März 29, 2024

மீண்டும் இரசாயன உரம்: கிழிந்து தொங்கும் பேரரசர்!

இலங்கையில் சில மாவட்டங்களில் பெய்த மழையினால் விவசாயிகள் முன்பு பயன்படுத்திய கரிம உரங்கள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், விவசாயிகளுக்கு வழங்குவதற்காக  இருப்பில் உள்ள இரசாயன உரங்களை  விவசாய அமைச்சு பெற்றுக்கொள்ளவுள்ளது.

அண்மைய நாட்களில் பெய்த மழையினால் நுவரெலியா, பதுளை மற்றும் பண்டாரவளை மாவட்டங்களில் மரக்கறி மற்றும் பழ உற்பத்தியாளர்கள் பயன்படுத்திய கரிம உரங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் வட்டாரம் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த மாவட்டங்களில் நெல் விதைப்பில் ஏற்பட்டுள்ள சேதத்தை அதிகாரிகள் இன்னும் மதிப்பிடவில்லை.

விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, குறிப்பாக மரக்கறி விவசாயிகளின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார். „நாங்கள் அவசர நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால், காய்கறி விலைகள் கடுமையாக உயர்வதைக் காணலாம், என்று அவர் கூறினார்.

இந்த நிலைமை குறித்து விவசாய பணிப்பாளர் நாயகத்துடன் கலந்துரையாடியதாக அமைச்சர் கூறினார். அவசர நடவடிக்கையாக, உர இறக்குமதியாளர்களின் சேமிப்பு கிடங்கிலிருந்து பூஞ்சைக் கொல்லி (fungicide) மற்றும் இரசாயன உர இருப்புகளை  வைத்து பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அவற்றை  பெறுவதற்கு  ஏற்பாடு செய்ய   பீடை கொல்லிப்   பதிவாளருக்கு உத்தரவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் நெல் விவசாயிகளின் பயிர்கள் சேதம் அடைந்திருந்தால் அவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு விவசாய காப்புறுதிச் சபைக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

இதேவேளை, நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பான செயற்திட்டத்தை தன்னிடம் முன்வைக்குமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அதிகாரிகளிடம் கேட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் உதித் கே ஜயசிங்க தெரிவித்தார்.