April 23, 2024

கேரளத்திற்கு – பழ. நெடுமாறன் கண்டனம்

பேபி அணையை வலுப்படுத்த கேரளம் முட்டுக்கட்டை – உச்சநீதிமன்ற ஆணைக்கு எதிராக நடந்துகொள்ளும் கேரளத்திற்கு – பழ. நெடுமாறன் கண்டனம்

பெரியாறு அணைப் பகுதியில் அமைந்திருக்கும் பேபி அணைக்கு அருகேயுள்ள 15 மரங்களை வெட்டுவதற்கு கேரள வனத்துறை அனுமதி அளித்தமைக்காக தமிழக முதல்வர் நன்றி தெரிவித்து கேரள முதல்வருக்குக் கடிதம் எழுதியிருந்தார். இதன்மூலம் பேபி அணையை மேலும் வலுப்படுத்த முடியும் என அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

 

இத்தகைய அனுமதி அளித்தமைக்காக கேரள வனத்துறை அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டுமென கேரள காங்கிரசுக் கட்சித் தலைவரும் மற்றும் சில கட்சிகளின் தலைவர்களும் கண்டன அறிக்கை வெளியிட்டனர். உடனடியாக அந்த அனுமதியை கேரள அரசு திரும்பப் பெற்றுக்கொண்டதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

 

2006ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தின் ஆயம் அளித்தத் தீர்ப்புக்கு எதிராக கேரள அரசின் இந்த நடவடிக்கை அமைந்திருக்கிறது. அந்தத் தீர்ப்பில் பின்வருமாறு திட்டவட்டமாக குறிப்பிடப்பட்டுள்ளது. “பெரியாறு அணையில் நீர் தேக்கி வைக்கும் உயரத்தை 142 அடியாக உயர்த்தினால் ஆபத்து ஏற்படும் என்ற கருத்திற்கு எந்த அடிப்படையும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் கேரளம் இதில் முட்டுக்கட்டைப் போடும் வகையிலேயே நடந்துகொள்கிறது. பெரியாறு அணையை வலுப்படுத்த ஒன்றிய நீர்வள ஆணையம் தெரிவித்த அறிவுரைகளை ஏற்று சில பணிகளை தமிழக அரசு செய்துவிட்டது. மீதமுள்ள பணிகளைச் செய்வதற்குக் கேரள அரசு அனுமதிக்க மறுக்கிறது. அணையின் அனைத்துப் பகுதிகளும் பாதுகாப்பாகவே உள்ளன. பேபி அணையை பலப்படுத்தப் பணிகளை செய்யவிடாமல் கேரளம் தடுப்பதற்கு எந்தவித காரணமும் இல்லை. எனவே, பேபி அணையை மேலும் பலப்படுத்த தமிழக அரசுக்கு நாங்கள் அனுமதி அளிக்கிறோம். அதற்குக் கேரளம் ஒத்துழைப்பை அளிக்கவேண்டும்” எனக் கூறியுள்ளது.

 

பேபி அணையை வலுப்படுத்தினால் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளதை நிறைவேற்றவிடாமல் தடுப்பதற்காகவே கேரளத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து முற்றிலும் பொய்யான கூக்குரலை எழுப்புகின்றன. இவ்வளவிற்கும் இந்தக் கட்சிகள் அனைத்தும் தேசிய ஒருமைப்பாடு பற்றிப் பேசும் அகில இந்தியக் கட்சிகளே ஆகும். இந்தப் போக்கு தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிர் விளைவையே ஏற்படுத்தும் என எச்சரிக்கிறேன்.

 
அன்புள்ள,
(பழ.நெடுமாறன்)