März 28, 2024

விடமாட்டோம்!! இறுதி மூச்சுவரை போராடுவோம்!!

Kardinal Albert Malcolm Ranjith, Erzbischof von Colombo (Sri Lanka), am 8. Februar 2014 im Vatikan. Foto: Romano Siciliani/KNA

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைத் தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொண்டு வரும் போராட்டத்தில் நாங்கள் கொல்லப்பட்டாலும் தொடர்ந்தும் போராடுவோம் என்று கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்தார்.தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் முன்கூட்டிய தகவல்கள் கிடைக்கப் பெற்ற போதும் பாதுகாப்பு தரப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரியும் தங்களது பாதுகாப்பினை மட்டும் உறுதி செய்து கொண்டனர் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்த கட்டுவாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரின் வீட்டுக்குச் சென்ற போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து மேலும் தெரிவித்த அவர்,

தாக்குதல் நடைபெற்ற போது மைத்திரிபால சிறிசேனவும், பாதுகாப்பு தரப்பினரும் தங்களது பாதுகாப்பினை மட்டும் கருதிற் கொண்டு செயற்பட்டதாகக் குறிப்பிட்டார்.

மேலும் முன்னாள் ஜனாதிபதியும், பாதுகாப்புப் படையினரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து தங்களுக்கு இடையே மட்டும் கடிதங்களை பரிமாறிக் கொண்டனர் எனவும் தெரிவித்தார்.

இந்த அனைவரும் தண்டிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளதாகத் தெரிவித்த அவர், இந்த  ஆணைக்குழுவுக்காக 600 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படாத காரணத்தினால் இந்தப் பணம் விரயமாகின்றது என்றும் தெரிவித்தார்.

எங்களில் சிலர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன் ஆஜராவது அல்லது எங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படுவது நியாயமில்லை என்றும் நாங்கள் எங்கள் சந்தேகங்களை வெளிப்படுத்தும்போது, எம்மீது அரசியல் முத்திரைகளை குத்துவது நியாயமற்றது எனவும் குறிப்பிட்டார்.