April 25, 2024

மாகாணசபை தேர்தலை நடாத்துமாறு இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழுத்தம்!

இலங்கையில் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ள நிலையில், நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை நடத்த ராஜபக்ஸ அரசாங்கம் விரைந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இந்திய தரப்பில் இருந்து வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் தமிழர் தாயகம் உள்ளிட்ட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீனா பெருமளவில் முதலீடுகளை செய்து வருகின்றமை குறித்து அயல்நாடான இந்தியா கரிசனையை வெளியிட்டு வருகின்றது.

அத்துடன், இலங்கை தமிழ் மக்களின் இன பிரச்சினை உள்ளிட்ட அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் வகையில் 13 ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும், மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறும் இந்தியாவினால் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது.

இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகளால் இந்த அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையிலேயே நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் நேற்றைய தினம் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளனர்.

இந்த கலந்துரையாடல் குறித்து டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர், இரு தரப்பினரும் நெருக்கமாக செயற்படுவது குறித்து கலந்துரையாடியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.