினர் புலனாய்வாளர்கள் மேற்கொண்ட அராஜகங்களைப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வன்மையாகக் கண்டித்துள்ளது.

“இது ஜனநாயக நாடு எனில் போரில் இறந்தவர்களை அமைதியான முறையில் நினைவேந்த அவர்களின் உறவுகளுக்கு உரித்துண்டு. அதை ஆயுதமுனையில் அடக்க முயல்வது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கில் ஆயுதப் படைகள் நடந்துகொண்ட விதம் நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் இராணுவ ஆட்சிக்கு இதுவொரு சிறந்த எடுத்துக்காட்டு” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ ஊடகங்களிடம் தெரிவித்தார்.

“வடக்கில் மக்களை மட்டுமல்ல  ஊடகவியலாளரையும் படையினர் கடுமையாகத் தாக்கியுள்ளனர் என்று ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம். அதேவேளை, சிலர் கைதுசெய்யப்படும் உள்ளனர். இந்த அராஜக நடவடிக்கைகளைக் கண்டிக்கின்றோம். இறந்தவர்களை நினைவேந்த அனைவருக்கும் உரிமை உண்டு. இதில் இன, மத, மொழி வேறுபாடு காட்டக்கூடாது” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார . ஊடகங்களிடம் தெரிவித்தார்.

 

“நாட்டில் தற்போது நடப்பது காட்டாட்சி என்பதை வடக்கு, கிழக்கில் நேற்று அரச படைகள் நடந்துகொண்ட விதம் எடுத்துக்காட்டுகின்றது. போரில் இறந்தவர்களை அமைதியாக நினைவேந்த பல இடங்களில் நீதிமன்றமே அனுமதி வழங்கிய நிலையில் அதையும் மீறி இராணுவத்தினருடன் சேர்ந்து பொலிஸார் நடந்த கொண்ட விதத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம். நாட்டில் இன ரீதியில் – மத ரீதியில் – மொழி ரீதியில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமெனில் தமிழர்களுக்கும் அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும். அவர்களை உள ரீதியில் மேலும் காயப்படுத்தக்கூடாது” என்று  ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஊடகங்களிடம் தெரிவித்தார்.