April 23, 2024

பேரொளி பிறந்த நாள்.

கார்த்திகை 26.
தமிழினக் காவலன்,
பிரபாகரன் பிறந்த நாள்.

தமை ஈந்த தமிழ்ச் சுடராம்
எங்கள் கார்த்திகை தீபங்களின்
தலைவனுக்கு இன்று அகவு
அறுபத்தி ஏழு.

ஆகாய கங்கையை
அன்னாந்து பார்த்துக்
காத்துக்கிடந்த
பாலை வனச்சோலைபோல்,
ஆயிரம் ஆண்டுகளாய்,
ஈழத் தாய்,
ஏக்கத்தோடு
காத்திருந்து,
பெற்றெடுத்த
எங்கள் வீரத் தலைவன்
பிரபாகரன் பிறந்த நாள்.

காலக் கதிரவன்
கண் மூடித் தூங்கியதாய்
எல்லோரும் எண்ணி
ஏமாந்திருந்த வேளையிலே,
ஒரு இனத்தின்
அடையாளச்சின்னமாய்,
அடிமையிருள் அகற்ற வந்த
ஆதவனாய்,
வல்வெட்டித்துறைக்குள்
வந்துதித்த
எங்கள் விடுதலை
வேந்தன் பிறந்தநாள்.

தாழ்ந்த தமிழினத்தை
தூங்காதே என்று
தட்டி எழுப்பி,
தூக்கி நிறுத்தி,
எதிரியின் கையில் உள்ள
ஆயுதத்தை நீயும்
ஏந்து என்று,
சொல்லித்தந்த
தூய விடுதலைச்
சுடர் ஒளி
தோன்றிய நாள் இன்று.

அணு வல்லரசுகளையே
அண்ணார்ந்து பார்க்க வைத்த
அவதார புருசன்
பிறந்த நாள்.

வீரத்தின் இலக்கணத்தை
விடுதலைப் புலிகள் என்று
பாருக்கு
பறை அறைந்த
பகலவன் பிறந்தநாள்.

தடுமாறித் தவித்த
தமிழர் பரம்பரைக்கு
திசை காட்ட வந்த
செங்கதிரோன்
பிறந்த நாள்

எம் இனப் பெண்களின்
இன்னலை அகற்ற
மின்னலாய்த்தோன்றிய
விடி வெள்ளி பிறந்தநாள்.

உயிர்ப்பின் ஊற்றாய்,
உண்மையின் கீற்றாய்,
இரும்பு இதயம்கொண்ட
கரும்புலிக் கூட்டத்தின்
காதலன் பிறந்த நாள்.

நிதானம் இழக்காமல்
சர்வதேச
நெருப்புச் சுவாலைக்குள்
நிமிர்ந்து விளையாடிய,
எங்கள் தேசத்தின்
ஜோதி பிறந்த திருநாள்.

எங்கள் தலைவனை
எண்ணி ஏங்கும்
இதயங்களின் துடிப்பை
அறிந்திருக்கும் ஆற்றலே,
பேராற்றலே,
எப்போது நீ பேசுவாய்.

வன்னி வனப் பகுதியிலே
என்நாளும் வந்து நின்று,
ஏழிசையில் பாட்டுக்கட்டி,
இறகுகளில் சலங்கை கட்டி
அசைந்து, அசைந்து,
இசைந்து மகிழ்ந்து
ஆடிப்பாடிய
வண்ண மயில்களே!
மானம் உடைத்தான
மணிப் புறாக்களே!!
கூவிக் குரல் கொடுத்த
குயிலினக் கூட்டங்களே!!!
நீங்கள் இன்னும்
உயிரோடு இருக்கின்றீர்களா?
நாடு தேடிப் போரிட்ட
நல்லவர்கள் எங்கேயென்று
தேடித் தேடிப் பார்க்கின்றீர்களா?

தலைவன் வார்த்தை
உங்கள் காதுகளில்
கேட்கின்றதா?
இன்னும் நீங்கள்
ஒன்றாகத்தான் இருக்கின்றீர்களா?
இல்லை
நீங்களும் ஆளுக்கொரு
பக்கமாக
ஆதாயம் தேடித்திரிகின்றீர்களா?

அத்தி மரக் கிளைகளிலே
அழகழகாய் கூடு கட்டி
தொங்கி விளையாடிவந்த
தூக்கணாம் குருவிகளே!
சங்க நாதமிட்ட
எங்களினக் காவலர்கள்
எங்கு போனார்கள் என்று
ஏக்கத்தோடு
தேடி அலைகின்றீர்களா?
இல்லை எதிரியோடு இணைந்து
ஈனப்பிழைப்பு நடத்துகின்றீர்களா?

தாயகக் காடுகளே!
தமிழ் ஈழ விதை நிலமே!!
போய் வருகிறோமென்று
புன்முறுவல் பூக்கள் சிந்தி,
புதுப் புறநாநூற்றுப் புத்தகத்தின்
முன்னுரையில்
கையெழுத்திட்டுச்சென்ற
கரிகாலன் தோழர், தோழியரின்
அசைவினைத் தேடி இன்றும்
அலைகின்றீர்களா?
இல்லை நீங்களும்
ஆளுக்கு ஆள்
தலைவர்களாகி விட்டீர்களா?

காற்றே! கடலே!
அலையே! மலையே!
நித்தமும் உங்களோடு
நெருங்கிக் கலந்திருந்த
நேசத்துக் குரியவரின்
வார்த்தை ஒலிகளை
நீங்களுமா மறந்து விட்டீர்கள்.
இல்லை
மறுபடியும் கேட்க
விரும்புகின்றீர்களா?

வீரத்தையும், தீரத்தையும்,
வித்துவப் பயிற்சிகளையும்
உங்கள் மடியில் வைத்தே
ஊட்டி வளர்த்த
வீரத் திரு நாடே!
விடுதலைப் புலிகளை
உங்களால்
மறந்திருக்க முடியுமா?

இனிக்கும் இரவே!
இனிய பகல் வேளையே!
இளந் தென்றல் மாலையே!
இயற்கையே! இன்பமே!!
எம் இனத் தோழர்கள்
இளந் தமிழ்ச் சூரியனாய்
மீண்டு எழுந்து வருவார் என்று
மேதினிக்கு புகட்டவா
என்நாளும் நீங்கள்
எழுந்து வருகின்றீர்கள்.

பச்சை வண்ண வயல்களே!
பசுமை படர்ந்த கொடிகளே!
கார்த்திகைப் பூந் தளிர்களே!
கரிகாலன் தொட்டணைத்த
கருங்காலி மரங்களே!
என்றோ ஒருநாள்
புண்ணிய பூமி
பூத்துக் குலுங்குமென்ற
நம்பிக்கையோடா
காத்துக் கிடக்கிறீர்கள்?

தமிழீழம் தேடும்
தாயக உறவுகளே!
தங்க மணித் திருநாடே!
அறம் மறுபடி
வெல்லுமென்ற ஆண்றோரின்
வாக்கில் உரம் பெற்றவர்களே!
சத்தியமும் ஜீவனும்
சாவதில்லை என்பது
உண்மையானால்,
உங்கள் தோழர்களும்,
தோழிகளும்
இன்னொரு பிறப்பெடுத்து
இரும்பு உடை தரித்து
எழுந்து வருவார்கள்
என்பதை நம்புங்கள்.

ஆன்மாவுக்கு
அழிவில்லை என்பது
ஆண்றோர் வாக்கு.

மனிதநேய இதயங்களே!
கல்லறை தீபங்களை
காரிருள் மூடியதால்
கவலைப் படுகின்றீர்களா?
ஒளியாக உதித்தவன்
ஒருபோதும் சாவதில்லை,
அதற்குள் இருந்துதான்
ஆதவன் உதிப்பான்.
அகிலத்தை இணைப்பான்.

பிணம் தின்னும் கழுகுகளின்
பிடறியைப் பிடித்துக் குலுக்கி
வெளியேற்ற
காலக் கன்னியவள்
கரிகாலன் ஆன்மாவை
கருத்தரிக்க வைப்பாள்.

இவ்வுலகில்
இன்னும் எத்தனையோ
இளஞ் சூரியர்கள்
இருட்டறையில் இருந்து
புறப்படுவார்கள் என்பதை
இயற்கை எடுத்தியம்பும் வரை
பொறுத்திருப்போம்.

சாவு ஒரு போதும்
சரித்திர நாயகர்களை
சவக் குழியுள்
மூடிவைக்காது.

தாயக நிலப்பரப்பில்
சேனை படை கொண்டு
வீறு நடை போட்ட
பாயும் புலிப்படையின்
பாதங்கள் பட்ட தடங்கள்
இன்று அழிந்திருக்கலாம்,
மறைந்திருக்கலாம்.
அவர்கள் ஒவ்வொருவரின்
இரத்தமும், சதையும்,
உணர்வும்,
அந்த மண்ணில்
கலந்திருப்பதை
எந்த ஏகாதிபத்தியத்தாலும்
எடுத்துத் துடைத்து,
தனித்துப் பிரித்து,
கந்தப்பார்க்க முடியாது.

தாயகத் தளத்தில்
எம்மின எதிரியோடு
ஒழிந்து, மறைந்து நின்ற
உலக வல்லரசுகளை,
தனித்து,
எதிர்த்துப் போரிட்டு,
வீரக் குருதியை
விதை நிலத்தில் இறைத்து,
அக்கினிக்கு இரையாக்கி,
அதிலிருந்த சாம்பலையும்
அன்னை மண்ணில் கரைத்து,
விம்மிப் புடைத்திருக்கும்
வீர வன்னித் திரு நிலமே!
உன்னை மிதித்து
உருக்குலைய
வைத்திருக்கும்
எங்கள் பகைவர்களை
இன்னும்
எத்தனை காலம்
விட்டு வைப்பாய்?

என்றோ ஒருநாள்
அன்னியனைச் சங்கறுக்க
ஆவலோடு
காத்திருக்கிறாய்
என்பதை
நாங்கள் நம்புகிறோம்.

முப்பது வருடங்களாய்
அற்புதப் போராளிகளை
உற்பத்தி செய்த
வளம் நிறைந்த
வன்னி மண்ணின்
திரு முகத்தை
மாற்றி அமைக்க
முடியாத
சிங்கள ஆட்சியினர்,
உலக வல்லரசுகளை
உதவிக்கு
அழைத்து அல்லவா
உங்களோடு
தாயமாடினார்கள்.

எதிரிகளிடம் இருந்து
எத்தனை தடவைகள்
உயிர் தப்பி வந்தீர்கள்.
நண்பர்களின்
நயவஞ்சகத்தால்
அல்லவா
நலிவடைந்தீர்கள்.

நீங்கள்
மாண்டும் மடியாமல்,
மீண்டும் பிறப்பெடுத்து
மேதினிக்கு வருவதை
யார் தடுப்பார்.
விடுதலையே
எங்கள்
வேங்கைகளை
அழைத்துவா.
பொய்யுரைக்கும்
புல்லுருவிகளுக்கு
புதுப்பாடம் புகட்ட
புறப்பட்டு வா.
வாழ்க எங்கள்
தலைவர் நாமம்.

ஆக்கம் கவிஞர் ராஜவாணன்